You Are Here: Home » Featured, VIP Meet » “இந்த சீனுக்கு தியேட்டர்ல விசில்! இந்த சீனுக்கு கிளாப்ஸ்!! தலைவருக்கு உடனே ஃபோனை போடு” — எந்திரன் & சிவாஜி படங்களின் எடிட்டர் திரு.ஆன்டனியுடன் ஒரு சந்திப்பு!

மது தளத்தின் தீபாவளி சிறப்பு பதிவு இது. நமது வாசகர்களுக்கு சற்று தாமதமான தீபாவளி பரிசு. தமிழ் திரையுலகில் முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்களில் ஒருவர் எடிட்டர் ஆன்டனி. முன்னணி நடிகர்கள் மற்றும்  இயக்குனர்களின் படங்களில் நிச்சயம் இவரது பங்களிப்பு இருக்கும். ஹை-கிளாஸ் மற்றும் மாஸ் படங்களில் இவர் ஒரு தவிர்க்க இயலாத சக்தி. (சரியாக யூகித்த நம் தள வாசகர் & நண்பர் ராமராஜனுக்கும் ராஜாவுக்கும் ஒரு சபாஷ்!)

ஒரு படத்தின் வெற்றியில் எடிட்டரின் பங்கு மிக மிக முக்கியமானது. படத்தின் விறுவிறுப்பிற்கும், கன்டின்யூட்டிக்கும் எடிட்டரது பங்களிப்பு மிக மிக அவசியமானது. காட்சிகளை ரீ-ஷூட் செய்யாமலே, இருப்பதை கொண்டே - தொய்வான ஒரு படத்தை - விறுவிறுவென வேகமாக நகரும் படமாக மாற்ற இவர்களால் முடியும். அதே சமயம், இயக்குனர் சுட்டுத் தள்ளும் அளவுக்கு அதிகமான காட்சிகளை வெட்டி, அவற்றை இரண்டரை மணி நேரத்துக்குள் கொண்டு வரும் மிகப் பெரிய பொறுப்பு இவர்களுடையது.

அந்த வகையில், சிவாஜி & எந்திரன் படத்தின் விறுவிறுப்பிற்கு மிகவும் உதவியவர் ஆன்டனி என்றால் மிகையாகாது. சூப்பர் ஸ்டாரின் அன்புக்கு பாத்திரமானவர்களில் ஒருவர். அவருக்கு நெருக்கமானவர்களுள் ஒருவர்.

வாழ்க்கையில் வெற்றி பெற இலக்கை நோக்கி அலைந்து திரிந்து போராடுபவர்கள் ஒருவகை. தங்களை தேடி வாய்ப்பு வரும்போது அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு மேலே ஏறி வருபவர்கள் ஒரு வகை. நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் அதில் கடினமாக உழைப்பது முக்கியம். தலைவரின் சூப்பர் பன்ச்களில் ஒன்றான ‘கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது’ என்பதன் நேரடி உதாரணம் திரு.ஆன்டனி.

ஆன்டனி கடந்து வந்த பாதை - நமக்கு சொல்லும் பாடம்!

சென்னை கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்த இவர், எடிட்டிங் துறைக்கு வந்தது ஒரு சுவாரஸ்யமான விஷயம். லட்சியம் என்று எதுவுமின்றி, மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்த இவருக்கு இருந்த ஒரே ஆர்வம் படம் வரைவது.

படம் வரையத் தெரிந்தால் கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்வது சுலபம் என்பதை கேள்விப்பட்ட இவர், ஒரு அனிமேஷன் நிறுவனத்தில் சேர்ந்தார். அனிமேஷன் கிளாஸ் மாலை தான். அப்போது தான் கல்லூரியை முடித்திருந்தபடியால், காலை ஒரு கூரியர் நிறுவனத்தில் கௌரவம் பார்க்காது கூரியர் பாயாக வேலைக்கு சேர்ந்தார் இவர். பகல் முழுக்க கூரியர் வேலை. மாலை கிளாஸ். இது தான் இவரது தொடக்கம். (படித்துகொண்டே வேலை பார்க்க யோசிப்பவர்கள் சற்று கவனியுங்கள்!). “அனிமேஷன் படிச்சா கூடவே எடிட்டிங்கும் கத்துகிட்டா நல்லாயிருக்கும்”னு சொன்னதை கேள்விப்பட்டு, ஒரு கம்பெனியில் மூன்று நாட்கள் எடிட்டிங் கற்றுக்கொண்டார். ஆனால், அங்கு தொடர்ந்து இவரை அவர்கள் வைத்துக்கொள்ளவில்லை. எடிட்டிங் கற்றுகொள்வது தான் முக்கியம். பணம் அல்ல என்பதை குறிக்கோளாக கொண்டு அதன் பிறகு ‘எடிட் பாயிண்ட்’ என்ற நிறுவனத்தில், சம்பளமின்றி வேலைக்கு சேர்ந்தார். எடிட்டிங்கில் எப்படியும் நிபுணத்துவம் பெறவேண்டும் என்கிற வெறியில் 24 மணிநேரமும் அங்கேயே கிடந்தார். அந்த நேரங்களில் அவர் தூங்குவது ஒரு நாளைக்கு ரெண்டு அல்லது மூன்று மணிநேரம் தான். எடிட்டிங்கில் மிகவும் முக்கியமான ஏவிட் மெஷினில் இவரே உட்கார்ந்து இவராகவே எடிட்டிங்கின் அனைத்து நுட்பங்களையும் கற்றுக்கொண்டார். இவரது திறமையை பார்த்த அந்நிறுவனத்தினர் இவருக்கு அங்கேயே வேலை கொடுத்தனர். பிறகு அங்கிருந்தபடியே விளம்பரப் படங்கள், டாகுமெண்டரி இதற்க்கெல்லாம் எடிட்டிங் செய்தார். விளம்பரப் படங்கள் பலவற்றை இயக்கும் இயக்குனர் ராஜீவ் மேனன் மூலமாக கௌதம் மேனனின் நட்பு கிடைத்தது. அங்கு தான் இவரது திரையுலக பயணம் துவங்கியது.

அது குறித்து திரு. ஆன்டனியே கூறுகிறார்… “ஒரு நாள் கௌதம் மேனன், என்கிட்டே அவசரமா வந்து, ஆடியோ ரிலீசுக்கு டயமாச்சு. ‘காக்க…காக்க…’ படத்தில் வரும், ‘என்னை கொஞ்சம் மாற்றி’ சாங்கை எடிட் பண்ணி தரச் சொன்னார். நான் செஞ்சு கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடிக்கவே, முழு படத்தையுமே என்னை எடிட் செய்ய சொன்னாரு. So, ‘காக்க…காக்க…’வில் ஆரம்பித்து ‘சிவாஜி…எந்திரன்’ என இதுவரை 60 க்கும் மேற்பட்ட படங்களை முடித்துவிட்டேன்.”

ஆன்டனி அவர்களின் கதையை கேள்விப்பட்டவுடன் நமக்கு - “சிறியது தானே வளர்ந்து பெரியதாகிறது… அது தானே பின்னர் பிரம்மாண்டமாகிறது… !” - என்று தலைவர் கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது.

‘ஏதோ வந்தோம்… எடிட்டிங் கற்றுகொண்டோம்’ என்பதோடு நில்லாமல், அதிலேயே உடல், பொருள், ஆவி என்று தன்னை திரு.ஆன்டனி அர்ப்பணித்துக் கொண்டதன் விளைவு தான் இன்றைக்கு அவர் ருசிக்கும் வெற்றிக் கனி. உழைப்பின் காய் என்றுமே கசப்பானது. ஆனால் அதன் கனியோ மிக மிக இனிப்பானது.

மிக மிக பரபரப்பான மனிதர்

ஆன்டனி அவர்களை எனக்கு கடந்த நான்காண்டுகளாக தெரியும் என்றாலும், அவரிடம் அதிகம் பேசியதில்லை. இயல்பிலேயே அவர் மிகவும் எளிமையான மனிதர். தான் ஒரு வி.ஐ.பி. என்கிற எண்ணமே துளியும் அற்றவர். ஆகவே, எங்காவது பார்த்தால், ஒரு ‘ஹாய்’ சொல்லி கைகுலுக்குவதோடு சரி. சில முறை, வாழ்த்து எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியிருக்கிறேன். மற்றபடி தளத்தின் இந்த பேட்டிக்காக - நீண்ட நாட்கள் கழித்து - அவரிடம் பேசினேன்.

சுமார் ஒரு டஜன் முன்னணி ஏ-கிளாஸ் படங்களின் எடிட்டிங் பணிகளை தற்போது கவனித்து வரும் இவர், தமிழ் சினிமாவின் மிக மிக பரபரப்பான மனிதர் என்றால் மிகையாகாது. தான் இருக்கும் பிசியான சூழ்நிலையிலும் நமது தளத்தின் பேட்டிக்கு ஒப்புக்கொண்டார். “சூப்பர் ஸ்டாருடன் நீங்கள் பணிபுரிந்த அனுபவத்தை நம் தள வாசகர்கள் & சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்… ” என்று கேட்டவுடன், இரண்டொரு நாட்களில் அப்பாயின்மென்ட் கொடுத்தார்.

முன்னதாக ஆன்டனி அவர்களின் அப்பாயின்மென்ட் இறுதியானவுடன் நண்பர் (மாணவர்) ரோபோ சத்யா & விஜய் ஆண்ட்ரூஸ் இருவரையும் அழைத்து செல்வது என்று முடிவு செய்து, அவர்களிடம் அவர்கள் விருப்பத்தை கேட்டேன். இருவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். விஜய் ஆண்ட்ரூஸ் எடிட்டிங்கில் தீவிர ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் துறை சார்ந்த ஒரு உச்சம் தொட்ட மனிதரை சந்திப்பதில் அவருக்கு அலாதி பிரியம்.

குறிப்பிட்ட நாளில் மாலை 7 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆன்டனி அவர்களின் அலுவலகத்துக்கு மூவரும் சென்றோம்.

“எங்கேயிருந்து வர்றீங்க?” என்று அலுவலகத்தில் கேட்க, நமது விசிட்டிங் கார்டை கொடுத்தோம். “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.”  என்று கூறியவர்கள், சிறிது நேரத்தில், “சார் உங்களை கூப்பிடுறாரு. எதிர்புறம் இருக்குற பில்டிங்ல இருக்காரு” என்று, எதிர் வீட்டை கைகாட்டினார்கள்.

நம் எண்ணத்திற்கு நேர்மாறாக

எடிட்டர் ஆன்டனி என்றால், மிகவும் டென்ஷனுடன் கம்ப்யூட்டர் மற்றும் எடிட்டிங் சூட்டில் உட்கார்ந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டே போனோம். ஆனால் அவர் அந்த வீட்டின் போர்டிகோவில், நண்பர்களுடன் நின்றுகொண்டே காரம்போர்டு ஆடிக்கொண்டிருந்தார்.

நம்மை அறிமுகப்படுத்த்க்கொண்டு, “என்ன சார்… கம்ப்யூட்டர் முன்னாடி டென்ஷனா உட்கார்ந்திருபீங்கன்னு நினைச்சி வந்தா, இவ்ளோ காஷுவலா இருக்கீங்க?” என்று நமது வியப்பை கேள்வியாக கேட்டோம்.

“அப்பப்போ… ஒரு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இந்த மாதிரி ரிலாக்ஸ் பண்ணிக்குவேன். அப்போ தான் வேலைல நல்லா கான்சண்ட்ரேட் பண்ண முடியும்” என்றார்.

ஆம்… இரவு பகல் பாராது வேலை செய்பவர்களுக்கு இடையிடையே இது போன்ற ஒரு சின்ன சேன்ஜ் தேவைதான்.

அங்கே உட்கார்வதற்கு ஏதாவது சௌகரியம் இருக்கிறதா என்று பார்த்தார். இரண்டு சேர்கள் மட்டுமே அருகே இருந்தது.

“சரி… நாம ஆபிசுக்கு போய் உட்கார்ந்து பேசுவோம்” என்று கூறியவர், அவரது அலுவலகத்தின் முதல் தளத்துக்கு அழைத்து சென்றார். நாம் சென்ற நேரம் ‘ஏழாம் அறிவு’ படத்தை தீபாவளி ரிலீசுக்கு எடிட் செய்துகொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இன்டர்வ்யூவை ஆரம்பிக்கும் முன், நண்பர்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

“எந்திரன படத்தில் சிறப்பான முறையில் எடிட்டிங் செய்தமைக்கு எங்கள் வாழ்த்துக்கள் சார்!” என்று கூறி கையோடு கொண்டு சென்ற பொக்கேவை அவருக்கு அளித்தோம். நன்றி கூறி அதை பெற்றுக்கொண்டார். பிறகு நம்மை அமரச் செய்தார். அவரும் சௌகரியமாக தன் இஷ்டப்படி அமர்ந்துகொண்டார்.

ஒரு பேட்டி போலல்லாமல் நண்பர்களின் ஒரு காஷூவலான உரையாடல் போல எங்கள் சந்திப்பு அமைந்தது. அரைமணி நேரம் தான் அப்பாயின்மென்ட் என்பதால் அதற்குள் முடித்துவிடக்கூடிய அளவிற்கே ப்ரிப்பேர் செய்துகொண்டு வந்தேன். கூடுமானவரை சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டிருக்கிறேன்.

சிவாஜி 100வது நாள் விழா

2007 ஆம் ஆண்டு இறுதியில், ஆல்பட் திரையரங்கில் நம் ரசிகர்கள் கொண்டாடிய 100வது நாள் விழாவிற்கு வந்திருந்த ஆன்டனி அவர்களை அப்போது நாம் சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்தேன். சட்டென பிரகாசமானவர்… “ஆம்…. ஞாபகமிருக்கு….ஞாபகமிருக்கு… !” என்றார்! (பார்க்க நாம் அப்போது எடுத்த புகைப்படம்!).

Antony & KV Anand @ Sivaji 100th day celebrations by fans at Albert

நாம் : ரஜினி சாரை நீங்கள் முதலில் சந்தித்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்…

திரு.ஆன்டனி : ரஜினி சாரை நான் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நிறைய முறை பார்த்திருக்கிறேன். ஏ.வி.எம்.மில் நான் நான்கைந்து வருடம் பணிபுரிந்திருக்கிறேன். ஏ.வி.எம் எனக்கு ஒரு தாய்வீடு போல. சின்ன வயதிலிருந்தே நான் ரஜினி சாரின் தீவிர ரசிகர். அவருடைய நடை உடை பாவனை என அனைத்தையும் ரசிப்பவன் நான். அவரது படங்களுள் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘பாட்ஷா.’ சிறு வயதில் நான் ரஜினி சாருக்கு ரசிகன் என்றாலும் எனக்கு ரஜினி சார் பற்றி அப்போது அதிகம் தெரியாது. காலேஜ் நாட்களில் தான் அவர் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். அதிலிருந்து அவர் மீதான மதிப்பு எனக்கு பன்மடங்கு அதிகமாகிவிட்டது.

‘என்றாவது ஒரு நாள் அவரை பார்ப்போம், நிச்சயம் நாம் பார்ப்போம்’ என்ற நம்பிக்கை இருந்தது. நான் அப்போது ஏ.வி.எம். மில் இருந்துகொண்டு விளம்பரப் படங்கள் செய்துகொண்டிருந்தேன். ஒரு நாள் ஏ.வி.எம். சரவணன் சாரை பார்க்க ரஜினி சார் வநதிருந்தார்.

நாம் : ‘பாட்ஷா’ வந்த நேரத்திலா?

திரு.ஆன்டனி : அவ்ளோ முன்னாடி இல்லை. நான் சொல்றது 2003 ல் என்று நினைக்கிறேன்.

நாம் : ‘காக்க காக்க’ வந்த நேரத்தில் இருக்கும்….

திரு.ஆன்டனி : கரெக்ட். அந்த டயத்துல தான் என்னை ரஜினி சாருக்கு சரவணன் சார் அறிமுகப்படுத்தி வெச்சாரு. “இவர் தான் ஆன்டனி. எங்களிடம் பணிபுரியும் எடிட்டர்….” என்று கூறி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் யாரையும் பெரிதாக நினைக்க மாட்டேன். எல்லாரையும் சாதரணமாக தான் நினைப்பேன். நானும் அப்படித்தான் நடந்துகொள்வேன். ஆனால் ரஜினி சாரைப் பொறுத்தவரை அவரிடம் கைகுலுக்கும்போது கைகள் நடுங்கின. ஆனா அவர் என்கிட்டே ஜாலியா பேச ஆரம்பிச்சாரு. இது தான் ரஜினி சார் கிட்டே என்னோட மீட்டிங். அதுக்கப்புறம் நிறைய தடவை அவரை பார்த்திருக்கேன். ஒவ்வொரு முறையும் அதே அன்போட அக்கறையோட பேசுவார்.

நாம் : உங்கள் கேரியரில் நிறைய நட்சத்திரங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரஜினி சாரை பொறுத்தவரை அவரிடம் நீங்கள் வியக்கும் விஷயம் எது ?

திரு.ஆன்டனி : இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம். அவரோட, HUMBLENESS தான் நான் அவர் கிட்டே வியக்கிற விஷயம். பொதுவா நான் அவர் கிட்டே INTERACT பண்ணது ஸ்க்ரீன்ல தான். ஏன்னா ஷூட்டிங் ஸ்பாட்ல நான் இருக்கமாட்டேன். என்னோட வேலை எடிட்டிங் சூட்ல தான். ரெண்டு டேக்… மூணு டேக்… இதெல்லாம் எப்படி செய்றாரு… இதையெல்லாம் நான் இங்கே எடிட் சூட்லயே பார்ப்பேன். ஒரு டேக் முடிஞ்சா பின்னர் அவர் எப்படி இருக்குறாரு… என்ன செய்றாரு… இதெல்லாம் நான் பார்த்துடுவேன். So, அதுவே ஷூட்டிங்கை நேர்ல பார்க்கிற மாதிரி தான்.

அவரோடு வயசு என்னன்னு பார்த்தீங்கன்னா.. அவர் யார் கிட்டே பேசுகிறாரோ அவங்களோட வயசு தான் அவருக்கு. குழந்தைகள்கிட்டே பேசும்போது அவரும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். ஸ்டூடண்ட்ஸ் கிட்டே பேசும்போது அவர் ஒரு சக மாணவன். இளைஞர்கள்  கிட்டே  பேசும்போது அவர் ஒரு யூத்தாவே மாறிடுவாரு. (எதுக்கு சுத்தி வளைக்கனும். நாம தான் முன்னாடி உட்கார்ந்திருக்கோமே. உங்க கிட்டேன்னு சொல்லியிருக்கலாம்லே…ஹூம்!) அது தான் ரஜினி சார்.

நாம் : எடிட்டிங்கின்போது அவர் உங்களை இங்கு பார்த்திருக்கிறாரா?

திரு.ஆன்டனி : நிறைய முறை எடிட்டிங்கின்போது பார்த்திருக்கிறேன். பல முறை வந்து இங்கே போயிருக்கிறார். வரும்போதே…. “ஹேய்….ஹேய்….ஆன்டனி… ஆன்டனி… எப்படியிருக்கீங்க….எப்படியிருக்கீங்க….?” ன்னு அவரோட ஸ்டைல்ல கேட்பாரு. (நடித்து காண்பிக்கிறார்!). நான் ரொம்ப சந்தோஷமாயிடுவேன். எடிட்டிங்கப்போ, எதாவது சீன் பார்க்கும்போது, சார் அதில் கலக்கியிருப்பாரு. “ஹேய்… ஹூய்…. வாவ்… சார் இந்த சீன்ல கலக்கிட்டாரு…” அப்படின்னு கத்துவேன். பக்கத்து பில்டிங் கூட சில சமயம் நான் கத்துறது கேட்கும்.

(தொடையை தட்டி விசிலடித்து காண்பிக்கிறார் ஆன்டனி. இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.)

உடனே போனை போட்டு அவர் கிட்டே சொல்லுவோம். அவர் உடனே கிளம்பி வந்துடுவாரு. இல்லே சில சமயம் அந்த மாதிரி நான் சந்தோஷமா இருக்கும்போது அவரே இங்கே வருவார். “சார்… அந்த ஸீன் சான்சே இல்லை சார். சூப்பரா இருக்கு சார்…” அப்படின்னு சொல்வேன். “ஒ… அப்படியா… கிரேட்”ன்னு சொல்லுவாரு. நான் குறிப்பிட்டு பேசும் அந்த பாடல் காட்சியில்… ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் என்ஜாய் பண்ணி பண்ணி அவர் கிட்டே சொல்லுவேன். ரொம்ப சந்தோஷப்படுவாரு.

ரோபோ சத்யா : ‘மேக்கிங் ஆஃப் எந்திரன்’ ப்ரோக்ராம்ல கூட நீங்க சொல்லியிருப்பீங்க… “இனிமே தலைவரை நிலாவுல கொண்டு போய் தான் ஷூட் செய்யனும்” அப்படின்னு…

நாம் : அந்த வார்த்தை தான் சார் என்னை உங்களை சந்திக்க தூண்டியது. நீங்க எந்தளவு தலைவரை ரசிச்சிருக்கீங்கன்னு அப்போவே புரிஞ்சது.

திரு.ஆன்டனி :
ரஜினி சார் வந்தப்போ, அவர் கிட்டே “இந்த பர்டிகுலர் சீனுக்கு தியேட்டர்ல பாருங்க சார் விசில் தூள் பறக்கும்”ன்னு. உடனே அவர் குழந்தை மாதிரி குதிக்க ஆரம்பிச்சிட்டாரு… “அப்படியா அப்படியா… தேங்க்ஸ்… தேங்க்ஸ்…”ன்னு சொல்லி சொல்லி… அவருக்கு ஒரே சந்தோஷம். (இதை வார்த்தைகளால் விவரிக்கும் ஆண்டனி அவர்களின் முகத்திலேயே நாம் எல்லையற்ற சந்தோஷத்தை உணர முடிந்தது என்றால், சூப்பர் ஸ்டார் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை நினைத்து பாருங்கள்).

நாம் : சார் நீங்க தலைவரோட ஒவ்வொரு படமும் வொர்க் பண்ணனும். அவரை இதே மாதிரி சந்தோஷப்படுத்தணும். அவர் எப்பவுமே சிரிச்சிகிட்டே இருக்கணும். இது தான் சார் எங்களுக்கு வேணும்.

திரு.ஆன்டனி :அதே மாதிரி இன்னொரு சம்பவம், காதல் அணுக்கள் ஸாங் எடிட் பண்ணும்போது… அதுல பார்த்தீங்கன்னா ஸ்டைல்லா ஒரு நடை நடந்து வருவாரு. அடுத்த ஷாட் என்னன்னு பார்த்தா…. அப்படியே ஸ்டைலா திரும்புவாறு பாருங்க…. அதை பார்க்கும்போது நான் அடிச்ச விசில்… ரெண்டாவது மாடியில் இருக்குற ஷங்கர் சாருக்கு கேட்டுச்சு… அவர் உடனே என்ன ஏதுன்னு கேட்டு இறங்கி வந்துட்டாரு… அவர் கிட்டே. “சான்சே இல்லே சார்… பிரமாதம். ப்யூட்டிபுல் ஸீன்” அப்படின்னு சொன்னோம். அவர் உடனே, ரஜினி சார் வீட்டுக்கு போனைபோடு….அவர் கிட்டே பேசனும்”பார். உடனே அவர் வீட்டுக்கு போனை போட்டு ரஜினி சார் கிட்டே பேசனும்கிற விஷயத்தை சொன்னவுடன், “ரெண்டு நிமிஷத்தோல் சார் உங்க லைனுக்கு வருவாரு” அப்படின்னு சொன்னாங்க. அதே போல, கரெக்ட்டா ரெண்டே நிமிஷத்துல ரஜினி சார் லைனுக்கு வந்தாரு.

“என்ன… என்ன்ன?” ரொம்ப ஆர்வமா கேட்க்கிறார்.

“சார் அடி தூள் கலக்கிடீங்க அந்த சாங்ல… சான்சே இல்லை சார்…..”

“ஹேய்…ஹேய்.. அப்படியா…அப்படியா இதோ உடனே வர்ரேன்” அப்படின்னு அவரு அந்த பக்கம் குஷியாயிட்டாரு.

ஏன்னா, பார்க்குற எனக்கு இவ்ளோ சந்தோஷம்னா நடிச்ச அவருக்கு எந்தளவு இருக்கும்.

“சார் அந்த ஷாட்ல என்ன ம்யூசிக் என்பது பற்றியெல்லாம் கவலை இல்லே… அப்படியே கொஞ்ச நேரத்து இழுத்துடலாம்னு தோணுது… எனக்கு லெங்த் பத்தியெல்லாம் கவலையில்லே. அதை அப்படியே ஃபுல்லா காட்டினாலே தியேட்டர்ல விசில் சும்மா தூள் பறக்கும்…” அப்படின்னு ஷங்கர் சார் கிட்டே சொல்றோம.

நாம் : சார்… ‘காதல் அணுக்கள்’ சாங்க்ல அந்த குறிப்பிட்ட சீக்வென்சுக்கு தியேட்டரே சும்மா அதிர்ந்திச்சி சார்… பொண்ணுங்க கூட அந்த பர்டிகுலர் சீனுக்கு விசிலடிச்சதை பார்த்திருக்கேன்.

திரு.ஆன்டனி : நான் சொல்றது ஜஸ்ட் ஒரு சாம்பிள் தான். இந்த மாதிரி நிறைய INCIDENTS உண்டு.

திரு.ஆன்டனி : அது பற்றி பேசுறதா இருந்தா இன்னைக்கெல்லாம் பேசிகிட்டே இருக்கலாம்.

நாம் : சிவாஜி படம் கூட இருக்கே. அதுல எவ்ளோ இருக்குமோ…

திரு.ஆன்டனி : அது படம் முழுக்க அதிரடி தான். இந்த சீனுக்கு விசில், இந்த சீனுக்கு தியேட்டர்ல சவுண்ட், இந்த சீனுக்கு ரசிகர்கள்  கத்துவாங்க…. இப்படி சொல்லி சொல்லி தான் அதை எடிட் பண்ணினேன்.

நாம் : நீங்க அவர் கூட ஸ்டில் எடுத்துகிட்டது எப்போ?

திரு.ஆன்டனி : நம்ம கிட்டே பேசும்போதும் சரி.. பழகும்போது சரி… தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்கிற எந்த வித பந்தாவும் இல்லாமல், மிக மிக சாதாரணமாக தான் பழகுவார். பேசுவார். ஒரு முறை என்னுடைய மலேசியா ப்ரென்ட் ஒருத்தர், ரஜினி சாரை பார்க்கனும்னு ஒரே அடம் என்கிட்டே. நான் பொதுவா, இது மாதிரி விஷயங்களாய் என்கரேஜ் பண்றதில்லே. அவர் கிட்டேயும் கேட்டதில்லை. இருந்தாலும், அவனுக்காக ஒரே ஒரு முறை ரஜினி சார் கிட்டே பேசினேன்… “சார் உங்களை மீட் பண்ணனும். என்னோட குளோஸ் ஃப்ரென்ட் இந்த மாதிரி உங்களோட சின்சியர் ஃபேன் ஒருத்தரு உங்ககூட ஃபோட்டோ  எடுத்துக்க ஆசைப்படுறாரு. உங்களை பார்க்க முடியுமா?”ன்னு கேட்டேன். “ஓ…எஸ்… நாளைக்கே வாங்க”ன்னு கூப்பிட்டாரு. நாங்கல்லாம் ஒரே குஷியாயிட்டோம். அடுத்த நாள் ஃபிரெண்டையும்  கூட்டிகிட்டு போனேன். நானும் அப்போ தான் அவர் கிட்டே ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன்.

திரு.ஆன்டனி : ஒரு முறை நான் உடம்பு சரியில்லாம, ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அந்த விஷயம் அவருக்கு எப்படியோ போய்டுச்சு… ரெண்டு மாசம் கழிச்சி ஒரு பண்க்ஷன்ல அவரை பார்த்தேன். அவர் அதுல சீப் கெஸ்ட். என்னையும் அந்த பங்க்ஷனுக்கு கூப்பிட்டிருந்தாங்க. நான் கூட போயிருந்தேன். அவர் கிட்டே பேசினேன். அப்போ கேட்டாரு, “உடம்பு இப்போ எப்படியிருக்கு? பரவாயில்லையா?” எனக்கு ஷாக்காயிடுச்சு. எனக்க் உடம்பு சரியில்லாம போனது இவருக்கு எப்படி தெரியும்?ன்னு யோசிக்கிறேன்.

நாம் : அவரை சுற்றி நடக்கும், அவரை சார்ந்தவர்களுக்கு நடக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் அவர் அப்டேட்டாக இருப்பார் சார்… அது அதற்க்கென்று நேரம் வரும்போது தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தெரிகிறது…

திரு.ஆன்டனி : அவ்ளோ தான்… இதற்க்கு மேல் என்னிடம் ரஜினி சார் பற்றி எதுவும் இல்லை. எல்லாத்தையும் உங்ககிட்டே ஷேர் பண்ணிட்டேன்

நாம் : சார் நான் உங்களிடம் பேச வேண்டிய விஷயங்களாய் ஏற்கனவே ப்ரிப்பேர் செய்துவிட்டு வந்துள்ளேன். இன்னும் சில கேள்விகளை கேட்கிறேன். பதில் கூற முடியுமா என்று பாருங்கள் முடிந்தால் ஒ.கே.

திரு.ஆன்டனி : நோ ப்ராப்ளம் நீங்க கேளுங்க

நாம் :
ரஜினி சார் உங்களுக்கு அளித்த - நீங்கள் போற்றி பாதுகாக்கும் - கிஃப்ட் ஏதாவது உண்டா?

திரு.ஆன்டனி :
இருக்கே… சிவாஜி படம் முடிந்த பிறகு ஒரு கோல்டு செயின் கொடுத்தார்.

நாம் :
பார்த்தீங்களா.. இல்லேன்னு இல்லேன்னு சொன்னீங்க… மேட்டரை வரவெச்சிட்டோம்  பார்த்தீங்களா?

(ஆன்டனி உட்பட அனைவரும் சிரிக்கிறோம்)

திரு.ஆன்டனி : எல்லா டெக்னீஷியன்களுக்கும் அதை கொடுத்தாரு. எனக்கும் கொடுத்தாரு. அந்த செயினை, “இது ரஜினி சார் கொடுத்தாரு…இது ரஜினி சார் கொடுத்தாரு….”ன்னு ஊர் ஃபுல்லா ஒரு ஆறு மாசத்துக்கு சொல்லிகிட்டிருந்தேன்.

நாம் : இப்போ அந்த செயின் இருக்கா? பார்க்கலாமா?

திரு.ஆன்டனி : ஆக்சுவலா அதை வீட்டுல கூப்பிட்டு திடீர்னு கொடுத்தார். எனக்கு இதுக்கு தான் கூப்பிடுறாருன்னு தெரியாது. அதனால, போட்டோ எல்லாம் எடுத்துக்கலை. தவிர செயின் போடும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனா, ஊர்ல வீட்டுல பத்திரமா வெச்சிருக்கேன்.

தவிர, தீபாவளிக்கு ரஜினி சார் வீட்டுல இருந்து ஒவ்வொரு வருஷமும் ஸ்வீட் வந்துடும்.

நாம் :
இந்த தீபாவளிக்கு நாங்க இங்கே வர்றோம். அதுல ஒரே ஒரு ஸ்வீட் எங்களுக்கு கொடுங்க…ஓகே?

திரு.ஆன்டனி :
வாங்க …. நோ ப்ராப்ளம்… (சீரியசாக)

நாம் :
அடுத்த கேள்வி சார்… அவரது படம் FDFS பார்த்த அனுபவம் உண்டா உங்களுக்கு?

திரு.ஆன்டனி : தலைவர் படத்தை பர்ஸ்ட் டே பாக்காமலா? அதை நாங்க விட்டுடமாட்டோம். பல வருஷமா அவரோட படம் எப்பவுமே நான் என்னோட பெரம்பூர் ப்ரெண்ட்ஸ் கூட FIRST DAY FIRST SHOW தான்.

நாம் : எங்கே பார்ப்பீங்க?

திரு.ஆன்டனி : வேற எங்கே …. ஆல்பட்ல தான்!!!!!!!!!!

நாம் : வாவ்…அடுத்த முறை நீங்க எங்கே FDFS பார்க்கும்போது உங்க கூட இருபபேன்..  பாருங்க…. சரி… படத்தை எடிட் பண்ணும்போதே சூட்லயே இந்தளவு விசிலடிக்கிற நீங்க, தியேட்டர்ல எந்தளவு கலக்குவீங்க…

திரு.ஆன்டனி : அவோர்ட படத்தை நான் எடிட் பண்ணினாலும் சரி… பன்னலைன்னாலும் சரி… படம் பார்க்கும்போது ஜால்லியா கத்திகிட்டு விசிலடிச்சு பார்ப்பேன். அதுவும் காலைல நாலு மணி அஞ்சு மணி ஷோ… இது தான் நம்ம சாய்ஸ்…

நாம் : விடியற்க்காலைல எழுந்து போய்டுவீங்களா ? (ஆச்சரியத்துடன் கேட்கிறோம்)

திரு.ஆன்டனி : ஆமாம்… தலைவர் படம் வந்தா முதல் நாள் நைட்டுல இருந்தே தூக்கம் வராது… இதுல காலைல சாயந்திரம் இதெல்லாம் கிடையாது….

சிவாஜி, எந்திரன் இதெல்லாம் மாசக்கணக்கில் வருஷக்கணக்கில் செய்ததால், குறிப்பாக எந்திரன் மூன்று வருஷமா வொர்க் பண்ணதால, எப்போடா படத்தை முடிச்சி தியேட்டர்ல பார்ப்போம்னு இருந்திச்சு. படத்தை எடிட் பண்ணும்போதே சொல்லிடுவேன். “இந்த சீன்லாம் விசில் பறக்கும்… இந்த சீனுக்கு எழுது ஆடுவாங்கன்னு… ” அப்படின்னு சொல்லி சொல்லி தான் எடிட் பண்ணுவேன். விசில் சார் இங்கே….விசில்… சவுண்ட் வரும் பாருங்க….

(எடிட்டிங்கின்போது நிலவும் சூழலை கைதட்டி விசிலடித்து தத்ரூபமாக காண்பிக்கிறார். ஆன்டனி  சொல்வதை பார்க்கும்போது, இவர் தலைவரின் படத்தை எடிட்டிங் செய்வதையே எடுத்து தனியா ஒரு படமா ரிலீஸ் பண்ணாகூட நூறு நாள் ஓடும் போல.).

நாம்  : எந்திரன் எங்கே பார்த்தீங்க?

திரு.ஆன்டனி : எல்லாம் ஆல்பட் தான். தலைவர் படத்தை பார்க்க வேற தியேட்டர் பக்கமெல்லாம் போறதில்லை நாம.

நாம் : சொல்லிட்டீங்கல்லா… ஆயிரம் பேர் உங்களை சுத்தியிருந்தாலும் அடுத்த படத்தைப்போ உங்களை தனியா கண்டுபிடிச்சிடுவோம்.

நாம் : தற்போது நீங்கள் வொர்க் பண்ணும் படங்கள் என்ன?

திரு.ஆன்டனி : லிங்குசாமி சாரோட ‘வேட்டை’,  கௌதம் மேனன் சாரோட ‘நீ தானே என் பொன் வசந்தம்’, ஷங்கர் சாரோட ‘நண்பன்’, விண்ணை தாண்டி வருவாயா ஹிந்தி VERSION etc.etc.

நாம் : ராணா?

திரு.ஆன்டனி : ‘ராணா’ நான் பண்ணலே. கே.எஸ்.ரவிகுமார் சார் வேர் ஒருத்தரை வெச்சிருக்காரு. அவர் தான் ‘ராணா’ பண்றாரு.

நாம் : இருந்தாலும், தலைவரின் அடுத்த படத்தை - ஏன் எல்லா படங்களிலும் - நீங்கள் வொர்க் செய்ய வாழ்த்துகிறோம் சார்.

நாம் :
பொதுவாகவே இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஒரு படத்தை சுமார் நான்கு மணி நேரம் ஓடக்கூடிய அளவிற்கு டைரக்டர்கள் எடுத்து உங்களிடம் தருவார்கள். அதை இரண்டரை மணி நேரத்துக்கு மிகவும் CRISP ஆக எடிட் செய்யவேண்டும். பல முக்கிய காட்சிகளை, சுவாரஸ்யமான காட்சிகளை கண்ட்டின்யூட்டி கருதி வெட்டி தள்ள வேண்டியிருக்கும். ரஜினி சார் படங்களில் குறிப்பாக எந்திரனில் அது போன்று நல்ல காட்சிகளை விருப்பமின்றி வெட்டிய அனுபவம் ?

திரு.ஆன்டனி : எடிட்டரின் வேலையே அது தான். ரஜினி சாரின் படமென்று இல்லை. அனைத்து படங்களிலும் எடிட்டரின் முக்கிய பணி இது தான். ஒரு டாப்கிளாஸ் ஸீன் வருது. அது இருந்தா நாலு பிரேம் கழிச்சி வர்ற மற்றொரு ஸீன் எடுபடாது. So, இந்த சீனை கட் பண்ணாத் தான் அது நல்லாயிருக்கும். இப்படி டிஸைட்  பண்ணுறது தான் ரொம்ப முக்கியம். ஆனா, எந்திரனில் எல்லாமே பக்கா பிளானிங்கா பண்ணினோம். அதுனால இந்த சிரமம் எந்திரனில் இல்லை. முக்கிய காட்சிகளோ இல்லே SEQUENCE ஒ எதுவும் வெட்டப்படலை. மற்றபடி, ரஜினி சார் படத்தை எடிட் பண்ணுறதே ஒரு ஜாலியான அனுபவம். அவரோட ஸ்டைலான மூவ்மென்ட்டுக்களை ரசித்துக்கொண்டே எடிட் செய்வேன். ஒரு ரசிகனாக. இது இப்படியிருந்தா நல்லாயிருக்கும். இந்த சீன இங்கே ஸ்டார்ட் பண்ணலாம். அதை அங்கே வெக்கலாம்னு ஜட்ஜ் பண்ணி வொர்க் பண்ணுவேன். அது ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா  இருக்கும்.

ரோபோ சத்யா : சார் எந்திரன் ஸ்டில்ஸ்ல ஒரு ரேஸ் பைக்ல ஐஸ்வர்யா ராயகூட தலைவர் போறமாதிரி ஒரு ஸீன் வரும். அது படத்துல கடைசி வரைக்கும் வரலே. அந்த சீனை எதாச்சும் எடிட்டிங்கில தூக்கிட்டீங்கா…?

திரு.ஆன்டனி : ஸ்டில்சுக்கு எடுத்திருப்பாங்க அதை. ஆனா, படத்துல அந்த மாதிரி ஸீன் எதுவும் கிடையாது.

நாம் : கடைசீயா நீங்கள் தலைவரை எப்போது நேரில் பார்த்தீர்கள்?

திரு.ஆன்டனி : சென்ற டிசம்பர் மாதம் அவரது பிறந்த நாளின்போது வீட்டில் பார்த்தேன். அவருக்கு உடம்பு சரியில்லாதபோது அவரை டிஸ்டர்ப் செய்யக்கூடாது என்று கருதி பார்க்கவில்லை.

நாம் : டிசம்பர் மாசம் பார்த்தப்போ ஏதாவது பேசினீங்களா?

திரு.ஆன்டனி : சும்மா ஜெனரலா… எப்படி இருக்கீங்க.. இந்த மாதிரி தான். ரொம்ப பேசலை. ஏன்னா, அவர் கிட்டே பேசினா, அவரை மொக்கை போடக்கூடாது. அவர் டைமை வேஸ்ட் செய்யக்கூடாதுன்னு நினைப்பேன்.

நாம் : நீங்கள கூறுவது மிகப் பெரிய பாயின்ட்.

நாம் : நீங்கள் ரஜினி சாருடன் அதிக பட்சம் செலவிட்ட நேரம் எது? எப்போது ?

திரு.ஆன்டனி : மேக்சிமம் டைம்… ம்… ஷங்கர் சார் வீட்டுல அவரு கூட டின்னர் சாப்பிட்டபோது தான். அவர் கூட ஜாலியா அரட்டையடிச்சிக்கிட்டே சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம்… என்ன வேணும்னாலும் சொல்லலாம் அவர் கிட்டே. “இந்த ஐஸ்க்ரீம்லாம் அவ்ளோ சாப்பிடாதீங்க சார்… கொடுங்க இங்கே”ன்னு சொல்லி அவர் கிட்டேயிருந்து பிடுங்கிட்டு போய்டுவோம். அவர், “ஹே… என்னப்பா இது…. எனக்கு ஐஸ்க்ரீம் கொடுங்கப்பா… ஹலோ யாராவது ஐஸ்க்ரீம் கொடுங்கப்பா…”ன்னு கேட்பாரு. நாங்க கண்டுக்கவே மாட்டோம்.

நாம்: செம கலாட்டா பண்ணியிருக்கீங்க அவரை.

திரு.ஆன்டனி : நான் தான் சொன்னேனே… இந்த சூப்பர் ஸ்டார் அப்படி இப்படின்கிற பந்தாவெல்லாம் அவர் கிட்டே கிடையாது. அவர் ரொம்ப ஜாலி டைப்.

நாம் : நீங்கள் தலைவர்கூட எடுத்துகிட்ட ஃபோட்டோவை கொஞ்சம் எனக்கு அனுப்புங்க. இந்த ஆர்டிகிள் போடும்போது போட்டா நல்லாயிருக்கும்.

திரு.ஆன்டனி : நான் அவர் கூட ஒரே ஒரு முறை தான் ஸ்டில் எடுத்துகிட்டேன். அவர் கிட்டே ஸ்டில் கேக்குறதுக்கு ரொம்ப சங்கடமாயிருக்கும். அந்த ஒரு ஃபோட்டோவை கூட என்னோட ஃபேஸ்புகல போட்டிருந்தேன். யாரோ அதை டவுன்லோட் பண்ணி, என்னோட முகத்தை வெட்டி அவங்க முகத்தை போட்டுகிட்டாங்க. கடுப்பாயி, அப்புறம் அந்த ஃபோட்டோவை தூக்கிட்டேன். (யாருப்பா அந்த டகால்டி பார்டி?)

நாம் : விடுங்க சார்… தலைவரை நேர்ல பார்க்க முடியாத யாரோ ஒரு ரசிகர் அந்த தவறை செய்திருக்கணும். அப்புறம் சிவாஜி வெள்ளி விழாவுல அப்போதைய சி.எம். கலைஞர் கிட்டே நீங்க ஷீல்டு வாங்குற ஃபோட்டோ என்கிட்டே இருக்கு. அது உங்ககிட்டே இருக்கா? இல்லேன்னா நான் மெயில் பண்றேன்.

திரு.ஆன்டனி :
நீங்க அனுப்புங்க. என்கிட்டே அது இல்லை.

(சொன்னவாறே அடுத்த சில நாட்களில் நாம் அந்த புகைப்படத்தை ஆண்டனிக்கு அனுப்பிவிட்டோம். அவரும் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நமக்கு அனுப்பினார்).

பேசிய சுவாரஸ்யத்தில் அரைமணிநேரம் ஓடிவிட்டது. பேட்டி நிறைவடைந்தவுடன், ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நூலை அவருக்கு நம் தளம் சார்பாக பரிசளித்தோம். “புக்கை படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை ஆசிரியரிடம் பகிர்ந்துகொள்ளுங்க சார்” என்று வேண்டுகோள் வைத்தோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

பின்னர் நமது விசிட்டிங் கார்டில் நாங்கள் மூவரும் அவரது ஆட்டோகிராஃப் பெற்றோம். “ALL THE VERY BEST WISHES - ANTHONY” என்று ஆங்கிலத்தில் எழுதி கைஎழுத்திட்டு தந்தார்கள்.

இறுதியில் நம்முடன் வந்திருந்த நண்பர் விஜய் ஆண்ட்ரூஸ் அவரிடம் சில அவர் துறை சார்ந்த கேள்விகள் கேட்க விரும்பி அவரை தனியே பேட்டிகண்டார். (அதை தான் தொகுத்து முதலில் ‘கடந்து வந்த பாதை’யாக அளித்திருக்கிறேன்).

நாம் இதுவரை சந்தித்த வி.ஐ.பி.க்களில் எளிமையான இனிமையான மனிதர்களில் ஒருவர் திரு.ஆன்டனி என்றால் மிகையாகாது.

[END]

23 Responses to ““இந்த சீனுக்கு தியேட்டர்ல விசில்! இந்த சீனுக்கு கிளாப்ஸ்!! தலைவருக்கு உடனே ஃபோனை போடு” — எந்திரன் & சிவாஜி படங்களின் எடிட்டர் திரு.ஆன்டனியுடன் ஒரு சந்திப்பு!”

  1. K.VENKATAPATHY K.VENKATAPATHY says:

    சுந்தர் சார், சூப்பர் ஸ்டாருடன் நெருங்கி பழகக்கூடிய முக்கியமான நபர்கலையே பேட்டி எடுக்கிறீர் தலைவருன் எப்போது பேட்டி எடுப்பிங்க தலைவரை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்

  2. Anonymous says:

    ஆண்டனி சார் நீங்க வாழ்க்கைல கஷ்ட்டபட்டு முன்னேறுன விதம் என்னை ரொம்ப கவர்ந்துருச்சு சார்.நீங்க கஷ்டபட்டு முன்னேறிய உங்க வாழ்க்கைக்கு ஒரு ராயல் சல்யூட்.அப்பறம்,நீங்க ஒரு தலைவர் ரசிகரா தலைவரோட விசில் அடிச்சு என்ஜாய் பண்ணி வொர்க் பண்ணது,ஷங்கர் சார் வீட்டு டின்னர்ல தலைவரோட பண்ண ஐஸ்கீரீம் சேட்டை இதெல்லாம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்குது சார்.தலைவர் யாரோட பழகுராறோ அவுங்களாவே மாறிடுவார்னு சொன்னிங்களே அது இன்னும் சூப்பர்.தலைவர பற்றிய விஷயங்கள ஷேர் பண்ணிகிட்டதுக்கு ரொம்ப நன்றி ஆண்டனி சார்&நன்றி சுந்தர் அண்ணா……

  3. ஈ. ரா ஈ. ரா says:

    Super Diwali Gift Ji,

    100000000000000000000000000000000000 Wala

    EE RAA

  4. Jayaram Jayaram says:

    கலக்கல் interview சூப்பர்…..

  5. Sankaranarayanan Sankaranarayanan says:

    சுந்தர்ஜி………….

    கலக்கல் பேட்டி திரு.ஆன்டனி அவர்களுக்கு மிக்க நன்றி. தலைவரின் எதார்த்த நிலை பற்றி நெறைய சொன்ன திரு.ஆன்டனி அவர்களுக்கு மிக்க நன்றி.

    ‘கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது’ என்பதன் நேரடி உதாரணம் திரு.ஆன்டனி.

    சரியான வார்த்தைகள்…..

    ப. சங்கரநாராயணன்

  6. RAJA RAJA says:

    சும்மா அசத்தல் பேட்டி,தலைவர் மட்டும் உழைப்பால் உயர்ந்தவர் இல்லை தலைவருடன் இருக்கும் பல பேரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதற்கு திரு அந்தோனி அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்

    கடமையை செய் பலனை எதிர்பார்

  7. Robosathya Robosathya says:

    ஆன்டனி சாரை சந்தித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். ஒரு பேட்டி போலல்லாமல் நண்பர்களது சந்திப்பு போல எங்கள் உரையாடல் அமைந்தது தான் இன்னும் சிறப்பு.

    தலைவரின் ரியாக்ஷன்களை அவர் தத்ரூபமாக நடித்து காட்டியது கொள்ளை அழகு. குறிப்பாக ஐஸ்க்ரீமை தலைவரிடம் இருந்து பறித்த சம்பவத்தையும், அதற்க்கு தலைவர் கொடுத்த ரியாக்ஷனும் ஆன்டனி சார் நடித்து காண்பித்தது சூப்பரோ சூப்பர். :)

    ஆன்டனி அவர்கள் தலைவரை பற்றி சொன்ன தருணங்களில் எனக்கு தோன்றியது தலைவர் என்றுமே 'அன்புக்கு நான் அடிமை' என்பதை தான்.

    gr8 day… gr8 interview :) thanx a lot sundar ji :)

  8. Anonymous says:

    கடுமையான வேலைப்பளுவிற்கிடையில் நமது தளத்திற்கு தீபாவளி பரிசாக பேட்டி அளித்த திரு.ஆன்டனி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

    .

    //(எதுக்கு சுத்தி வளைக்கனும். நாம தான் முன்னாடி உட்கார்ந்திருக்கோமே. உங்க கிட்டேன்னு சொல்லியிருக்கலாம்லே…ஹூம்!) //// - இந்த "நாம தானே" அப்படின்னா ரோபோ சத்யா & விஜய் ஆண்ட்ரூஸ் - அவங்கலதனே சொல்லுரிங்க சுந்தர்….

    .

    மாரீஸ் கண்ணன்

    .

  9. R.Ramarajan R.Ramarajan says:

    Thank you anna, super DIWALI treat for us. Rana la yar editing.? Next Thalaivar thaan .. Thalaivar watched 7aum arivu in four frames

  10. Anonymous says:

    இது வரை நான் படித்த பேட்டிகளிலேயே இது தான்
    நம்பர் #1 பேட்டி! தூள் பண்ணீட்டு வர்றீங்க..

    Hearty congrats !!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  11. Sadique Sadique says:

    ஜி நானும் கரெக்டா guess பண்ணேன்… :)
    அருமையான பேட்டி! நன்றி antony சார்! இது போல மேலும் பல பிரபலங்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் சுந்தர் ஜி! வளர்க உமது பணி!
    '''''''''''''''
    சாதிக் (மதுரை)

  12. Manikandan Manikandan says:

    மிக்க நன்றி சுந்தர் ஜி..

  13. Viji Viji says:

    சூப்பர் சுந்தர் சார் …..அருமையான நேர்காணல் …..அற்புதம்….ரசிகர்களுக்கு அருமையான தீபாவளி பரிசு…நன்றி

    விஜய குமார்

  14. Sudhagar_US Sudhagar_US says:

    சும்மா சரவெடி போங்க….நமது தளம் மிக உன்னதமான உயரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, இது முழுக்க முழுக்க உங்களின் அபார உழைப்புக்கு கிடைத்த வெற்றி சுந்தர்…இன்னும் செல்ல வேண்டிய நிறைய இருக்கிறது.

    //(எதுக்கு சுத்தி வளைக்கனும். நாம தான் முன்னாடி உட்கார்ந்திருக்கோமே. உங்க கிட்டேன்னு சொல்லியிருக்கலாம்லே…ஹூம்!) ////

    இங்க கொஞ்சம் editing தேவை போலயே…. :)

  15. Anonymous says:

    சூப்பர் தீபாவளி பரிசு :)

    ஆன்டனி சார் தலைவரின் தீவிர ரசிகர் என்பது இப்போது தான் தெரியவந்தது :) ஐஸ்க்ரீம் கலாட்டா மிகவும் சுவாரசியமாக உள்ளது. என் நண்பன் மாணவன்" ரோபோ சத்யா :) :) & விஜய் அன்ட்ரூஸ் கு என் வாழ்த்துக்கள் :)

  16. S.Vijay S.Vijay says:

    சுந்தர்…..நல்ல முயற்சி. வேறெங்கும் படிக்க முடியாத - நம் தளத்தில் மட்டுமே பார்க்க முடிகிற - அரிய செய்திகள். வாழ்த்துக்கள் :)

  17. RAJINIROX G.Udhay RAJINIROX G.Udhay says:

    //ஆமாம்… தலைவர் படம் வந்தா முதல் நாள் நைட்டுல இருந்தே தூக்கம் வராது… இதுல காலைல சாயந்திரம் இதெல்லாம் கிடையாது…//.

    கிரேட் ஆன்டனி சார்… கலகிட்டிங்க போங்க….

    சூப்பர் சுந்தர் அண்ணா

  18. SUDARSAN RANA SUDAN SUDARSAN RANA SUDAN says:

    ஆன்டனி சாரை சந்தித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.

    Robo Sathya & Vj andrews anna.

    Irukkirado Koadikkanakkaana thalaivar rajini fans.

    Anda koadi la mukkiyamaanavan neenga daan Antony sir'a paarturukeenga.

    U r VERY LUCKY PERSON & DIE HARD THALAIVAR RAJINI FAN.

    என் நண்பன் ன்” ரோபோ சத்யா & விஜய் அன்ட்ரூஸ் கு என் வாழ்த்துக்கள்.

    By- Sudan.

  19. Anonymous says:

    இதுவரைக்கும் நான் பார்த்த ட்ரைலர்-களில் ரொம்ப ரொம்ப மாஸ் ஆனா ட்ரைலர் சிவாஜி-யும்,எந்திரனும்-தான்……ட்ரைலர்-யையே திரும்ப திரும்ப பார்க்கணும் போல இருக்கும்….! கடினமாக உழைப்பவர்கள் தோற்றுப் போக மாட்டார்கள்…! ஆண்டனி சாரின் கடின முயற்சி மென்மேலும் அவருக்கு புகழ் மாலைகளை சூட்டட்டும்…!

    -

    இந்த "தீபாவளி" வெடி "சும்மா அதிருதுல்ல….."…..நன்றி சுந்தர் அண்ணா…!

    -

    "கடமையைச் செய்; பலனை எதிர்பார் "

    -

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  20. vignesh vignesh says:

    Its not real rajini in ர-one as many predicted.. they just captured his motions and implemented due to time constraints

    —————————————————————————-
    http://daily.bhaskar.com/article/ENT-exclusive-sr...

  21. கிரி கிரி says:

    //நான் அவர் கூட ஒரே ஒரு முறை தான் ஸ்டில் எடுத்துகிட்டேன். அவர் கிட்டே ஸ்டில் கேக்குறதுக்கு ரொம்ப சங்கடமாயிருக்கும். அந்த ஒரு ஃபோட்டோவை கூட என்னோட ஃபேஸ்புகல போட்டிருந்தேன். யாரோ அதை டவுன்லோட் பண்ணி, என்னோட முகத்தை வெட்டி அவங்க முகத்தை போட்டுகிட்டாங்க. கடுப்பாயி, அப்புறம் அந்த ஃபோட்டோவை தூக்கிட்டேன். (யாருப்பா அந்த டகால்டி பார்டி?)//

    சுந்தர் அப்படி இல்ல.. எடிட்டரையே எடிட் பண்ணிய அந்த டகால்ட்டி யாருப்பா :-)

    சுந்தர் உங்கள் ஆசையான தலைவரை பேட்டி காணும் வாய்ப்பு உங்களுக்கு விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates