You Are Here: Home » Featured, VIP Meet » “நேரம் வந்தாச்சு! நல்ல யோகம் வந்தாச்சு!!” — தெய்வீகப் பாடகர் திரு. டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களுடன் ஒரு சந்திப்பு! Part 1

டி.எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. டி.எம்.சௌந்தர்ராஜன், தமிழ்த் திரையுலகம் கண்டெடுத்த மாணிக்கங்களில் ஒருவர். தேனினும் இனிய பல்லாயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை, பக்தி பாடல்களை பாடியிருக்கும் ஒரு இசைச் சுரங்கம். எம்.ஜி.ஆருக்கு கிடைத்த அரசியல் சிம்மாசனத்திற்க்கும் சிவாஜிக்கு கிடைத்த கலையுலக சிம்மாசனத்திற்க்கும் இவர் பின்னணி பாடிய பாடல்களும் ஒரு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. கடவுள் மறுப்பு திரையுலகிலும் தமிழ் நாட்டிலும் தலை தூக்கிய காலகட்டங்களில், நெற்றி நிறைய விபூதியோடும், பளீச் குங்குமத்தோடும் வலம் வந்த  டி.எம்.எஸ். அவர்களை பார்ப்பதே கண்களுக்கும் இதயத்துக்கும் இதம் தருகிற உன்னதமான ஒரு விஷயமாகும். மேலும் டி.எம்.எஸ். என்றால் முருகன், முருகன் என்றால்  டி.எம்.எஸ். என்று நினைக்கும் அளவிற்கு முருகனின் சீரிய தொண்டர் இவர். தமிழ் நாட்டில் இவர் குமரனின் புகழ் பாடாத ஊர்களே இல்லையெனும் அளவுக்கு பல கச்சேரிகளில் பாடியவர். உலகெங்கிலும் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் இவரது கச்சேரி நடைபெற்றுள்ளது.

70 களின் இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகம் தான். ‘பைரவி’, ‘தாய் மீது சத்தியம்’, ‘அன்னை ஓர் ஆலயம்’ உள்ளிட்ட படங்களில் இவர் பின்னணி பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இசைச் சேவையை பாராட்டி 2010 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையில் இவருக்கு பிராமாண்ட பாராட்டு விழா நடத்தி நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டு இறுதியில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் வெள்ளிவிழாவில் ராம்குமார் மற்றும் பிரபு அவர்களால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தாசரி நாராயண ராவ் அவர்களின் முன்னிலையில் பதக்கமும், பொன்முடிப்பும் தந்தது டி.எம்.எஸ். கௌரவிக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

‘பட்டினத்தார்’ & ‘அருணகிரிநாதர்’  ஏற்படுத்திய மாற்றம்

சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றி நான் ஓய்வில் இருந்த காலகட்டத்தில் டி.எம்.எஸ். அவர்கள் நடித்த ‘பட்டினத்தார்’ மற்றும் ‘அருணகிரிநாதர்’ படத்தை வீட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்பதைவிட பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக ‘பட்டினத்தார்’ படத்தை பார்த்ததிலிருந்து  டி.எம்.எஸ். அவர்களை பார்க்கவேண்டும்; அவரிடம் ஆசி பெறவேண்டும் என்ற உணர்வு என்னுள் பலமாக எழ ஆரம்பித்துவிட்டது. இந்த முதுபெரும் கலைஞரை, இறை அடியாரை (90 வயது!) அவர் வாழும் காலகட்டத்தில் சந்தித்து ஆசி பெறவில்லை எனில் நான் பிறந்தது வேஸ்ட் என்று எனக்கு தோன்றியது.

(‘பட்டினத்தார்’ படம் பார்க்கும் எவருக்கும் உடனே இவரை சந்திக்கவேண்டும், இவரிடம் ஆசி பெறவேண்டும் என்று தோன்றும்! நேரம் கிடைக்கும்போது ‘பட்டினத்தார்’ படத்தை  டி வி.டி.யில் போட்டு பாருங்க. ஒரிஜினல்  டி வி.டி. கடைகளில் கிடைக்கும்.).

‘பட்டினத்தார்’ மற்றும் ‘அருணகிரிநாதர்’ பற்றி தெரிந்து கொள்ள கீழ் காணும் லிங்க்குகளை செக் செய்யவும்.

http://ta.wikipedia.org/wiki/பட்டினத்தார்
http://ta.wikipedia.org/wiki/அருணகிரிநாதர்

ஆசி பெறுவதே நோக்கம்

எனவே பேட்டி என்று இல்லாமல் அவரை சந்தித்து அவரிடம் ஆசி பெறுவதே எனது நோக்கமாக இருந்தது. அதற்காக பிப்ரவரி இறுதியில் நாம் அவரை தொடர்புகொண்டபோது அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். “அவர் தற்போது தான் ம்ருத்தமனையிளிருந்து திரும்பி ஓய்வில் இருக்கிறார். மெல்ல குணமடைந்து வருகிறார். அடுத்த மாதம் கூப்பிடுங்கள். முடிந்தால் பார்க்கலாம்” என்று அவரது மகன் பால்ராஜ் நம்மிடம் கூறினார். நாம் ஏமாற்றமடைந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. சரியாக மார்ச் இறுதியில் மீண்டும் தொடர்புகொண்டோம். அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தபடியால் இந்த முறை சற்று நம்பிக்கை ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை ஃபாலோ செய்த பின்பு “நீங்க வாங்க சார்… இப்போ கொஞ்சம் நார்மலா இருக்கிறார் அப்பா. பேசலாம் அவர்கிட்டே !” என்றார் திரு.பால்ராஜ் நம்மிடம்.

(டி.எம்.எஸ்.அவர்கள் தனது துணைவியார் மற்றும் மகனுடன் - 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம்!)

அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நண்பர்கள் கண்ணன் வைரமணி மற்றும் விஜய் ஆனந்த ஆகியோருடன் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றோம்.

எங்கள் உரையாடல் துவங்கிய பின்னர் எங்களுடன் பேசப் பேச அவருக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.  ஒரு சில இடங்களில் அந்தந்த பாடல்களை அப்படியே பாடிக் காட்டினார். நாள் முழுவதும் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கலாம். இந்த வயதிலும், தன் குரல் மீது அவருக்கு இருக்கும் அபார நம்பிக்கை சற்றும் குறையவில்லை. தன்னம்பிக்கையின் ஊற்றாக விளங்குகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி

சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றியும் அவரது ஆன்மிகம் பற்றியும், மேலும் அவருக்கு இவர் அளித்துள்ள ஆசிகள் பற்றியும், ரஜினி இவரைப் பற்றி கூறுவதைப் பற்றியும் படியுங்கள். பரவசப்படுவீர்கள். தவிர முருகனுக்கு இவருக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்கி இவர் கூறியிருக்கும் சம்பவங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை. ‘பட்டினத்தார்’ திருக்கோவிலில் நடைபெற்றதாக கூறும் மற்றொரு நிகழ்ச்சி இவரது வாக்கிற்கு உள்ள வலிமையை நமக்கு உணர்த்துவதாகும். இந்த உரையாடலில் வெளிப்பட்டிருக்கும் பல விஷயங்கள் இதுவரை நீங்களோ வேறு எவருமோ கேள்விப்படாத விஷயங்கள் ஆகும். அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லவேண்டும்.

குடும்பத்தினர் ரசித்த சந்திப்பு

எங்கள் உரையாடலை அவரது மனைவி சுமித்ரா, மகன் பால்ராஜ் உட்பட அவரது குடும்பத்தினர் ஆவலாக ஒரு ஓரத்தில் அமர்ந்து ரசித்தபடி கேட்டுக்கொண்டிருந்தனர். அவர் இப்படி மீண்டும் உற்சாகமாக பேசுவதை இடையிடையே பாடுவதை பார்க்க பார்க்க அவர்களுக்கு பரம சந்தோஷம்.

நான்கு பகுதிகள்

இந்த உரையாடல் (1) டி.எம்.எஸ். அவர்களின் பொதுவான திரையுலக அனுபவம், (2) சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான அவரது அனுபவம் (3)  டி.எம்.எஸ். நடித்த பக்தி படங்களை பற்றிய அனுபவம் (4) முருகக் கடவுளுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என நான்கு நிலைகளாக பகுக்கப்பட்டுள்ளது. எங்கள் உரையாடலில் மேற்கூறிய விஷயங்கள் முன்னே பின்னே பேசப்பட்டாலும், உங்கள் சௌகரியத்துக்காக இவற்றை வரிசைப்படுத்தி சுலபாக உங்களுக்கு புரியும்படி தந்திருக்கிறேன். இரண்டு பாகங்களாக இந்த சந்திப்பு வெளிவரும்.

நாம் இதுவரை எழுதிய பதிவுகளில் நமக்கு கடினமாகவும், எழுதுவதற்கு சவாலாகவும் அதிக நேரம் எடுத்துக்கொண்டதும் இது தான். (பத்து நாளா நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிட்டு வந்தேன் இதை!) அதே சமயம் சுவாரஸ்யமாகவும், ஆத்ம திருப்தியுடனும் இருந்ததும் இந்த பதிவு தான். எனவே நிதானமாக படித்து ரசிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இணைக்கப்பட்டுள்ள வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்க மறவாதீர்கள்!  அவை உங்கள் அனுபவத்தை மேலும் இனிமையாக்கும்!!!

கிடைப்பதற்க்கரிய வாய்ப்பு

மிகப் பெரிய ஊடகங்களுக்கு கூட கிடைப்பதற்க்கரிய இந்த வாய்ப்பு இந்த எளியவனுக்கு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவனின் கருணையே என்றால் மிகையாகாது!

சரி சந்திப்புக்குள் செல்வோமா?

காத்திருந்த சில நொடிகளில் வந்துவிட்டார் டி.எம்.எஸ். அவருக்கு வணக்கம் தெர்வித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம், நமது தளத்தின் விசிட்டிங் கார்டை அவருக்கு கொடுத்தேன். கண்ணாடி அணிந்து நமது தளத்தின் கார்டை நிதானமாக ஆராய்ந்தார்.

சந்திப்புக்கு தயாரானவர், “என்ன வேணும் உங்களுக்கு? நான் என்ன செய்யணும்?” என்றார்.

நாம் : தமிழ் திரையுலகின் முதுபெரும் கலைஞர் நீங்கள். உங்களோட திரையுலகப் பயணத்துல இருந்து நீங்க பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்கள், அனுபவங்கள் இதையெல்லாம் சொன்னீங்கன்னா… இப்போது உள்ள தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ‘பட்டினத்தார்’ & ‘அருணகிரிநாதர்’ ஆகிய படங்களில் நீங்கள் நடித்தது பற்றியும், முருகக் கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள பந்தத்தை பற்றியும் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறோம்.

(நாம் சொன்னதற்கு சற்று யோசனையில் ஆழ்ந்தார்!)

திரு. டி.எம்.எஸ். : சரி…. சொல்றேன்… ஒவ்வொன்றாக பேசுவோமா?

நாம் : நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அனைவருக்கும் உங்க பேர்ல ஒரு தனி பிரியம் உண்டு…. எதனால அப்படி?

திரு. டி.எம்.எஸ். : எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்லுவாரு, ‘என்ன வீட்டு பக்கமே வர்றதே இல்லையே…. தோட்டத்து பக்கம் சும்மா வாங்களேன் சந்தோஷமா பேசிகிட்டே இருப்போம்’ அப்படின்னு. அப்புறம் ஜெய்சங்கர் அடிக்கடி பேசுவாரு. அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றார் போல குரலை நைஸ் (மாடுலேஷன்) செய்து பாடுவேன். அவரவர் குரலுக்கு ஏற்றார் போல  பாடுவதற்கு ஒரு டி.எம்.எஸ். தான். அதனால எல்லா நடிகர்களுக்குமே என் பேர்ல தனி பிரியம் உண்டு.

(ஒவ்வொருக்கும் பாடுவதை போல பாடிக் காட்டுகிறார். இந்த வயதிலேயே இவரால் இப்படி மாடுலேஷனை செய்து காட்ட முடிகிறது என்றால், முன்பு எப்படி செய்திருப்பார்? ஆச்சரியப்பட்டோம்!)

திரு. டி.எம்.எஸ். : “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்” அப்படின்னு கையை காலை ஆட்டிகிட்டே பாடுவேன். ட்ரூப்ல எல்லாரும் வாசிக்கிறதை மறந்துட்டு என்னையே பார்த்துக்கிட்டுருப்பாங்க.

என் பாட்டில் நடிப்பதற்கே நடிகர்களுக்கு பொதுவா ஒரு தயக்கம் உண்டு. சிவாஜியே அடிக்கடி, “இன்னும் எத்தனை மாதிரி பாட்டு பாடி எங்களை சோதனை பண்ணுவே நீ?” அப்படின்னு சொல்லி கோவிச்சிக்குவார். நான் பாடும் பாட்டுக்கள் எல்லாம் அப்படியிருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் நல்லா மியூசிக் பண்ணியிருப்பார், கண்ணதாசன் பிரமாதமா எழுதியிருப்பார், நான் உருகி உருகி பாடிடுவேன். அதற்கு ஈடுகொடுத்து நடிப்பது நடிகர்களுக்கு சவாலாக இருக்கும். உதாரணத்திற்கு ‘வியட்நாம் வீடு’ படத்தில் ஒரு பாட்டு வரும்… ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ அப்படின்னு. அதுக்கு நான் பாடின பாட்டை கேட்டு, “உனக்கு இதே வேலையா போச்சு. நீ பாட்டுக்கு பாடிட்டு போய்டுவே… அதுக்கு எத்த மாதிரி நான் நடிக்க வேண்டாமாய்யா? அப்போ தானே அது ஜனங்க மத்தியில அது எடுபடும். இந்த பாட்டுக்கு நடிக்க எனக்கு ஒரு வாரம் டயம் வேணும்”னு சொல்லிட்டு போய்டுவார்.

“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி…..” (பாட்டை அப்படியே பாடிக் காட்டுகிறார்!)

அதே ஆக்க்ஷன், நம்ம ஆள் (ரஜினி) கிட்டேகூட உண்டு. நம்மவர் கிட்டயும் அந்த நடிப்பு வரும். மிகப் பெரிய காட்சிகளை கூட ரஜினி ஐயா அனாயசமா நடிப்பார். “ஹா… ஹா… ஹா…” என்று கூறியபடி ஒரு காட்சியை நடித்து காட்டுகிறார்.

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் Vs சிவாஜி ரசிகர்கள்

நாம் : இதுவரை ஆயிரக்கணக்கான கச்சேரிகள்ல பாடியிருப்பீங்க. உங்க கச்சேரிகளின்போது நடைபெற்ற சுவையான சம்பவங்கள் ஏதாவது உண்டா?

திரு. டி.எம்.எஸ். : இந்த கச்சேரிகள்ல நான் பாடும்போது எம்.ஜி.ஆர். பாட்டை  பாடும்போது “சிவாஜி பாட்டை பாடுங்க”ன்னு சிவாஜி ரசிகர்கள் எல்லாம் கத்துவாங்க. சிவாஜி பாட்டை பாடும்போது “எம்.ஜி.ஆர். பாட்டை பாடுங்க”ன்னு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கத்துவாங்க. அதுனால அந்த கார்னர்ல இருந்து இந்த கார்னர் வரைக்கும் போலீஸ் பாதுகாப்போட தான் என் கச்சேரி எப்பவுமே நடக்கும்.

ரசிகர்களோட இந்த ATTITUDE ன் காரணமா எனக்கு கோபம் வரும். இருந்தாலும் நிலைமையை சமாளிப்பேன். சமயோசிதம்… அந்த நேரத்துக்கு எப்படி பேசனும்னு எனக்கு தெரியும்.

கச்சேரிகள்ல  என்னோட பாட்டை கேட்பவர்கள், “சார்… நாங்க இன்ன இடத்துல கச்சேரி வெச்சிருக்கோம். நீங்க அங்கே வந்து பாடனும்”னு கேட்டுக்குவாங்க. ஆனா அங்க போனா இந்தப் போராட்டம் தான் சார். “எங்க பாட்டை பாடுங்க… உங்க பாட்டை பாடுங்க”ன்னு இந்த எம்.ஜி.ஆர். -  சிவாஜி ரசிகர்களோட கூச்சல் தான்…. பார்க்க தமாஷா இருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்மொழி பாடல்

நாம் : நீண்ட நாள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்மொழி பாடலுக்கு பாடியது பற்றி?

திரு. டி.எம்.எஸ். : கருணாநிதி ஐயா ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’னு  கவிதை எழுதினாங்க. கடற்கரையில் அதை எடுத்தாங்க. நிறைய பாடகர்கள் அதில் கலந்துகொண்டு பாடினார்கள். அதில் நானும் பாடினேன் என்பதில் ரொம்ப மகிழ்ச்சி எனக்கு.

நாம் : இன்றைய இசையுலகத்துக்கு மூத்தவரா உங்களோட செய்தி என்ன?

திரு. டி.எம்.எஸ். : என்னுடைய ரசிகர்களை வாழ்த்துவது போல உங்களை வாழ்த்துகிறேன்.

நாம் : ‘பைரவி’ படத்துல நீங்க ‘நண்டூருது நரியூருது’ பாட்டு பாடினீங்க. ரஜினி சாருக்காக நீங்க முதன் முதல்ல பாடின அந்தப் பாட்டை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

திரு. டி.எம்.எஸ். : மிகச் சிறந்த நடிகர் அவர். அந்த பாடலுக்கு இயக்குனர் சொல்லிக்கொடுத்ததை விட, என் கற்பனையையும் சேர்த்து பாடினேன். ரஜினி ஒரு படி மேல் சென்று, என்னுடைய பாடலை நன்கு உள் வாங்கி, நான் பாடிய ஸ்டைலிலேயே ரொம்ப அற்புதமாக பாடி நடித்திருப்பார்.

எம்.எஸ்.வி. கூட ஒரு முறை ரஜினி கிட்டே சொன்னாரு… “உங்க குரலுக்கு ஏற்ற மாதிரி டி.எம்.எஸ். பாடியிருக்கிறார்” என்று.  அதற்கு பதிலளித்த ரஜினி, “அதில் வியப்பில்லை. ஆனா  டி.எம்.எஸ். சாரின் வாய்சுக்கு ஏற்ற மாதிரி நடிக்கிறதுக்கு நான் பாடுபடனும்” என்றாராம்.

Nandoorudhu Nariyoorudhu Song Video

URL : http://youtu.be/nRvlWc7mRoE

திரு. டி.எம்.எஸ். : “எனக்கு இருக்கும் ஒரு சாமர்த்தியம் அது. எம்.ஜி.ஆருக்கு பாடினேன்னா  தொண்டை மற்றும் இதயத்திலிருந்து குரல் எழுப்பி பாடவேண்டும். சிவாஜிக்கு பாடனும்னா (ABDOMEN) அடி வயிற்றிலிருந்து பாடவேண்டும்.”

(உடனே சிவாஜி பாடுவது போன்று ஒரு மாடுலேஷனை செய்து பாடிக் காண்பிக்கிறார்.)

நாம் : “ரஜினி சாருக்கு எப்படி பாடுனீங்க?”

திரு. டி.எம்.எஸ். : “அந்த பாட்டை பாடுறதுக்கு முன்னாடி ரஜினி கிட்டே கொஞ்சம் நேரம் பேச்சு கொடுத்து அவர் குரலை நல்லா உள் வாங்கினேன். பின்னர் அதே மாதிரி பாடிக் காட்டினேன்.”

(நண்டூருது நரியூருது பாடலை பாடிக்கட்டுகிறார்.)

“எல்லா ஸ்டைல்லயும் பாடுவேன். வெஸ்டர்ன் ஸ்டைல்ல கூட பாடுவேன். இந்த மாதிரி வாய்ஸ் எங்களுக்கு கூட இல்லையே” அப்படின்னு வெஸ்டர்ன் பாடகர்கள் கூட வியந்து பாராட்டியிருக்காங்க.”

(உடனே ஒரு ஆங்கிலப் பாடலை பாடிக் காட்டினார்.)

நாம் : ‘ராணா’ பூஜைக்கு நீங்க வந்தீங்க… அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

திரு. டி.எம்.எஸ். : “ரஜினி சார் திடீர்னு கூப்பிட்டார். காலைல 8 மணிக்கு பூஜை. மறக்காம ஏ.வி.எம். வந்துடுங்க. நீங்க தான் குத்துவிளக்கு ஏற்றி வெச்சி தொடங்கி வெக்கணும்.” அப்படின்னார்.

“கண்டிப்பா  வர்றேன்”னு சொன்னேன். “நீங்க எப்படி இமயலமலைக்கு போய் தியானம் பண்றீங்களோ அதே போல நானும் தினமும் தியானம் பண்றேன்”னு சொன்னேன். அதுக்கு “எனக்கு தெரியும். கண்டிப்பா நீங்க தியானம் பண்ணுவீங்கன்னு. ஏன்னா … நீங்க ஒரு சித்தர் என்பது எனக்கு தெரியும்”னு சொன்னார்.

என்னை ரஜினி சார் எப்பவுமே ‘சித்தர்’ன்னு தான் கூப்பிடுவார். பூஜைக்கு வந்திருந்தவங்க எல்லார்க்கிட்டயும் என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். “டி.எம்.எஸ். ஏன் இவ்ளோ நல்லா பாடுகிறார்… ஏன் அவர் குரல் நன்றாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவர் ஒரு சித்தர். அதனால தான் நினைத்த குரலெல்லாம் அவரால் கொண்டு வரமுடிகிறது” அப்படின்னு சொன்னார். எல்லாரும் கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணினாங்க.

நாம் : ரஜினி அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது பற்றி?

திரு. டி.எம்.எஸ். : “ரஜினிக்கு இப்போ நடக்கிறது நல்ல டயம். இந்த உடம்புக்கு முடியாம போனது கூட எதுக்குன்னா அவர் நல்லா பரிமளிக்கிறதுக்கு தான். இனிமே அவருக்கு எந்த நோயும் வராது. நான் அப்போவே ரஜினி ஐயாவுக்கு.ஆசீர்வாதம் பண்ணினேன், “உங்களுக்கு எந்த நேயம் வராதுய்யா உங்களோட நல்ல குணத்துக்கு” அப்படின்னு. அவர் நிச்சயம் தீர்க்காயுசா ஆரோக்கியமா இருப்பார்.

நீங்க வேணும்னா பாருங்க… கொஞ்ச நாள்ல அவர் ஜம்முனு ஆகி, ஸ்டைலா ஒரு படத்துல ஆக்ட் பண்ணுவாரு. காமிரா முன்னாடி அப்படி ஸ்டைலா வந்து நிப்பாரு. அவரை மாதிரி ஆக்ட் பண்றதுக்கு வேற யாரும் இல்லே என்கிற சவால் வாங்கணும்.

நாம் : உங்களை மாதிரி பெரியவங்களோட ஆசி பலித்துவிட்டது என்றே தான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆகையால் தான் சென்ற ஆண்டு படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது இரண்டாம் கட்ட ‘கோச்சடையான்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். உங்களை சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். டி.எம்.எஸ்.அவர்களை சந்திக்கவேண்டும் என்று நான் இங்கு வரவில்லை. அந்த பட்டினத்தாரையே சந்திக்கவேண்டும் என்று தான் வந்தேன்.

நாம் : ரஜினி உங்களின் மிகப் பெரிய ரசிகராமே?

திரு. டி.எம்.எஸ். : பெங்களூர்ல இருக்குற கண்ணாடி மாளிகைல நான் பாடுறேன்னு கேள்விப்பட்டவுடனே, எப்படியோ ரஜினி வந்துட்டாரு. அவருக்கு அப்போ தமிழ் தெரியாது. கண்ணாடி மாளிகைல நான் பாடுறேன்னு விளம்பரம் பண்ணியிருக்காங்க. அதை பாத்தவரு, ப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா அங்கே வந்தாரு. அங்கே நல்ல கூட்டம். “யார்  பாடுறாங்க? என்ன சமாச்சாரம்?” இதெல்லாம் இன்னொரு முறை அங்கே இருந்தவங்க கிட்டே விசாரிச்சிருக்காரு. அதுக்கு “டி.எம்.சௌந்தர்ராஜன் பாடுறார். எம்.எஸ்.விஸ்வநாதன் மியூசிக்” அப்படின்னு சொன்னவுடனே, ரஜினி அதுக்கு “எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பாடின  டி.எம்.சௌந்தர்ராஜன்  சாரா ? அப்போ கட்டாயம் முன்னாடி போய் உட்கார்ந்துட வேண்டியது தான்” அப்படின்னு சொல்லி எப்படியோ (மன்னன்!) முன்னால போய் உட்கார்ந்து கேட்பாராம். நெடுநேரம் கேட்பாராம். நண்பர்கள் கிட்டேயெல்லாம்… “என்ன ஒரு வாய்ஸ்… எவ்ளோ சுகமாயிருக்கு கேட்கிறதுக்கு!” அப்படின்னு சொல்லி சொல்லி ஆச்சரியப்படுவாராம்”

அதுமட்டுமா, “நான் ஒரு படத்துல ஹீரோவா ஆக்ட் பண்ணும்போது, முதல் பாட்டு இவரைத் தான் பாடவைப்பேன்” அப்படின்னு சொல்வாராம். அதே மாதிரி பின்னாளில் அமைஞ்சது.  ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அவர். கண்டக்டராக இருந்தவர். நம்மைப் போல பாடகர்கள் பாடுவதை எல்லாம் மேடைகளில் கேட்டு சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டவர் ரஜினி.

திரு. டி.எம்.எஸ். : “இப்போ கூட நான் இவருக்காக பாடுறேன்னு ஒரு விளம்பரம் வந்தா கூட போதும்… அதோட எதிர்பார்ப்பும் வரவேற்பும் பிரம்மாண்டமா இருக்கும். ஏன் சொல்றேன்னா உலகம் முழுக்க  தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சௌந்தர்ராஜன் பாட்டை இன்னமும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். சௌந்தர்ராஜன் பாட்டு என்னைக்கும் நிலைச்சி நிக்கும். அவருடைய படம்னா ரசிகர்கள் கூட்டம் பயங்கரமா வரும். ஐயா படத்துல டீ.எம்.எஸ். பாடுறார்னு   சொல்லும்போது ரொம்ப நல்லாயிருக்கும். இது தான் பெருமை. ஏன்னா அவர் சொன்ன வார்த்தையைத் தான் சொல்றேன். அவருக்கு ரொம்ப பிரியம் என் பேர்ல.

நாம் : ஆன்மீக ரீதியா உங்களுக்கும் அவருக்கு நெருங்கிய ஒற்றுமை உண்டு போல?

திரு. டி.எம்.எஸ். : நிச்சயமா. அது மட்டுமில்லாம அவர் செய்ற யோகத்திலும் எனக்கு பங்குண்டு. அங்கே இமய மலையில் இவர் பார்க்குற ரிஷிகள் எல்லாம், “டி.எம்.சௌந்தரராஜன் சித்தர் என்ன பண்றார்?”ன்னு கேட்பாங்களாம். ரஜினியே என் கிட்டே சொன்னார் இதை. “உங்க பேரையே அவங்க சொல்லிகிட்டுருக்காங்க… என்ன விஷயம் சித்தரே?” அப்படின்னு ரஜினி சிரிச்சிகிட்டே கேட்டாரு என் கிட்டே. சித்தர்களின் அருள் மட்டும் ஒருவருக்கா வாய்த்துவிட்டால்…. அதை விட சிறப்பு வேறு எதுவும் கிடையாது. ரஜினி ஐயாவை பொறுத்தவரை அவருக்கு எல்லாம் தெரியும். சௌந்தர்ராஜன் இப்போ என்ன சொல்றாருன்னு கூட அவருக்கு தெரியும். அவர் பண்ற மேடிடேஷனுக்கு அவ்ளோ பவர்.

கமலாம்மா இறந்தப்போ சிவாஜி வீட்டுக்கு போயிருந்தேன். ரஜினி என்னை பார்த்ததும் ஓடி வந்து கூட்டிகிட்டு போனாரு. வந்திருந்தவங்க எல்லாம் ரூமுக்குள்ளே உட்கார்ந்திருந்தாங்க. என்னை பார்த்ததும் ஓடி வந்து உள்ளே கூட்டிகிட்டு போனாரு ரஜினி.

நாம் : ரஜினிக்காக நீங்கள் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாட்டு எது?

திரு. டி.எம்.எஸ். : ரஜினிக்கு நான் பாடின பாட்டுக்கள் எல்லாமே நல்லா ஹிட்டாச்சு. ‘தாய் மீது சத்தியம்’ படத்துல வரும், “நேரம் வந்தாச்சு…நல்ல நேரம் வந்தாச்சு”  பாட்டு தான் ரொம்ப பிடிச்ச பாட்டு. அதுல வர்ற மாதிரி இப்போ ரஜினிக்கு நேரமும் நல்ல யோகமும் கை கூடி வந்துடுச்சு. சனிப் பெயர்ச்சியில ரஜினிக்கு நல்ல யோகம் வந்தாச்சு. அவரை இனிமே பிடிக்கவே முடியாது.

(நமக்கு ஒரு கணம் பரவசமும், இனம் புரியாத சந்தோஷமும் ஏற்படுகிறது.)

நாம் : ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்துல ‘அம்மா நீ சுமந்த பிள்ளை’ பாட்டை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…?

திரு. டி.எம்.எஸ். : தேவர் பிலிம்ஸ்க்காக நான் பாட்டின் பாட்டு அது. சின்னப்பா தேவர் என் கிட்டே சொன்னாரு, “யோவ்… அம்மா நீ சுமந்த பிள்ளைனு அவருக்காக நீ பாடப் போறே. நீ பாடுற பாட்டை கேட்டு எல்லாரும் கதறிடனும்”ன்னு. அதே மாதிரி அந்த பாட்டு ரொம்ப உருக்கமா வந்துச்சு.

நாம் : “இப்போ அந்த பாட்டை கேட்டா கூட எங்களுக்கு கண்ல தண்ணி வந்துடும் சார்”

திரு. டி.எம்.எஸ். : “இந்த வாய்ஸை டி.எம்.எஸ். கிட்டே தான் கேட்க முடியும். வேற யார் கிட்டயும் கேட்க முடியாது”ன்னு ரஜினி சொல்லுவார். என் மேல பிரியப்பட்டு தானே கண்ணாடி மாளிகைக்கு வந்து பாட்டு கேட்டாரு. (மீண்டும் ஒரு கணம் பழைய நினைவுகளில் மூழுகிறார்!)

Amma Nee Sumandha Pillai Song Video

URL : http://youtu.be/a4QpoNCSXfs

நாம் : ரஜினி அவர்களுக்காக நீங்கள் பாடியபோது பின்பற்றியவை என்ன?

திரு. டி.எம்.எஸ். : ரஜினிக்கு பாடுவதை பொறுத்தவரை, அவரை ஃபாலோ பண்றதுக்கு நான் ஒன்றும் பெரிய ஆக்டர் அல்ல. ஆனா அவர் நடிப்பை நான் பாட்டில் நடித்து பாடிவிடுவேன். இவர் திரையில் அதற்கு தானே நடிக்கவேண்டியிருக்கும். அப்போது அந்த பாடல் மிக பொருத்தமாக வந்துவிடும்.

நாம் : ரஜினி அவர்களின் நடிப்பு திறன் பற்றி?

திரு. டி.எம்.எஸ். : நடிப்புல பரிமளிக்கிறதுக்கான பரிபூரண பாக்கியம் இவர் கிட்டே உண்டு. மிகப் பெரிய நடிகர் அவர். ஆனா என்னென்னமோ ஆகிப் போச்சு. இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும், சண்டை போடணும் அப்படி இப்படின்னு அவர் மேல ஏகப்பட்ட விஷயங்கள் திணிச்சிட்டாங்க!

….To be continued in Part 2

—————————————————————————————————————
இரண்டாம் பாகத்தில்…

* ரஜினி கொடுத்த விருந்தில் திரு. டி.எம்.எஸ்.

* ரஜினியும் சித்தர்களும்!

* உலகம் முழுக்க இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி கொண்டாடப்படுவது ஏன்?

* ரஜினிக்கு இவரது ஆசி என்ன?

* முருகனுக்கும் இவருக்கும் உள்ள பந்தம்!

* திருவொற்றியூரில் ‘பட்டினத்தார்’ கோவிலுக்கு டி.எம்.எஸ். சென்றபோது அங்கு நடைபெற்ற அதிசயம்!
—————————————————————————————————————

17 Responses to ““நேரம் வந்தாச்சு! நல்ல யோகம் வந்தாச்சு!!” — தெய்வீகப் பாடகர் திரு. டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களுடன் ஒரு சந்திப்பு! Part 1”

  1. s.vasanthan s.vasanthan says:

    அருமையான சந்திப்பு ,ஐயா தலைவருக்கு பாடிய பாடல்கள் அனைத்தும் மிக நல்ல பாடல்கள் மட்டுமல்ல ,தலைவருக்கு ஏற்ப கம்பிரமாகவும் பாடியிருப்பார் .

  2. டியர் சுந்தர் அருமையான பதிவு

  3. Amma nee sumantha pillai.. Touching song. Waiting to know about his miracle incident. Yaar kooda benz la poninga.

    Thalaivar pathi vara negative news na la upset aguthu. Why this media targeting him, earn.

  4. Babu babu babu nane… Thai meethu satyam song also super

  5. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    இப்படி ஒரு சந்திப்பு கிடைத்தது மட்டுமல்லாமல் அதை நம் போன்ற இந்த கால தலைமுறையினர் பின்பற்ற முயற்சி எடுத்தாலே நாம் வெற்றி பெற்றுவிட்டோம்..

    எனக்கு TMS அய்யா அவர்களின் 5 பிடித்த பாடல்கள்

    1 அமைதியான நதியினிலே ஓடம்

    2 ஆறு மனமே ஆறு

    3 வீடு வரை உறவு

    4 போனால் போகட்டும் போடா

    5 நண்டூருது நரிஊருது

    உங்களின் இந்த முயற்சிக்கு என்றென்றும் ஏன் வாழ்த்துக்கள் சுந்தர்

    என்றும் தலைவர் பக்தன்

    விஜய்

  6. Somesh Somesh says:

    Excellent.!! What a memory he has. Easily recalls incident from 50 years back. No doubt he is a saint. SS likes him a lot. Thanks for presenting this to us Sundar.

  7. saravanan saravanan says:

    இந்த பதிவினை படிக்கும் போது, ஏதோ தூரத்தில் அமைதியாய் இருக்கும் கோவிலுக்குள் செல்வது போல் உள்ளது.. கோவில்களில் நடந்து கொண்டு, கோவில்களின் சுவர்களில் சித்திரங்களை பார்த்துக்கொண்டே மனது இனிமையாகும், ஏதோ ஆச்சர்யங்கள் தோன்றும். கணிணியில் படிக்கிறேனா? அல்லது கோவில் சுவர்களில் படிக்கிறேனா? என்பது போல தெய்வீகமாக உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவன் கூட ஒரு முறை கடவுளை அசைபோடுவான் இந்த பதிவினை படித்து.

    திரு.சித்தர் டி.எம்.எஸ்.சௌந்தர்ராஜன் பற்றி தெரிந்துகொண்டதற்கும், அருணகிரிநாதர், பட்டினத்தார் பற்றி தெரிந்துகொண்டதற்கும் நன்றி திரு.சுந்தர் அண்ணா.

    உடலை பத்திரமாக பார்த்துக்கொண்டு நல்லபடியாக இருங்கள்.

  8. arul dinesh arul dinesh says:

    சூப்பர் சுந்தர் அண்ணா

  9. muthu muthu says:

    அற்புதமான சந்திப்பு .

  10. murugan murugan says:

    சந்திப்பிற்கு மிக்க நன்றி சுந்தர் ஜி !!!

    அடுத்த பகுதிக்காக ஆவலோடு காத்திருக்கிறோம் !!!

  11. KUMARAN KUMARAN says:

    ரஜினிக்கு நல்ல யோகம் வந்தாச்சு இனிமே அவரை பிடிக்கவே முடியாது.

  12. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Thanks for the wonderful update. The only concern is you are splitting the article into 3 parts like mega serial. Unable to wait.

  13. Mohamedamhar Mohamedamhar says:

    ரஜினிக்கு நல்ல யோகம்

    வந்தாச்சு இனிமே அவரை பிடிக்கவே முடியாது..super

  14. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    //ரஜினிக்கு நான் பாடின பாட்டுக்கள் எல்லாமே நல்லா ஹிட்டாச்சு. ‘தாய் மீது சத்தியம்’ படத்துல வரும், “நேரம் வந்தாச்சு…நல்ல நேரம் வந்தாச்சு” பாட்டு தான் ரொம்ப பிடிச்ச பாட்டு. அதுல வர்ற மாதிரி இப்போ ரஜினிக்கு நேரமும் நல்ல யோகமும் கை கூடி வந்துடுச்சு. சனிப் பெயர்ச்சியில ரஜினிக்கு நல்ல யோகம் வந்தாச்சு. அவரை இனிமே பிடிக்கவே முடியாது.//

    அழகான , அமைதியான மற்றும் ஆழமான ஒரு சந்திப்பு சூப்பர் சுந்தர் அண்ணா … தொடரட்டும் .. சூப்பர் ஸ்டார் யும் சந்தித்து பேட்டி காணும் நாள் வெகு தொலைவில் இல்லை…

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

  15. harisivaji harisivaji says:

    TMS போல பெரியவங்க ஆசி …என்றும் தலைவரை அரண் போல் பாதுகாக்கும்

  16. **Chitti** **Chitti** says:

    எம். ஜி. ஆர், சிவாஜி முதல் ரஜினி வரை பாடி விட்டார் என்பதே மிக பெரிய ஒன்று. இதற்கு கடவுளின் ஆசி கண்டிப்பாக இருக்க வேண்டும். இவருக்கு அது பரிபூர்ணமாக இருக்கிறது…

    *****

    முதலில், திரு. டி.எம்.எஸ். பற்றி அவ்வளவாக எனக்கு தெரிய வில்லை. அதனால், இந்த பதிவு வந்த பிறகு, இணைய தளத்தில், இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நினைத்தேன். இவர் கிட்ட தட்ட எட்டு வருடங்கள் சினிமாவில் கஷ்டப்பட்டு உள்ளார். முதலில், சிவாஜிக்கு பாடும் போது தான் பாடும் அனைத்து பாடல்களும் இலவசமாக பாடவதாக கூறி, அந்த கிடைத்த சந்தர்ப்பதில், சிவாஜி மாதிரியே அவர் பாடினால் எப்படி இருக்குமோ, அப்படி பாடி வாய்ப்பு பெற்று, தன்னம்பிக்கையால் முன்னுக்கு வந்தவர். கிட்ட தட்ட, சிவாஜி மாதிரியே இவர்..கிடைத்த சிறு சந்தர்ப்பத்தில், தனது திறமையை வெளிப்படுத்தி உலகில் சாதித்து உள்ளார்.

    ****

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்மொழி பாடலில், இவர் தான் முதலில் பாடுவார் என்று நினைக்கிறன்.

    அத்தகைய அனுபவமும், திறமையும் பெற்றவர்.

    ****

    ரஜினியே இவரை 'சித்தர்' என்று கூப்பிடுகிறார் என்றால் இவரின் ஆன்மிக பற்றினை புரிந்து கொள்ள முடிகிறது.

    ****

    மொத்தத்தில், இவர் ஒரு மிக சிறந்த மனிதர் - வாழ்க்கையில் தனது ஆன்மிக பயணத்தால், பல புண்ணியங்களை இவர் செய்திருப்பார் என்று தெரிகிறது.

    ****

    அத்தகைய மிக பெரிய மனிதரை கண்டு, பேட்டி எடுத்து எங்களுக்கு இத்தகைய பதிவினை அளித்த சுந்தர்ஜிக்கு மிக்க நன்றி!!!

    ****

    சுந்தர்ஜி அவர்களுக்கு - தாங்கள், மேலும் பல பல நல்ல மனிதர்களை சந்தித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.!!!

    ****

    ரஜினி என்னும் மாமனிதனுக்கு ரசிகனாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.!!!

    ****

    இந்த பரத கண்டத்திற்கு (உங்களால்) நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு!!!

    ****

    **சிட்டி**!!!

    ஜெய் ஹிந்த்!!!

    Dot .

  17. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி, நமது வாசகர்கள் சார்பாக கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். TMS அவர்களின் பிரத்தியேக பேட்டியை எடுத்ததற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதா இல்லை நன்றியை சொல்வதா என்று குழப்பமாக உள்ளது.

    .

    TMS அய்யா அவர்களின் அனுபவம், அதை பற்றி சொல்வதற்கே ஒரு தகுதி வேண்டும்.சுந்தர்ஜி நீங்கள் கூறிய விஷயத்தில், இறைமறுப்பு தலைதூக்கிய இறைவன் மீது அவர் கொண்டுள்ள விதர்கத்தை அவர் வெளிபடுத்திய விதம்,நம்மை போன்ற இளைஞர்களுக்கு மிகபெரிய பாடம்.

    .

    ரசனை மாற்றத்தால், TMS அய்யாவின் பாடலை நாம் கேட்பது குறைவாக இருந்தாலும், அவர் படிய "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பாடல் ஒரு ஆன்மிக புத்தகத்திற்கு இணையான ஸ்தோதிரத்தை நமக்கு கொடுக்கும்.

    .

    சுந்தர்ஜி, இந்த சந்திப்பின் அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். தமிழ்குமரன் முருக பெருமானுடன் அவர்க்கு ஏற்பட்ட அனுபவத்தை மிகவும் எதிர்பார்கிறேன். நன்றி ஜி

    .

    rajni will rule tamil nadu

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates