You Are Here: Home » Featured, Happenings » பார்த்’தேன்’, ரசித்’தேன்’, வியந்’தேன்’ — நம்மை பரவசப்படுத்திய ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்’

சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மேல் எனக்கு மிகப் பெரும் ஈடுபாடு உண்டு. காரணம், மிகப் பெரிய ஆன்மீக விஷயங்களை கூட அனாயசமாக குட்டிக்கதைகள் மூலம் அனைவருக்கும் விளங்க வைத்த பாங்கு. இன்னொன்று, நான் வணங்கும் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் குரு இவர். அதாவது என் குருவுக்கு குரு.  மஹாகுரு.

‘அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே’ என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

சென்ற வாரம் ஒரு நாள் காலை… அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தேன். ஆக்க்ஷன், வெட்டு, குத்து, காதல், கத்திரிக்காய் போன்ற ஃபார்முலா திரைப்படங்களின் விளம்பரங்களுக்கு நடுவே நம்மை மிகவும் ஈர்த்தது ஒரு படத்தின் விளம்பரம். விளம்பரம் மிக சிறியதாய் தான் இருந்தது. மூர்த்தி சிறிதானாலும் பல சமயங்களில் கீர்த்தி பெரிதல்லவா? எனவே அதை வைத்து தகுதியை எடைபோட முடியுமா என்ன? ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்’ என்ற அந்த படத்தின் விளம்பரம் ஊமத்தைகளுக்கு நடுவே செந்தாமரை மலரை பார்த்தது போன்று மனதுக்கு அத்துனை இதமாக இருந்தது.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 175 ஆம் ஆண்டு அவதாரத் திருநாளை முன்னிட்டு சிங்கப்பூர் அரசாங்கத்தில் கலை இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்ற திரு.G.N. தாஸ் என்பவர் முதன் முதலாக அவரே இயக்கி தயாரித்து வெளியிட்டிருக்கும் நேரடி தமிழ் படம் தான் இந்த  ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்.’

பகவான் ராமகிருஷ்ணரின் உபதேசங்களை அவர் கூறிய கதைகளை நிறைய படித்திருக்கிறேன். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறு எனக்கு முழுமையாக தெரியாது. எனவே அது ஒரு திரைப்படமாக வெளிவந்திருப்பதால் அதை பார்க்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. நண்பர்களுடன் சேர்ந்து ரசிக்க முடிவு செய்து ஏற்பாடுகளில் இறங்கினேன்.

கடந்த சுதந்திர தினமன்று விடுமுறை நாள் என்பதால், படம் ஓடிக்கொண்டிருக்கும் உதயம் காம்ப்ளக்ஸ் (சூரியன்) சென்றிருந்தேன். நிறைய பேர் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். பெரியவர்கள், கணவன் மனைவி என்று கலவையான ஒரு ஆடியன்ஸ். பெரும்பாலானோர் ராமகிருஷ்ண மிஷன் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களாக இருக்கவேண்டும் என்று தோன்றியது.

படத்தை பார்த்து நான் தெரிந்துகொண்ட இரண்டு முக்கிய விஷயங்கள்… மகா விஷ்ணுவின் அம்சமாக ராமகிருஷ்ணர் அவதரித்தார் என்பதும் சப்த ரிஷிகளில் ஒருவரே அவரது சீடரான விவேகானந்தராக அவதரித்தார் என்பதும் தான்.

மைதியாக துவங்கும் படம், தெளிந்த நீரோடை போன்று பயணிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்களோ காட்சிகளோ இல்லை. ஆனால் படம் முழுக்க ஒரு நேர்த்தி மற்றும் நேர்மை இழையோடுவதை புரிந்துகொள்ளமுடிந்தது.

ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு தெரியாதவர்களுக்கு படம் மிக சுவாரஸ்யமாக இருக்கும். தெரிந்தவர்களுக்கோ அதை விட சுவாரஸ்யமாக இருக்கும். அது தான் இந்தப் படத்தின் இயக்குனருக்கு கிடைத்துள்ள வெற்றி. ‘கமர்ஷியல் காம்ப்ரமைஸ்’ என்ற பேச்சுக்கே இடமின்றி, எந்த வித நிர்பந்தங்களுக்கும் உட்படாமல் அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள்.

மகாவிஷ்ணு ஸ்ரீ ராமகிருஷ்ணராக…. சப்த ரிஷிகளில் ஒருவர் விவேகானந்தராக….

கமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் வறுமையிலும் செம்மையாக வாழ்கிறார்கள் குதிராம் - சந்திரமணி தம்பதியினர். தனது முன்னோர்களுக்கு ஈமக்கிரியைகளை செய்ய கயையில் உள்ள விஷ்ணுபாதம் என்கிற தலத்துக்கு குதிராம் செல்லும்போது ஒரு நாள் இரவு அவரது கனவில் தோன்றும்  ஸ்ரீமந்நாராயணன் “எனது அம்சமாக உனக்கொரு மகன் பிறப்பான்” என்று வரமளிக்கிறார். (படத்தின் இது காட்சியாக காட்டப்படவில்லை. குதிராம் தனது மனைவிக்கு இதை சொல்வது போல வருகிறது).

தனக்கு பிறக்கு அந்த குழந்தைக்கு கதாதரன் என்று பெயர் சூட்டுகிறார். கதாதரன் மற்ற குழந்தைகள் போலல்லாமல் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதை கழிக்கிறார்.

பூணூல் அணிந்தவுடன், தரும் முதல் தானத்தை தான் முன்பே வாக்களித்தபடி, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி பணிப் பெண்ணுக்கு தருவதிலிருந்தே கதாதரனின் புரட்சி தொடங்கிவிடுகிறது.

இருப்பதை கொண்டு திருப்தியாக இனிமையாக கழிகிறது குதிராமின் வாழ்க்கை. பின்னர் ஒரு பொய் சாட்சி கூற மறுக்கும் காரணத்தால் தனது எஜமானரால் ஊரைவிட்டு வெளியேற்றப்படுகிறார் குதிராம். குடும்பத்தோடு வெளியேருகிறவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் செல்வந்தர் ஒருவர்.

கதாதரனின் அண்ணன் ராம்குமார் தட்சினேஸ்வர காளி கோவிலில் பூசாரியாக பணி செய்து வந்தார். அருகே சிவன், ராதாகிருஷ்ணர் சந்நிதிகளும் உண்டு. இளம் வயது ராமகிருஷ்ணருக்கு கல்வியில் நாட்டமில்லாததால், அண்ணனுக்கு உதவியாக காளி கோவிலுக்குச் செல்கிறார்.

அவரின் மறைவுக்கு பின்னர் காளி கோவிலின் பூசாரியாக மாறும் கதாதர் (ராமகிருஷ்ணர்), அனைத்தையும் அன்னை காளி தேவியாகவே பார்க்கிறார். ஒரு கட்டத்தில் அன்னையின் தரிசனத்துக்காக ஏங்கி அது கிட்டாது போக, தமது கைகளை அரிவாளால் வெட்டப்போக அன்னை பிரச்சன்னமாகி அவரை ஆட்கொள்கிறாள்.

அதற்கு பிறகு அவரது போக்கில் மாற்றம் ஏற்படுகிறது. அவருக்கு பித்து பிடித்துவிட்டது என்றெண்ணி, அவரை குணப்படுத்த முயற்சிகள் பல செய்கின்றனர். அதில் ஒரு பகுதியாக பெண்ணைப் பார்த்து சபலப்பட்டால் சரியாகிவிடும் என்றெண்ணி ஒரு விபசார விடுதியில் அவரை கொண்டு போய் விட, அங்கிருந்த அழகான விபசாரியையும் அன்னை காளி தேவியின் சொரூபமாக பார்த்து, “அம்மா.. எப்படிம்மா இருக்கே….?” என்று அன்புடன் விசாரிக்கிறார். பேசிக்கொண்டிருக்கும்போதே மோன நிலையை அடைந்துவிட, அந்த விபாசார விடுதியில் உள்ள பெண்களோ, அவரை அழைத்து வந்தவர்களை கடிந்துகொள்கிறார்கள். “எவ்வளவு பெரிய பாவத்தை செய்ய எங்களை தூண்டியுள்ளீர்கள்…. இவர் ஒரு மிகப் பெரிய அவதார புருஷர். இவரை பார்த்ததே நாங்கள் செய்த பாக்கியம்” என்று கூறி ராமகிருஷ்ணரின் கால்களில் வீழ்ந்து வணங்குகின்றனர். அப்போது தான் அவரை அங்கு அழைத்து வந்தவர்களுக்கு ராமகிருஷ்ணர் சாதாரண பிறவி அல்ல என்று புரிகிறது.

சரி…. கதாதருக்கு திருமணம் செய்வித்துவிடலாம் என்றெண்ணி, அவருக்கு பெண் பார்க்க, “எதற்கு பெண் பார்த்து கஷ்டப்படுகிறீர்கள…. எனக்குறியவள் இந்த இடத்தில் இந்த தோற்றத்தில் இருப்பாள்” என்று சரியாக சொல்லி, அவரது ஊரான கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்னும் ஊரில் இருந்த சாரதாமணி என்கிற பெண்ணை தனக்கு மணம் செய்துவைக்கும்படி கூறுகிறார். அவர் தான் அன்னை சாரதாதேவி.

அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக பார்க்கும் ராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்குகிறார்.

நாட்கள் செல்லச் செல்ல, காளிதேவியின் மீது ராமகிருஷ்ணருக்கு பக்தியும் பித்தும் முற்றுகிறது. அவரது செயல்கள் அனைத்தும் ஒரு பைத்தியக்காரனின் செயலாகவே படுகிறது அனைவருக்கும்.

பைரவிப் பிராம்மணி என்ற பெண் சன்யாசினி ஒருவர் ராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண தட்சிணேஸ்வரத்துக்கு வருகிறார். ராமருஷ்ணரைப் பார்த்ததுமே அவர் ஒரு அவதார புருஷர் என்பதைக் அடையாளம் கண்டு கொள்கிறார். ஞானிகள் கொண்ட சபையைக் கூட்டி, ராமகிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் என்று உணர்த்துகிறார். சாக்த வழிபாட்டை ராமகிருஷ்ணருக்கு தீவிரமாக போதிக்கிறார்.
தோதா புரி என்கிற சாது இவர் காட்டில் அமர்ந்து தியானம் செய்வதை பார்த்து தான் கற்ற தவ நெறிகள் மற்றும் யோகங்களை கற்றுத் தர ஏற்ற நபர் இவரே என்று கருதி, இவருக்கு ‘அத்வைத வேதாந்தம்’ கற்று தருகிறார். பயிற்சியின் இறுதியில் ராமகிருஷ்ணர் நிர்விகல்ப சமாதிக்கு சென்றுவிடுகிறார். மிக மிக சூட்சுமமான இந்த காட்சியை வெகு நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

இப்படி தமது வாழ்க்கை முழுதும் ராமகிருஷ்ணர் எந்த குருவையும் தேடிச் செல்லாத நிலையில் குருமார்களே இவரைத் தேடிவந்து போதிக்கின்றனர். இது ஒன்றே போதாதா இவர் அந்த பரம்பொருளின் திரு அவதாரம் என்பதை உணர்த்த.

சுவாமி விவேகானந்தர் இன்றி ராமகிருஷ்ணர் பற்றி பேசமுடியுமா? அல்லது அவரது வாழ்க்கை வரலாற்றை தான் கூற முடியுமா? அனைவரும் ஆவலுடன் காத்திருந்த விவேகானந்தரின் என்ட்ரி இங்கே தான் வருகிறது. ராமகிருஷ்ணரின் இந்த ஆங்க்மீக சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு கல்கத்தாவில் உள்ள பலர் அவரைப் பார்க்க வருகின்றனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா என்ற விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். நரேந்திரனை பார்த்தவுடன், “வாப்பா வந்துட்டியா? என்னை தேடி வர உனக்கு இத்தனை நாள் ஆச்சா?” என்று நரேந்திரனை வாஞ்சையுடன் கட்டித் தழுவும் காட்சி…. கோடி பொன்னுக்கு சமம்.

கடைசி நாட்களில் தனது குருவை உடனிருந்து கவனித்துக்கொள்கிறார் விவேகானந்தர். அவர் மறையும் காலம் நெருங்குவதை உணர்கிறார் ராமகிருஷ்ணர். சீடர்கள் அருகிலிருக்க ஒரு நாள் அவரது உயிர் பிரிகிறது.

படம் முழுக்க முழுக்க ஆச்சரியங்கள் தான். வசனங்கள் நமது மன இருளை அகற்றும் சுடர்விளக்குகள்.

உதாரணத்திற்கு….

* தெய்வம் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறக்கும்

* சத்தியத்திலிருந்து தவறுகிறவன் பூணூலை அணிய தகுதியற்றவன்.

* இந்த உலகில் மக்கள் தங்க சுக துக்கங்களுக்காகவும் தேவைகளுக்காகவுமே கடவுளிடம் அழுது புலம்புகிறார்கள். ஆனால் கடவுளை அடைய முடியவில்லையே, அவனை பார்க்க முடியவில்லையே என்று யாராவது அழுகிறார்களா?

காட்டில் தவம் செய்யும்போது, கேட்கப்படும் கேள்விகளும் ராமகிருஷ்ணர் அதற்கு கூறும் பதில்களும் வாவ்… சூப்பர். அதே போல, ராமகிருஷ்ணர் குறுக்கும் நெடுக்கும் நடக்கும்போது, சிவனாகவும் பார்வதியாகவும் காட்சியளிப்பது, பேசிக்கொண்டிருக்கும்போதே மோன நிலையை அடைந்து பரவசத்தில் மூழ்குவது, சாரதா தேவிக்கு காய்ச்சல் வரும்போது அன்னை காளி தேவியே  நேரில் வந்து பணிவிடைகள் செய்து குணப்படுத்துவது… ஒரு நொடி கூட நமது இமைகளை அசையவிடாமல் கட்டிபோடுகின்றன மேற்படி காட்சிகள்.

அன்னை மேரி குழந்தை ஏசு

ராமகிருஷ்ணர் மற்ற மதங்கள் மீது வைத்திருந்த மதிப்பு பற்றி கூட படத்தில் காட்சிகள் உண்டு. அன்னை மேரி குழந்தை ஏசுவை சுமந்திருக்கும் படத்தை இவர் பார்க்கும்போது ஒரு ஒளி தோன்றி இவருள் கலப்பது டச்சிங்.

பொதுவாக இது போன்ற அவதார புருஷர்களின் வாழ்க்கையை படமாக்குவது என்பது அத்துனை சுலபமல்ல. சினிமாத் தனம் இல்லாத சினிமா எடுக்கவேண்டும் என்றால் சும்மாவா? இதற்காகவே இந்த படத்தை இயக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் தயாரித்திருக்கும் திரு.ஜி.என்.தாஸ் அவர்களை பாராட்டியே தீரவேண்டும்.

பாத்திரங்கள் தேர்வு

பாத்திரங்கள் தேர்வு அனைத்தும் கனகச்சிதம். ராமகிருஷ்ணரின் தந்தை குதிராமாக வரும் டெல்லி கணேஷ் சொற்ப நேரமே வந்தாலும் சரியான தேர்வு.  ராமகிருஷ்ணராக நடித்திருக்கும் ஸாரி… வாழ்ந்திருக்கும் சசிக்குமார், மிக மிக பொருத்தமான தேர்வு. இதற்கு முன்பு பல படங்களில் சிறிய பெரிய வேடத்தில் அவரை பார்த்திருப்போம். மனதில் பதிந்திருப்பாரா என்று தெரியாது. இதில் பச்சக்கென்று நம் மனதில் ஒட்டிவிட்டார். அச்சு அசலாக அந்த மகானை நமது கண்களுக்கு முன்னாள் கொண்டு வந்து நிறுத்துகிறார் சசிக்குமார். இது போன்ற அவதார புருஷர்களின் பாத்திரங்களை ஏற்று நடிப்பது என்பது சாதாரண காரியமல்ல. நிச்சயம் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருளும் ஆசியும் இன்றி இதை அவர் செய்திருக்க முடியாது.

இதே போல, மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சரியான தேர்வு. அன்னை சாரதாதேவியாக வரும் சின்னத்திரை நட்சத்திரம் லஷ்மி தனது சாந்தமான நடிப்பாலும், வசீகரமான தோற்றத்தாலும் நமது மனதை கொள்ளை கொள்கிறார். இதே போல, அபீக்ஷா பட், விபீஷா, ரவீந்திரநாத் என அனைவரும் பாராட்டப் படவேண்டியவர்கள்.

இன்னொரு முக்கிய அம்சம்

படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், ராமகிருஷ்ணர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் வெவ்வேறு மொழி சார்ந்த பல மாநில கலைஞர்கள், மற்ற மதத்தவர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இது திட்டமிடப்பட்ட ஒன்றா இல்லை அப்படி அமைந்துவிட்டதா என்று தெரியவில்லை.

அமைதியான ஆர்பாட்டமற்ற இனிமையான இசை

பாராட்டப் படவேண்டிய மற்றொருவர், ஒளிப்பதிவாளர் விஜய் திருமூலம். எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் மிக மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். காட்சிகள் அந்தந்த சூழ்நிலைகளை மிக அழகாக பிரதிபலித்தது இவரது கைவண்ணமே. அதே போல, மார்கழி கச்சேரிகளில் சுருதி சேர்க்கும் தம்புரா போல, படத்திற்கு சுவை சேர்ப்பது இசை. ஆதிஷ் உத்தியன் இசையமைத்திருக்கிறார். அமைதியான ஆர்பாட்டமற்ற இனிமையான இசை.

படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்கலாம்… கோவில் பிரசாதத்துல போய் குறை கண்டுபிடிக்கிறதாவது? கிடைச்சதே நீங்க செஞ்ச பாக்கியம். பேசாம சாப்பிட்டு போவீங்களா…

தங்கள் குழந்தைகளுக்கு பக்தியையும் பண்பையும் ஊட்டி வளர்க்க விரும்பும் பெற்றோர் அனைவரும அவசியம் குடும்பத்தோடு காண வேண்டிய படம் ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்.

தங்கள் குழந்தைகளுக்கு பக்தியையும் பண்பையும் ஊட்டி வளர்க்க விரும்பும் பெற்றோர் அனைவரும அவசியம் குடும்பத்தோடு காண வேண்டிய படம் ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்.

பல்லாயிரக்கணக்கான மலர்களிலிருந்து பெறப்பட்ட ஒரு படி தேன் போல, நூற்றுக்கணக்கான பக்கங்களில் நாள் கணக்காக நாம் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு இணையற்ற மகானின்  வாழ்க்கை வரலாறு, இரண்டு மணி நேர திரைப்படமாக வந்திருக்கிறது. பார்த்து பலனடையவேண்டியது நம் கடமை!

பொதுவாகவே பெரிய பதிவுகள் எழுதி முடிக்கும்போது மிகவும் சோர்வாக இருக்கும். சில சமயங்களில் எழுதும்போதே அலுப்பாக இருக்கும். ஆனால் இந்த பதிவைப் பொறுத்தவரை சோர்வு என்பதே ஏற்படவில்லை. முடித்தபின்னர் அப்படி ஒரு மனநிறைவு.

(படத்தை பார்த்தவுடன் நான் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? விபரங்கள் அடுத்த பதிவில்…)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Also Check…. from our archives
ரஜினி ரசிகர்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் எறும்பு கதையும்
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=2481
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

[END]

12 Responses to “பார்த்’தேன்’, ரசித்’தேன்’, வியந்’தேன்’ — நம்மை பரவசப்படுத்திய ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்’”

 1. dr suneel dr suneel says:

  இந்த படம் எங்கள் ஊரில் வருமா என்று தெரியவில்லை. இப்படி ஒரு படம் வெளிவந்ததே நீங்கள் எழுதி தான் தெரியும் எனக்கு. ராமகிருஷ்ணர் இந்து மறுமலர்ச்சி காலகட்டத்தின் மிக முக்கியமான மகன். உருவ வழிபாடை கிண்டலும் கேலியும் செய்துகொண்டிருந்த பல அறிவு ஜீவிகளுக்கு சரியான விளக்கத்தை அளித்தவர். அவர் இந்திய ஆன்மீகத்தின் உலக அடையாளம். மிகுந்த பரவசத்தோடு எழுதியுள்ளீர்கள் என்பதை படித்தால் தெரிகிறது.

 2. vasanth vasanth says:

  sundarji,

  please buy and read bigraphy books of Paramahamsar and Swamiji written by Late Mr.Ra.Ganapathy from Sri Ramakrishna Mutt. The books are wonderful.

  ————————————————-
  Wow…. it reached me already. (Will tell the miracle how it reached me in next article.)
  - Sundar

 3. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

  Dear Sundar, Thank you very much for the valuable information about this film on Sri Ramakrishna Paramahamsar. I used to visit Ramakrishna Mutt in Mylapore frequently during my school days. I was a regular reader of monthly journals Ramakrishna Vijayam and Vedanta Kesari. But somehow I lost my touch with this Mutt in course of time. You have woken me up from my slumber, though this Mahaan is definitely in my prayers. I will definitely see this film and tell my friends also.

 4. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

  நான் இன்னும் படம் பார்க்கவில்லை….உங்கள் பதிவு படம் பார்க்கும் ஆவலை என்னுள் தந்துவிட்டது…!
  -
  இதுபோன்ற படங்கள் மக்களை சென்றடைய வேண்டும்….நாம் இதுபோன்ற படங்களுக்கு தரும் ஆதரவு பல நல்ல தரமான படங்களுக்கு வழிவகுக்கும்….! எனக்கு ராமகிருஷ்ணர் பற்றி கொஞ்சம் தெரியும்..ஆனாலும் அவரின் முழு வரலாற்றை என்னால் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அமையவில்லை…..இந்தப் படம் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை !
  -
  படத்தை உருவாக்கிய, உருவாகக் காரணமாய் இருந்த அனைவருக்கும் நன்றி ! உங்கள் தகவலுக்கும் நன்றி !
  -
  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
  -
  விஜய் ஆனந்த்

 5. murugan murugan says:

  அருமையான பதிவு சுந்தர்ஜி !!!
  உங்கள் பதிவைக்கண்டவுடன் இப்போதே இந்த திரைக்காவியத்தை காண மனம் துடிக்கிறது !!!
  விரைவில் நிச்சயம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தரிசனத்தை அனுபவித்து அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன் !!!
  இந்த திரைக்காவியத்தை இயக்கி தயாரித்த திரு தாஸ் அவர்களுக்கும், அதில் கதாபாத்திரங்களாக வாழ்ந்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தலைவரின் ரசிகர்கள் சார்பில் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுதல்களும் !!!

 6. chithamparam chithamparam says:

  இறைவன் எங்கோ தொட்டுவிட முடியாத துாரங்களில் இல்லை இருந்தும் ஏன் எம்மால் அவனைக்காண முடியவில்லை?

  நாம் எங்கே அவனைத் தேடுகின்றோம்
  அவனிடமல்லவா தேடுகின்றோம்!

 7. Satheesh Satheesh says:

  I too watched last week. Nice movie. neat presentation. A must watch movie.

 8. manju manju says:

  thanks sundar sir. i am a former student of ramakrishna mission. after reading your post i am feeling to watch the movie at once. this weekend itself will take my husband and son to watch d movie. ramakrishna paramahamsa is a very powerful yogi.
  manju

 9. Prasath Prasath says:

  Thanks sunder for posting this article..that too on thursday…A very good narration …Ramakrishna vijayam monthly magazines are a must read …

 10. Sakthivel Sakthivel says:

  நான் கூட விவேகானந்தர் பக்தன் தான். கண்டிப்பாக இந்த வார இறுதியில் இந்த படத்தை பார்ப்பேன். உங்கள் அனுபவத்தை பஹிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

 11. ஈ. ரா ஈ. ரா says:

  ஜி,

  குடும்பத்தை அழைத்துக் கொண்டு நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்தி விட்டது.

  ஆன்மீக விஷயங்களை நவீன காலத்தில் திரைப்படமாக எடுப்பது (நீங்கள் சொல்லி இருப்பதுபோல் சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல்) மிகக் கடினமானது என்பதால் எப்படி எடுத்திருப்பார்கள் என்ற ஐயம் இருந்தது. தற்போது நீங்கி விட்டது.. நிச்சயம் பார்க்க வேண்டும்.

  நன்றி..

  —————————————————-
  Very good ji. The movie is now running in Gopikrishna 4 shows.
  - Sundar

 12. Duraraj Duraraj says:

  I have read about ramakrishna ‘s life.i hope that someone would make a film .my full support is with this film

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates