You Are Here: Home » Featured, VIP Meet » “என்னுடன் ஸ்கூட்டரில் உட்கார ரஜினி சார் பயந்தார்!” - ‘உழைப்பாளி’ ஸ்கூட்டர் ஐயரின் கலகல அனுபவங்கள்!

டபழனி மற்றும் சாலிக்கிராமம் பகுதியில் இருப்பவர்களுக்கு இந்த ஸ்கூட்டர் ஐயரை தெரியாமல் இருக்க முடியாது. பல ஆண்டுகளாக அந்த பகுதியில் ஸ்கூட்டரில் சுற்றிக்கொண்டிருக்கும் இவர் அந்த பகுதியின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டார். ‘ஸ்கூட்டர் ஐயர்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு.ராமகிருஷ்ண ஐயர், 1993 ஆம் ஆண்டு வெளியான ‘உழைப்பாளி’ படத்துக்கு பிறகு, ‘உழைப்பாளி ஐயர்’ என்றே அழைக்கப்படுகிறார். பெயருக்கேற்றார்போல கடும் உழைப்பாளி இவர்.

நான் அலுவலகம் செல்லும்போது வழியில், வடபழனியில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் சுதாவில் ஃகாபி சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கம். அப்படி அங்கு நான் செல்லும் பல சமயம், ராமகிருஷ்ண ஐயரை அங்கு பார்த்திருக்கிறேன். ஆனால் பேசியது கிடையாது.

எதிர்பாராத அறிமுகம்

சமீபத்தில் ஒரு நாள் அப்படி நான் சென்றிருந்தபோது, என் டேபிளிலேயே என் எதிரிலேயே வந்து உட்கார்ந்தார் ஐயர். அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்தேன். பின்னர், என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, சிறிது நேரம் பேசினேன். சிறிது நேரத்திலேயே நம்முடன் ரொம்பவும் ஜோவியலாகிவிட்டார் ஐயர். நம் தளத்தை பற்றி சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டவர், “வீட்டுக்கு வாங்களேன்… விலாவரியா பேசுவோம்” என்றார்.

அடுத்த சில நாட்கள் கழித்து ஒரு ஞாயிறன்று நண்பர் விஜய் ஆனந்துடன், பிக் பஜார் எதிரே உள்ள அவரது அப்பார்ட்மென்ட்டில் சந்தித்தேன்.

நம்மை வரவேற்றவர், சிறிது நேரத்தில் மலே அங்கவஸ்திரம் போன்று அணிந்துகொண்டு, உரையாடலுக்கு தயாராக வந்தார்.

இருப்பதை வைத்து திருப்தியுடன் வாழ்கிறேன்

“நான் கடவுளை பரிபூரணமாக நம்புகிறவன். முன்பு போல தமிழ் திரைப்படங்களின் பூஜைகள் எனக்கு வருவதில்லை. வாய்ப்புகள் மழையாக பொழிந்தாலும் நான் சந்தோஷப்படுவதில்லை. அவை வற்றிப்போனாலும் நான் கவலைப்படுவதில்லை. இறைவன் எனக்கு அளித்திருப்பதை வைத்து திருப்தியுடன் வாழ்கிறேன். அவன் கருணையில் என் வண்டி ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது” என்கிறார் இந்த உழைப்பாளி.

கடந்த 43 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகர் சங்கத்தில் இவர் ஒரு உறுப்பினரும் கூட.

தனது கேரியரில் மறக்க முடியாத நபர்கள் என்றால், அது இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், இயக்குனர் பி.வாசுவையும், ராம நாராயணனையும் குறிப்பிடுகிறார். இவர்கள் தவிர இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர், கே.ஷங்கர், எஸ்.எஸ்.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், சி.வி.ராஜேந்திரன் ஆகியோரையும் மறக்கமுடியாதவர்கள் பட்டியலில் குறிப்பிடுகிறார். அப்புறம் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இவர் பூஜை போடும் திரைப்படங்களில்; ஏதாவது ஒரு காட்சியில் இவரை காட்டிவிடுவது என ஒரு செண்டிமெண்ட் இருக்கிறது தமிழ் சினிமாவில். அப்படி இவர் தலைகாட்டினால் நிச்சயம் அந்தப் படம் வெற்றிப்படம் தான்.

ரஜினி இவரிடம் பெற்ற ஆசி

சூப்பர் ஸ்டாருடன் நடித்த பழகிய பிரத்யேக அனுபவங்கள் பற்றி பேசும்போது….

“எழுபதுகளின் நடுவே வெளியான ‘வணக்கத்துக்குரிய காதலியே’ படத்தில், ஸ்ரீதேவிக்கு மந்திரம் சொல்லி பாலாபிஷேகம் செய்யும் ஒரு காரக்டரில் நடிக்க என்னை அழைத்து சென்றார்கள். அப்போது தான் நான் ரஜினியை முதன் முறியாக பார்த்தேன். அப்போது அவர் ஒரு சாதாரண நடிகர். என்னைப் பார்த்ததும், “எவ்வளவு காலமா நீங்க இந்த சினிமா துறையில இருக்கீங்க? நான் உங்களை பல படங்களில் பார்த்திருக்கிறேனே…” என்றார் ஆச்சரியத்துடன்.

அதற்கு நான், “1960 ஆம் ஆண்டிலிருந்து நடித்துக்கொண்டிருக்கிரேன். கிட்டத்தட்ட 1000 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டேன்” என்றேன்.

“எல்லா மொழிகளிலும் நடித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“ஆமாம்… தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட எல்லா மொழிகளிலும், என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர், ராஜ்குமார் என எல்லாருடனும் நடித்திருக்கிறேன்” என்றேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனே என்னிடம் ஆசி பெற்றார்.

“கே.பாலச்சந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன் உள்ளிட்ட மூத்த இயக்குனர்கள் என் மீது ரொம்ப மரியாதை வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் ரஜினி பார்த்திருக்கிறார். இப்போல்லாம் இளம் நடிகர்கள் ஒரே படத்தில் ஓகோவென்று புகழின் உச்சிக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் ரஜினி அப்படியல்ல. ஒவ்வொரு அடியாக, வளர்ந்தவர் அவர். அதனால் தான் அவரது வளர்ச்சி நிரந்தரமாக இருக்கிறது.”

ரஜினியின் வளர்ச்சிக்கு பின்னால்…

இன்னைக்கு அவர் யாராலும் கற்பனை செஞ்சி கூட பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்க்கு அவர் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை.

ரஜினி சார் கூட அதுக்கப்புறம் நெறைய படம் ஒர்க் பண்ணியிருக்கேன். எப்போ என்னை பார்த்தாலும், நான் எவ்ளோ பெரிய கூட்டத்துல இருந்தாலும் என்னை அடையாளம் கண்டுக்குவார். “என்ன ராமகிருஷ்ண ஐயரே சௌக்கியமா இருக்கீங்களா?”ன்னு கேட்பாரு. கொஞ்சம் ஜாலி மூடில் இருந்தால் போதும், ஒரே கிண்டல் கேலி தான்.

‘வீரா’ படத்தின் போது, மாடத்துல கன்னி மாடத்துல சாங் வரும். அதுல, எனக்கு கொஞ்சம் தனி மூவ்மென்ட் கொடுத்திருப்பாங்க. அது ரஜினி சார் சொன்ன ஐடியா தான். அந்த பாட்டு ஷூட்டிங் முடிஞ்சவுடன், “எவ்வளவோ படத்துல நடிச்சிருக்கீங்க. இது போலா யாராவது உங்களுக்கு கொடுத்திருக்காங்களா?”ன்னு கேட்டார். “அதனாலா தான் நீங்க தி கிரேட் சூப்பர் ஸ்டாரா இருக்கீங்க”ன்னு சொன்னேன்.

“ஐய்யயோ பெரியவங்க நீங்க அப்படி சொல்லக்கூடாது” என்று பதறிப்போய்விட்டார்.

யாருக்கு எவ்ளோ வயசு?

அவர்கிட்டே இருக்குற ஸ்பெஷாலிட்டியே அவரோட அடக்கம் தான். ஒரு முறை ஒரு படத்தோட ஷூட்டிங்கப்போ நானும் அவரும் பேசிகிட்டிருந்தோம். “ராமகிருஷ்ணா ஐயரே உங்களோட வயசு என்ன?” அப்படின்னு கேட்டார். நான் வேண்டுமென்றே “நாற்பது” என்று குறைத்து சொன்னேன். அதற்க்கு அவர் “இருபது வருஷத்த்க்கு முன்பா?” அப்படின்னார்.

“என்னோட வயசு என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்?” என்றார். நான் கரெக்டா, “நாற்பத்தாறு!” என்றேன். ஆச்சரியப்பட்டவர் அதெப்படி அவ்ளோ கரெக்டா சொல்றீங்க?ன்னு கேட்டார்.

“வணக்கத்துக்குரிய காதலியே படத்துல இருந்து உங்களை பார்த்துகிட்டு வர்றேன். அதுனால தெரியும்” என்றேன்.

ஹிந்தில “அந்தா கானூன்” படத்துல நடிக்க சான்ஸ் வாங்கி கொடுத்தார் ரஜினி. பிளட் ஸ்டான்ல கூட வருவேன். “என்ன ஐயரே இங்க்லீஷ் படத்துல கூட நடிக்க வந்துடீங்க” என்று கேட்டு சிரித்தார். “நீங்க வரும்போது நான் வரக்கூடாதா”ன்னு கேட்டு சிரிச்சேன்.

‘உழைப்பாளி’ கலகல அனுபவங்கள்

இவர் படுபாப்புலரான ‘உழைப்பாளி’ பட அனுபவங்களை பற்றி கேட்டோம்….

“ஊட்டியில் உழைப்பாளி ஷூட்டிங். நான் ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருக்கும்போது, ரஜினி சார் சிவன் போல வேடமணிந்து என்னிடம் வந்து லிப்ட் கேட்பது போல காட்சி. நான் அவரை ஏற்றிக்கொண்டு போவேன். நான் வண்டி ஓட்டும்போது ரஜினி ரொம்பவே பயந்தார். எங்கே நான் அவரை கீழே தள்ளிவிட்டுடுவேனோன்னு.”

“பேசாம நான் அவரை உட்கார வெச்சு ஸ்கூட்டர்  ஓட்டுறேனே”ன்னு வாசு சார் கிட்டே ரஜினி சொல்ல, அதற்கு வாசு சார்…. “நீங்க வேற… அவர் பேரே ஸ்கூட்டர் ஐயர் தான். அந்தளவு ஸ்கூட்டரை சூப்பரா ஓட்டுவார். மெட்ராஸ்லயே எப்போவுமே ஸ்கூட்டரில் தான் சுற்றிக்கொண்டிருப்பார். ஸ்கூட்டர் ஓட்டுவதில் நல்ல அனுபவம் இருக்கிறது ஐயருக்கு. நீங்க தைரியமா உட்காருங்க ரஜினி” என்று அவரை கன்வின்ஸ் செய்த பிறகு தான் என்னுடன் வண்டியில் உட்கார்ந்தார்.

ஒரு கட்டத்துல படிகட்டுல எல்லாம் வண்டி ஓட்டுவேன். அதை பார்த்து ரஜினி ரொம்ப ஆச்சரியப்பட்டார்.

அந்த சீனுக்கு தியேட்ட்டர்ல் நல்ல ரெஸ்பான்ஸ். ஒரே கைத்தட்டல் தான். படம் ரிலீசான சமயம், இங்கே ஆல்பட், கமலா அப்புறம் சௌத்ல பல தியேட்டர்ஸ்ல அந்த சீனை ஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் கலாட்டா பண்ணினாங்கன்னா பார்த்துகொங்கலேன். பத்திரிக்கைகளும் அந்த சீன நல்ல காமெடியா இருந்ததுன்னு எழுதினாங்க. அந்தப் படத்துக்கு பிறகு என் பேர் “உழைப்பாளி ஐயர்” அப்படின்னே மாறிடுச்சு.

“இவருக்கு நான் கொடுக்குறதா? முடியாது

ஊட்டில அந்தப் படம் ஷூட்டிங் முடிஞ்சவுடன், வாசு சார் டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் ரஜினி சாரை விட்டு பணம் கொடுத்தார். ரஜினி அதை எல்லாருக்கும் கொடுத்துட்டு வந்தார். என் முறை வர்றபோ… ரஜினி சார் “இவருக்கு நான் தர்றதா?” இவர் கை தான் எப்பவும் (கொடுப்பதற்கும் ஆசி வழங்குறதுக்கும்)  தூக்கிக்கொண்டு இருக்கணும். தாழ்ந்துபோகக்கூடாது. இவருக்கு என் கையால கொடுக்க முடியாது!” அப்படின்னு சொல்லிட்டார். அப்புறம் வாசு சார் தான் எனக்கு கொடுத்தார்.

“இது தவிர அந்த பட ஷூட்டிங்ல மறக்கமுடியாத அனுபவம்?” என்று நாம் கேட்க்க, சற்று யோசித்தவர், “அந்த சீன்ல நான் வண்டி ஓட்டும்போது, லோகத்துக்கே படியளக்குற பகவான் நீங்க. இப்போ நேக்கு பசிக்கிறது. கொஞ்சம் படியளங்கோளேன் ” அப்படின்னு சொல்லுவேன். உடனே, ரஜினி சார் பக்குத்துல வண்டில இருக்குற ஆப்பிளை சூலாயுதத்துல குத்தி எடுத்து எனக்கு தர்ற மாதிரி காட்சி வரும். அந்த சீனை ஷூட் பண்ணபோ, ஒவ்வொரு முறையும் சூலாயுதம் உடைஞ்சிடும். ஆப்பிள் கரெக்டா அதுல சொருகாது. கடைசீயில அதை இங்கே வாஹினி ஸ்டூடியோல செட் போட்டு எடுத்தாங்க” என்றார்.

உழைப்பாளிக்கு பிறகு ரஜினி என்னை பார்க்கும்போதெல்லாம் அடிக்கடி என்னிடம், “ஐயரே நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என்பார். “இல்லை இல்லை. நான் இங்கே தான் இருக்கிறேன்” என்பேன்.

‘படையப்பா’ படத்தை அவர் தயரிச்சப்போ, “செண்டிமென்ட்டா நீங்க வந்து பூஜை போட்டா நல்லாயிருக்கும்?”னு சொன்னார். அவரோட ‘சந்திரமுகி’ வரைக்கும் நான் தான் பூஜை. நான் பூஜை போட்ட ரஜினி படங்கள் பெரும்பாலும் சில்வர் ஜூபிலி தான்.

எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியில ‘ரஜினி 25′ நடந்தப்போ அங்கே ஒரு வாரம் நான் இருந்தேன். ரஜினி சார் சிலை ஒன்னை கூட வெச்சிகிட்டு ஸ்கூட்டர்லயே சுத்தி சுத்தி வருவேன்.

“அப்போ நான் உங்க கூட ஃபோட்டோ எடுத்திருக்கேன் சார்!” என்றேன். ரொம்ப சந்தோஷப்பட்டார் அதற்கு.

“குசேலனுக்கு பூஜை போட என்னை கூப்பிடலே. கடைசியில, ரஜினி சாரும் வாசு சாரும் ரொம்ப வருத்தப்பட்டிருக்காங்க. “ராமகிருஷ்ண ஐயரை ஏன் கூப்பிடலே?”ன்னு கேட்டிருக்காங்க.

“ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் ரஜினி. அவர் மேன்மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். காரணம் அவரை நம்பி சினிமாவில் பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள்” என்கிறார் இந்த உழைப்பாளி.

இன்றும் பெரும்பாலான இளம் நடிகர்கள் இவரை பார்த்தால் இவரது கால்களில் விழுந்து ஆசி பெறுகிறார்களாம்.

சென்ற ஆண்டு ரஜினி அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது ரசிகர்கள் ஏற்பாடு செய்த பல பூஜைகள் மற்றும் ஹோமங்களில் கலந்துகொண்டு நடத்திக் கொடுத்தேன். அவருக்காக பிரார்த்தனை செய்தேன். அதே போல் நான் கோயம்பேடு அருகே ஒரு விபத்தில் சிக்கியபோது, எனக்கு ஓடோடி வந்து உதவியர்கள் ரஜினி ரசிகர்கள் தான். இதை என்னால் மறக்க முடியாது. கந்தசாமி, எஸ்.ஐ.சுப்பையா ஆகியோர் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய நேரத்தில் சேர்த்து நல்லா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆகையால் பிழைத்தேன். அந்த நேரத்தில் எனக்காக சாய் பாபாவிடமும் ராகவேந்திர சுவாமிகளிடமும் ரசிகர்கள் நிறைய பேர் பிரார்த்தனை செய்தனர். இந்த செய்தியெல்லாம் ரஜினி அவர்கள் கேள்விப்பட்டு ரசிகர்கள் என்பாள் வைத்திருக்கும் அன்பை கண்டு நெகிழ்ந்துபோயவிட்டார். சந்தோஷப்பட்டார். ஆகையால் நான் என்றென்றும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

பல திரைப்படங்களுக்கு பூஜை போட்டு பல தயாரிப்பாளர்கள் பொருளீட்ட காரணமாக இருந்திருக்கும் இவர் தற்போது பிக்பஜார் எதிரே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடைகை ஃபிளாட்டில் தான் இருக்கிறார். இத்துனை ஆண்டுகள் திரைத் துறையில் இருந்தாலும் பெரிதாக ஒன்றும் சேர்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. தன் வாரிசுகளை நல்ல முறையில் வளர்த்து செட்டில் செய்துவிட்டாலும், இந்த வயதிலும் தனது சொந்தக்காலில் நிற்பதையே விரும்பும் இந்த உழைப்பாளி, தனது செலவுகளை தானே பார்த்துக்கொள்கிறார். இப்போதும் புதுப்பட பூஜைகள், அலுவலக பூஜைகள், கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், க்ரஹப் பிரவேசம், திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை வைதீக முறைப்படி நடத்தி தருகிறார்.

சுகர் பிரச்னையால் அவதிப்படும் இவருக்கு முன்புபோல படங்கள் இல்லை. இவருக்கு படம் குறைஞ்சதும் தமிழ் சினிமாவில் ஹிட் படங்களும் வெள்ளிவிழா படங்களும் குறைஞ்சதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு போல. இருந்தாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு வாய்ப்புகள் பூஜை போட வருகிறது. இவருக்கு முழு மனதுடன் சென்று பூஜை போட்டு வருகிறார்.

கெடுப்பவர்களும் நன்றாக இருக்கட்டும்

“பாலிடிக்ஸ் காரணமாக எத்தனையோ பேர் என் வாய்ப்பை கெடுத்து எனக்கு வரவேண்டியவற்றை தடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் இதுவரை யாரையும் தூற்றியது கிடையாது. எல்லாரும் எந்தக் குறைவும் இன்றி நன்றாக இருக்கவேண்டும் என்று தான் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறுகிறார் இந்த மனிதநேயர்.

“அந்த எண்ணம் உள்ளவரை உங்களுக்கு குறையொன்றுமில்லை ஐயா” என்றேன்.

எங்களுக்கு ஃகாபி கொடுத்து கௌரவித்தவர், எனது பணியின் தன்மை மற்றும் என்னைப் பற்றிய சுய விபரங்களை கேட்டார். அவரின் கால்களில் வீழ்ந்து நானும் நண்பர் விஜய் ஆனந்தும் தனித் தனியாக ஆசிபெற்றோம். உள்ளே சென்று கொஞ்சம் பால்கோவா எடுத்துக்கொண்டு வந்தவர், “இந்தாங்க பிடிங்க சுவீட். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இன்னும் மூணே மாசத்துல நல்ல செய்தி சொல்வீங்க பாருங்க. என் ஆசிகள்!” என்றார்.

ஐயர் கடைசியாக எனக்கு சொன்ன அவரது பாலிஸி சம்பந்தப்பட்ட விஷயம் செம காமெடி. “எவ்வளவோ கல்யாணத்தை சினிமாவுல நடத்தி வெச்சிருக்கேன். நிஜத்துலயும் நடத்தி வெச்சிருக்கேன். ஆனா பாருங்க இந்த லவ் மேரேஜஸ்ல மட்டும் நான் கலந்துக்கிறது கிடையாது தெரியுமோ… ஏன்னா நாளைக்கு ஏதாவது பிரச்னைன்னா ‘இவன் தாண்டா கல்யாணத்தை பண்ணி வெச்சான்’னு சொல்லி என்னையும் சேர்த்து கோர்ட் கேஸ்ன்னு அலையவிடுவாங்கல்ல?” என்றார் சற்று கலவரத்துடன்.

“இருந்தாலும் நீங்க ஸ்பெஷல். எப்படியிருந்தாலும் சொல்லுங்க. உங்களுக்காக
வர்றேன்!” என்றார் அடுத்து.

“உங்கள் வெப்சைட் ரீடர்ஸ், மற்றும் ரஜினி சாரின் ரசிகர்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துக்களை சொல்லுங்கோ. எல்லாரும் எல்லாமும் பெறட்டும்! சர்வேஸ்வரன் துணையிருப்பான்!” என்றார்.

நல்லோர் வாக்கு பலிக்கட்டும்!

தற்போது ‘சுட்டிப் பையனும் நான்கு திருடர்களும்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் இந்த காரக்டருக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று பிடிவாதம் பிடித்து தயாரிப்பாளரிடம் பேசி இவரை ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது. படம் வெற்றிபெற்று இவருக்கு மேன்மேலும் வைப்புகள் வர இறைவனை வேண்டிக்கொண்டு வாழ்த்துவோமாக.

தொடர்புக்கு : H.ராமகிருஷ்ண ஐயர், மொபைல் எண்: 98411 31452 (கிரஹப்பிரவேசம், கல்யாணம், கணபதி ஹோமம், அலுவலகம் மற்றும் சினிமா பட பூஜைகள் மற்றும் விசேஷங்கள் நடத்தித் தரப்படும்!)

[END]

17 Responses to ““என்னுடன் ஸ்கூட்டரில் உட்கார ரஜினி சார் பயந்தார்!” - ‘உழைப்பாளி’ ஸ்கூட்டர் ஐயரின் கலகல அனுபவங்கள்!”

 1. dr suneel dr suneel says:

  உழைப்பாளியின் அந்த காட்சி பிரமாதமா இருக்கும்..சிக்னலில் நின்னுட்டு- பகவான் போ சொன்னார் அதனால போனேன் - அப்டின்னு சொல்லுவார் நல்லா இருக்கும்..காலம் தான் எத்தனை வேகமா ஓடுது ..ரொம்ப வயசாய்டுச்சு அவருக்கு..

 2. KUMARAN KUMARAN says:

  UZHAIPALI IYER எங்க வீட்ல எல்லோருக்கும் FAVORITE

 3. murugan murugan says:

  உழைப்பாளி ஐயரின் ஆசிர்வாதத்தை எங்கள் வீடு தேடி கொண்டு வரச்செய்த சுந்தர் ஜி அவர்களுக்கு மிக்க நன்றி !!!
  தனது அனுபவங்களை இன்முகத்தோடு நம்மோடு பகிர்ந்து கொண்ட திரு ராமகிருஷ்ண ஐயர் அவர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம் !!!

 4. amarnath amarnath says:

  I don’t know what the news is about??? but happy to see ramakrishna sir the man who made us laugh in uzhaippali, living so simple in real life. May he live happily forever with his family :)

 5. It was a pleasant surpise for me to read this artical and the compilation of your interveiw is more than seeing a video. Great stuff and effort.

 6. Prasath Prasath says:

  காலத்தை வென்ற நல்ல மனிதர்களின் சந்திப்பை எங்கள் இல்லம் தேடி கொண்டு வரும் சுந்தருக்கு எங்கள் அன்பு நன்றி..

 7. S.Vijay S.Vijay says:

  அவர் தலைவரைப் பத்தி சொன்னது எல்லாம் இந்த வரிகளைப் பார்த்தவுடன் மறந்து விட்டது
  //“இருந்தாலும் நீங்க ஸ்பெஷல். எப்படியிருந்தாலும் சொல்லுங்க. உங்களுக்காக
  வர்றேன்!” என்றார்//
  சுந்தர்…. என்ன மேட்டரு ???? ;) )

 8. chithamparam chithamparam says:

  நன்று. இந்த ராசியுள்ள நல்ல மனிதரை திரையுலகம் நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

 9. RAJA RAJA says:

  இப்படி நல்ல மனது உள்ளவரை கடவுள் நல்ல படியாக தான் வைப்பார்.இந்த பதிவு மூலம் எங்கள் தலைவருக்கு செய்தி போய் மீண்டும் நீங்கள் மீண்டும் பிஸி ஆக வாழ்த்துக்கள் அய்யா

 10. raajeshtve raajeshtve says:

  நேர்காணல் படு அருமை. சாஸ்த்ரிகளின் பேச்சு மற்றும் அவரின் எளிமை மிகவும் வியக்க வைக்கிறது. சமீப கால உங்கள் பதிவுகளில் மிகவும் ரசித்து நிதானமாக படித்ததில் இந்த பதிவும் ஒன்று. மிக்க நன்றி சுந்தர்.

 11. David Baasha David Baasha says:

  சுந்தர் சார் எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உங்கள் நல்ல மனதிற்கு நல்ல மனிதர்களின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும்.இதை போன்ற பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 12. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

  அருமையான உரையாடல் சுந்தர்… நமக்காக நேரம் ஒதுக்கிய திரு.ராமகிருஷ்ண ஐயர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்…
  .
  மாரீஸ் கண்ணன்

 13. Thalaivarudan nerungi palagiya uzhaipali iyer pondra arithanavargalin nerkanalai thanthamaiku nanri na.

 14. senthil, pammal senthil, pammal says:

  Dear sir, thanks for giving real life news (past & present). very useful interview/discussion. it made me to remember past years’ happenings.(90′s)
  and thanks to Shri.R.K.Iyer.

 15. napoleon.s.kumar napoleon.s.kumar says:

  //இன்னும் மூணே மாசத்துல நல்ல செய்தி சொல்வீங்க பாருங்க. என் ஆசிகள்!” என்றார்.//
  இதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates