









You Are Here: Home » Featured, VIP Meet » வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு…. பாடகர் திரு.’படையப்பா’ ஸ்ரீராம் அவர்களுடன் ஒரு சந்திப்பு! விஜயதசமி ஸ்பெஷல்!!
‘படையப்பா’வில் வரும் ‘வெற்றிக்கொடி கட்டு’ பாடலை விரும்பாத ரஜினி ரசிகர்கள் இருக்க முடியாது. சொல்லப் போனால் ரஜினி ரசிகர்கள் என்ற வட்டத்தையும் தாண்டி ஒரு மிகப் பெரிய வட்டத்தில் ரசிக்கப்பட்ட பாடல் அது. சூப்பர் ஸ்டாரின் படங்களில் வந்த தன்னம்பிக்கை பாடல்களில் சிறப்பான இடத்தை பெற்ற பாடல் அது.
எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த MOTIVATIONAL பாடல்களில் ஒன்று இது.
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா….தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா… பல்லவியே அடி தூள் ரகமல்லவா?
எத்தனை அருமையான வைர வரிகள். வைரமுத்து திரு.ரஜினிக்காகவும் அந்த பாத்திரத்துக்காகவும் மட்டும் எழுதிய பாடல் அல்ல இது. கேட்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் எழுதப்பட்ட பாடல். வாழ்க்கையில் தடைகளை கண்டு நொறுங்கிப் பொய் உட்கார்ந்துவிடும் ஒவ்வொருவருக்காகவும் எழுதப்பட்ட பாடல்.
இந்தப் பாடல் மற்றும் அது பிறந்த கதை, எழுதப்பட்ட நோக்கம் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவு தான் இந்த சந்திப்பு.
————————————————————————————————————————————————
Visit www.rightmantra.com, our new website dedicated to Spirituality, Self-Development, Health & Moral values! Thank you!!
- Sundar
————————————————————————————————————————————————
தெரிந்து கொள்ள வேண்டிய மிகப் பெரிய உண்மை
இந்த பாடலை பொறுத்தவரை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய உண்மை என்னவென்றால் இந்த பாடலை பாடியது பல நினைத்துக்கொண்டிருப்பது போன்று மலேசியா வாசுதேவன் அல்ல. பாலக்காடு ஸ்ரீராம் என்பவர் தான். ஆடியோ காஸெட்டில் அச்சுப் பிழை காரணமாக தவறுதலாக மலேசியா வாசுதேவன் பெயர் இடம் பெற்றுவிட்டது. இதை மலேசியா வாசுதேவன் அவர்களே பல மேடைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாலக்காட்டில் பிறந்த ஸ்ரீராமுக்கு சிறு வயது முதலே இசையில் அலாதி பிரியம் உண்டு. அவருடைய தாயார் திருமதி.ஜெயலக்ஷ்மியிடமே இவர் சங்கீதத்தை கற்க துவங்கினார். இசைக்கருவிகளை இசைப்பதில் இவருக்கு இருக்கும் அலாதி ஆர்வத்தை கண்டு மகிழ்ந்த இவரது பெற்றோர் இவரை ஒரு இசை மாணவனாகவே வளர்த்தனர். கோழிகோடு பல்கலைகழகத்தில் இசைப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.
கீ-போர்ட் வாசிப்பதிலும் ப்ளூட் வாசிப்பதிலும் மிகுந்த ஈடுபாடுள்ள இவர் ஒரு சிறந்த பின்னணி பாடகராக பிற்காலத்தில் மாறினார். இவரது மனைவி திருமதி.பேபி ஸ்ரீராமும் ஒரு இசைக் கலைஞரே. கேரளா பல்கலைழகத்தில் இசையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் திருமதி.ஸ்ரீராம். இவர்களுக்கு பரத் மற்றும் அனகா என்று இரு குழந்தைகள் உண்டு.
இசைப் புயலின் இசையில் படையப்பா, உயிரே, தாஜ் மஹால், என் சுவாசக் காற்றே, உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறார் ஸ்ரீராம். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் சாமி, அருள், அந்நியன் ஆகிய படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். விக்ரம் நடித்த ‘சாமி’ படத்தில் பட்டையை கிளப்பிய ‘திருநெல்வேலி அல்வாடா’ பாடலை பாடியது இவர் தான்.
தற்போது பல படங்களில் பின்னணியும் பாடி வருகிறார். பின்னணி பாடலை தவிர ஸ்ரீராம் அவர்களுக்கு இசையமைப்பாளர் அவதாரமும் உண்டு. ஒரு சில மலையாளப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது ‘சுராங்கனி’ என்னும் தமிழ் படம், கலாபவன் மணி நடிக்கும் ‘கரிபியன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பல பக்தி ஆல்பங்களில் பக்திப் பாடல்களும் பாடியிருக்கிறார். ‘ஸ்வரர்நவம்’ என்னும் ஆடியோ நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இசைப் புயல் ஏ,ஆர்,ரஹ்மானுக்கு இவர் மிகவும் நெருங்கியவர். எந்த நேரமும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேசும் உரிமை பெற்றவர்களுள் ஒருவர்.
நமது தளத்தின் சந்திப்புக்காக இன்ஸ்பிரேஷனாக யாரையாவது சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ‘வெற்றிக்கொடி கட்டு’ பாடிய ஸ்ரீராம் தான் நினைவுக்கு வந்தார். அந்த அற்புதமான பாடல் பற்றியும் அது உருவான விதம் பற்றியும் உரையாடி பல விஷயங்களை வெளியே கொணரவேண்டும் என்று முடிவு செய்து, ஸ்ரீராம் அவர்களை தொடர்பு கொண்டபோது, அடுத்த சில நாட்களிலேயே அப்பாயின்ட்மெண்ட் கிடைத்தது.
எழுதுவது என்பது என் சௌகரியம். ஆனால் ஒரு முக்கியப் பிரமுகரை சந்திப்பது என்பது அவர்கள் சௌகரியம். எனவே அவர்களுக்கு ஒத்துவரக்கூடிய நேரத்தில் தவறாது போய் சந்தித்துவிட வேண்டும். ஸ்ரீராம் அவர்களை சந்திப்பது இறுதியானவுடன், ஒரு நன்னாளில் இந்த சந்திப்பை பதிவிடவேண்டும் என்று முடிவு செய்தேன். விஜயடமியை விட ஒரு நல்ல நாள் கிடைக்குமா? இந்த நன்னாளில் இப்பதிவை படிப்போரை எல்லாம் தன்னம்பிக்கை கொள்ளச் செய்யவேண்டும் என்பதே என் நோக்கம்!
சந்திப்புக்குள் செல்வோமா?
Ready… start….
விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சந்திப்பு நடைபெற்றது. நான், நண்பர் ஹரி சிவாஜி மற்றும் விஜய் ஆனந்த ஆகியோர் சென்றிருந்தோம்.
எங்களை வரவேற்றவர், ஹாலில் எங்களை சௌகரியமாக அமரச் செய்தார். முதல் பத்து நிமிடங்கள் அவரது துறை மற்றும் தொழில் மற்றும் தற்போது பணிபுரியும் படங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். (அது பற்றி மேலே தந்துவிட்டேன்.) பின்னர் நம் தளம் பற்றியும் ரஜினி அவர்கள் பற்றியும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் தொடங்கியது எங்கள் உரையாடல்.
இது பேட்டி போல அல்லாமல் உரையாடல் போலவே அமைந்துவிட்டது. அதே நடையிலேயே தருகிறேன். சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்.
நாம் : ரஜினி சாரை நீங்கள் முதலில் பார்த்த அனுபவத்தை சொல்லுங்களேன்….
ஸ்ரீராம் : அவரை நான் முதலில் பார்த்ததே சுவாரஸ்யமான ஒரு அனுபவம் தான். அப்போ நான் ரஹ்மான் சாரோட ஸ்டூடியோவுல இருந்தேன். நைட் ஒரு ரெண்டு மணியிருக்கும். ஏதோ ஸாங் வொர்க் போயக்கிட்டுருந்தது. அப்போ பார்த்தீங்கன்னா… எனக்கு கிட்டத்தட்ட பாதி தூக்கம். யாரவது டீ வாங்கிட்டு வந்தா நல்லாயிருக்குமேன்னு தோணிச்சு. பின்னாடி ஏதோ கார் சத்தம் கேட்டிச்சு. திரும்பிப் பார்த்தா… ப்ளூ கலர் லுங்கி… வொயிட் குர்தா ….. திடுதிப்னு ரஜினி சார் நிக்கிறார். எனக்கு ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியலே. கையும் ஓடலே. காலும்ஓடலே. பேச்சும் வரலை.
திரும்பிப் பார்த்தா… ப்ளூ கலர் லுங்கி… வொயிட் குர்தா ….. திடுதிப்னு ரஜினி சார் நிக்கிறார். எனக்கு ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியலே. கையும் ஓடலே. காலும்ஓடலே. பேச்சும் வரலை.
என்னெனவோ பேசியிருக்கார் என்கிட்டே. அவரை பார்த்த பரபரப்புல எனக்கு எதுவுமே நினைவில்லை. பொதுவா பேசிக்கிட்டு இருந்தோம். நான் ரஹ்மான் சார் கூட இருக்கேன்னு அவருக்கு தெரியும். ஆனா என்னோட பேர் இதெல்லாம் அவருக்கு தெரியாது. ‘மின்சாரக் கண்ணா’ பாட்டு நல்லா வந்திருக்கிறதாகவும் அதை ஷூட் பண்றது பத்தி ரஹ்மான் கிட்டே பேச வந்ததாகவும் சொன்னார். பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கிறதால விஷூவலை நல்லா ஷூட் பண்ணியாகவேண்டிய கட்டாயத்துல இருக்கிறதாகவும் சொன்னார். இது தான் எனக்கு ஞாபகமிருக்கு. மத்த விஷயங்கள் எல்லாம் மறந்தே போச்சு.
நாம் : ‘வெற்றிக்கொடிகட்டு’ பாட்டு தயாரான விதம் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…
ஸ்ரீராம் : ஒரு நாள் நான் கம்போசிங் செக்ஷன்ல உட்கார்ந்திருக்கிறேன். நான் கீபோர்ட் வாசிப்பேன். ஃப்ளூட் வாசிப்பேன். ஏதாவது செஞ்சிகிட்டுருப்பேன். அந்த சமயம் ரஹ்மான் என்கிட்டே வந்தாரு. “ஸ்ரீ… திருப்புகழ மாதிரி ஒரு பாட்டு ஒன்னு இருக்கு. அதை நீ தான் பாடனும்” அப்படின்னு சொன்னார். சொன்னவர் சில டியூன்களை எடுத்து கொடுத்தார்.
நான் உடனே எனக்கு புரிஞ்சதை வெச்சு பாட்டை கம்போஸ் பண்ணி காட்டுறேன். கேட்டுகிட்டே இருந்தவர் இது தான். இதைத் தான் நீங்க பாடப்போறீங்கன்னு என்கிட்டே சொன்னார். பொதுவா ஒரு ஸாங் எவ்ளோ நேரம் இருக்கும்? ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும் இல்லையா? ஆனா ஒரு சில ஸாங்ஸ்… பார்த்தீங்கன்னா… 40 நிமிஷம் 50 நிமிஷம் வரைக்கும் போகும்…. அதுல இருந்து சிச்சுவேஷனுக்கு தேவையானதை மட்டும் எடுத்து பாட்டை ரெடி பண்ணுவோம்.
இந்த ஸாங்குக்கு என்னை செலக்ட் பண்ணியிருக்குற விஷயம் முதல்ல எனக்கு தெரியாது. கம்போசிங் நடந்துக்கிட்டுருந்தப்போ… ரஹ்மான் சொன்னார், “கவிஞர் வருவாரு இப்போ. அவர் சிச்சுவேஷனை சொல்வாரு. அதுக்கப்புறம் நீங்க பாடலாம்..”
நான் உடனே நாலஞ்சு MODE ரெடி பண்ணிக்கிட்டுருந்தேன். வைரமுத்து சார் வந்தாரு. அவரை எனக்கு முன்னாடியே தெரியும். வந்தவரு என் கிட்டே… “ஒரு மிகப் பெரிய வெற்றிப் பாடலை நீங்கள் பாடப்போகிறீர்கள் ” அப்படின்னார். (வைரமுத்துவின் குரலில் பேசிக்காட்டுகிறார்.)
(உற்சாகத்தில் நாம் கைகளை தட்டுகிறோம்)
நான் பாடப்பாட அவர் அதுக்கு ஏத்த மாதிரி அந்த லிரிக்ஸை கரெக்ட் பண்ணிக்கிறார். முதல்ல என்ன சொன்னாருன்னா.. லிரிக்ஸ்க்கு ஏத்த மாதிரி ட்யூனை மாத்தலாம்னு சொன்னவர்… நான் பாடின தத்தக்காரனை (தந்தனா.. தந்தனா…) கேட்டுட்டு அதுக்கு ஏத்த மாதிரி பாடல் வரிகளை மாத்திகிட்டுருந்தார். காரணம் அவருக்கு ட்யூன் ரொம்ப பிடிச்சிபோச்சு.
ரஹ்மான் இதெல்லாம் கண்ணை மூடிகிட்டு கேட்டுகிட்டு இருந்தார். நான் பாடுறதும் வைரமுத்து சார் அதுக்கேத்த மாதிரி வரிகளை ஆல்டர் பண்றதும் அப்படின்னு ஒரு 15 நிமிஷம் போச்சு. அப்புறம் சொன்னார்… “எல்லாம் கரெக்டா வந்திருக்கு… இனிமே எந்த சேஞ்சும் தேவையில்லை” அப்படின்னு. தன்னோட உதவியாளர் கிட்டே இன்ஸ்டிரக்ஷன்ஸ் கொடுக்கிறார் கவிஞர்.
எனக்கு வைரமுத்து சாரை பார்க்கும்போதெல்லாம் ஒரு மாதிரி இருக்கும். ஏன்னா.. என் அப்பா அம்மா தமிழ் என்றாலும் நான் பிறந்து வளர்ந்தது கேரளா பார்டர் என்பதால் எனக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது. வைரமுத்து அசிஸ்டென்ட் சொல்ற ஃபைனல் லிரிக்ஸை எப்படி நோட் பண்றதுன்னு தெரியலே… அவருக்கு தெரியாத மாதிரி நான் பேப்பர்ல மலையாளத்துல நோட் பண்றேன். அது ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. அப்புறம் அவரோட அசிஸ்டென்ட் கிட்டே மெதுவா போய் சொல்றேன்… “பேசாம நீங்க இங்க்லீஷ்ல எழுதிகொடுத்திடுங்க.. நான் பார்த்துக்குறேன்” அப்படின்னு.
ஆனா வைரமுத்து சார் இதை கவனிச்சிட்டார். “அப்போ நீ இன்னும் ரெடியாகலை… சரி… நான் உனக்கு சொல்லித் தர்ரேன்”னு சொல்லி அவர் நான் மலையாளத்துல எழுதிக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணார். இன்னைக்கு அந்த பாட்டுல ஒரு ஃபீல் இருக்குன்னா அதுக்கு காரணம்… வைரமுத்து சார் தான். அவர் தான் அந்த பாட்டுக்கு ஃபர்ஸ்ட் கியர் போட்டவர்.
நாம் : வாவ்… அப்புறம் சார்…. இந்த பாட்டு சம்பந்தமா வேற ஏதாவது சுவாரஸ்யமான விஷயம்… வைரம்த்து சார் ஏதாவது சொல்லியிருப்பார்…. அதைப் பத்தி…
ஸ்ரீராம் : அந்த பாட்டுக்கு ரெண்டு சரணம் எழுதினார் வைரமுத்து. ஒரு சரணம் தான் நீங்க கேட்டிருப்பீங்க. அந்த இன்னொரு சரணத்தை நீங்க கேட்டீங்கன்னா கண்கலங்கிடுவீங்க. ஒரு மனுஷனை ஆண்டவன் எந்தளவு சோதிக்கிறான் என்பதை அவ்ளோ அழகா வைரமுத்து சொல்லியிருப்பார். லெங்க்த் ஜாஸ்தியா இருந்ததாலே அதை போடமுடியலே. வேற ஒண்ணுமில்லே.
நாம் : (மிகவும் ஆர்வமாகிவிட்டோம்) சார்… அது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்…
ஸ்ரீராம் : ம்ம்ம்ம்ம்…. (யோசிக்கிறார்) வருஷங்கள் பல ஓடிட்டதால மறந்துடுச்சு. ANYWAY எனக்கு ஞாபகம் வந்தா உங்களுக்கு நிச்சயம் சொல்றேன். எங்கேயாவது எழுதி வெச்சிருக்கேன்னான்னு பாக்குறேன்.
இன்னொரு உயிரை கொன்று புசிப்பது மிருகமடா… அப்படின்னு வருமில்லையா.. அதுக்கு முன்னாடி வரும் அந்த வரிகள். ஒரு மனிதனுக்கு உச்சகட்ட சோதனைகள் எப்படி வரும் என்பதை வைரமுத்து அருமையா விளக்கியிருந்தார்.
நமக்கு எவராவது சோதனை தந்தால், அவரை நாம் ஒன்று செய்ய வேண்டாம். அது அவருக்கே திரும்பி ஒரு வினையாக வரும் என்பது தான் அதன் பொருள். அதாவது BAD THINGS WILL TRY TO ECLIPSE THE GOOD THINGS. BUT IT WILL CHANGE SOON. கிரஹணம் போல தான் நல்லவற்றுக்கு ஏற்படும் சோதனையும். அது சீக்கிரம் விலகிவிடும். என்று பொருள் தரும்படி ஒரு சரணம் அது.
நாம் : அந்த பாட்டு ரஜினி சாருக்காக பாடியிருக்கோம்னு கடைசீல எப்போ தான தெரிஞ்சுது உங்களுக்கு?
ஸ்ரீராம் : அந்த ஸாங்கை நான் பாடி முடிச்சதுமே ரஹ்மான் ஓ.கே. சொல்லிட்டார். அவரைப் பொருத்தவரைக்கும் ஒரு சிங்கரோட ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் இஸ் தி பெஸ்ட் அட்டெம்ப்ட். ஏன்னா பாடுறவங்களோட முழு எஃபர்ட்டும் அதுல தான் இருக்கும் என்பது அவரோட கணிப்பு.
வைரமுத்து சார் கூட டிஸ்கஸ் பண்ணும்போது சிச்சுவேஷனை சொல்லிட்டதால நான் பாடும்போதே அந்த வரிகளிலேயே அந்த காரக்டரோட ஃபீல் தெரிஞ்சுது. அதாவது சொந்தங்களால் துரோகம் இழைக்கப்பட்டு, நிராதரவாக விடப்பட்ட ஒருவனுக்கு தன்னையும் தன்னை நம்பியவர்களையும் முன்னுக்கு கொண்டு வரும் பெரும் பொறுப்பு ஒருவன் தோளில் விழுகிறது.
சிச்சுவேஷனை உள்வாங்கிக்கிட்டு பாடினதால என்னால் ஒன்றிப் போய் பாடமுடிஞ்சது. அப்படி ஒன்றிப் போய் பாடும்போது என்னாகும்னா ஏதாவது ஒரு இடத்துல அது தெரியும். “ஊருக்கே… வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்ன்ன்ன்” (பாடிக்காட்டுகிறார்) “ஊருக்க்க்க்க்கே” அப்படிங்கிற இடத்துல குரல் கொஞ்சம் தழுதழுக்கும். அது நேச்சுரலா இருக்கு. அப்படியே விட்டுடலாம்னு ரஹ்மான் சொல்லிட்டார்.
பாடி முடிச்சவுடனே அப்புறம் கேட்டார்… “இப்போ நீ யாருக்கு பாடியிருக்கே தெரியுமா?” அப்படின்னு. அவர் மியூசிக் பண்றாருன்னா அது எப்பவுமே ஸ்பெஷல் தான். அதுனால் நான் ரொம்ப கேஷூவலா கேட்டேன்….”யாருக்கு சார்….?”
“ரஜினி சாருக்கு பாடியிருகேய்யா…” அப்படின்னு சொன்னவுடனே… “அப்ப்ப்படியா?”ன்னு கேட்டு உட்கார்ந்தவன் தான்…. அதுக்கு பிறகு ஒரு மணிநேரத்துக்கு எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியலே. முன்னுக்கு வரத்துடிக்கும் ஒரு இளம் பாடகனுக்கு இதை விட பெரிய பரிசு ஏதாவது கிடைக்குமா?
நாம் : ரஹ்மான் சார் சொன்னபிறகு தான் உங்களுக்கு ரஜினி சாருக்காக பாடியிருக்கோம் அதுவும் படையப்பா படத்துக்கு என்பதே தெரிஞ்சுது இல்லையா?
ஸ்ரீராம் : ஆமாம்… வைரமுத்துவும் ரஹ்மானும் ஒரே நேரத்துல பல படங்கள் ஒர்க் பண்ணியிருக்காங்க. அதுனால் எனக்கு ‘படையப்பா’ படத்துக்கு தான் பாடியிருக்கோம்கிறது தெரியாது.
ரஜினி சார் அந்த ஸாங்குக்கு நடிச்சவுடனே, விஷூவலா அது வந்தவுடனே அந்த ஸாங் எங்கேயோ போயிடுச்சு. அதுக்கு பிறகு வைரமுத்து சாரை பார்த்து நான் நன்றி சொல்ல போனேன். “இதுல என்ன இருக்கு தம்பி, உன்னோட குரலை கேட்டவுடனேயே, இந்த சாங்கை நீ தான் பாடணும்னு நாங்க முதல்லயே டிஸைட் பண்ணிட்டோம்.”
நாம் : நாங்கன்னு அவர் சொல்றது?
ஸ்ரீராம் : ரஜினி சாரையும் சேர்த்து தான். அவருக்கு வாய்ஸ் சாம்பிள் தனியா போகும். இந்த பாட்டை இன்ன சிங்கர் தான் பாடப்போறாருன்னு. அந்த பாட்டுக்கு நான் பாடினா நல்லாயிருக்கும் அவங்களுக்கு தோணியிருக்கு… ஏன்னா எல்லாருக்கும் எல்லா ஸாங்கும் சூட் ஆகாது. வாய்ஸ் ரேஞ்ச் ஒவ்வொருத்தருக்கும் ஒரு மாதிரி இருக்கும்.
நாம் : அந்த படத்தோட பாடல்கள் அத்தனையும் எப்படி இவ்ளோ ஹிட்டாச்சு… BGR கூட கலக்கலா இருக்கும்….
ஸ்ரீராம் : ரஜினி சாரோட படத்தை பொருத்தவரைக்கும அது மாஸ் கமர்சியல் பிக்ச்சரா இருந்தாலும் நமக்குள்ளே ஒரு வெறி வரும். என்ன வேறென்ன… படத்துல எந்த குறையும் வரக்கூடாதுன்னு எல்லார்கிட்டேயும் ஒரு எக்ஸ்ட்ரா கேர் இருக்கும் அதுல யாருமே காம்ப்ரமைஸ் பண்ண மாட்டாங்க
HEAVY MANUAL RE-RECORDING பண்ணதுல அந்த படம் தான் கடைசி. அதுக்கப்புறம் எல்லாமே கம்ப்யூட்டரைஸ் ஆயிடிச்சு.
நாம் : வீட்டுல நீங்க அந்த பாட்டை பாடியிகிறதை தெரிஞ்சவுடனே என்ன சொன்னாங்க?
ஸ்ரீராம் : நீங்க வேற… ரெக்கார்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது நானே ரஜினின்னு நினைச்சிகிட்டு தான் அன்னைக்கு வண்டி ஓட்டினேன். என் கிட்டே அப்போ இருந்தது புல்லட் தான். நல்லா ஞாபகம் இருக்கு. ரெக்கார்டிங்லாம் முடிச்சு நான் வீட்டுக்கு வரும்போது நைட் 2.30 இருக்கும்.
வீட்டுக்குள்ளே வரும்போதே எனர்ஜிட்டிகாக வர்றேன். நான் பொதுவா ரெக்கார்டிங் முடிச்சுட்டு வந்தா அன்னைக்கு நைட் அதைப் பத்தியெல்லாம் பேசமாட்டேன். மறு நாள் காலையில தான் பேசுவேன். ஆனா இந்த ஸாங்கை பொருத்தவரைக்கும் நான் வீட்டுக்குள்ளே வந்ததுமே… “ஹே…நான் ரஜினி சாருக்கு பாடியிருக்கேன். தெரியுமான்னு கேட்டு அந்த பாட்டை வேற அப்படியே ‘வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு’ன்னு பாடிக்காட்டுறேன். நைட் 2.30 AM மணி அப்போ.
அதுக்கப்புறம் படையப்பா ஸ்ரீராம் அப்படின்னே பேர் வந்துடுச்சு. படத்துல பாட்டு பாடினதுக்காக ஒரு சிங்கருக்கு அந்த படத்தோட பேரும் சேர்ந்து பேரா மாறின அதிசயம் எனக்கு மட்டும் தான் நடந்திருக்கும்னு நினைக்கிறேன்.
நாம் : அந்த படத்துல இந்த வெற்றிக்கொடி கட்டு ஸாங்… நீங்க பாடியிருக்க எப்படி மலேசியா வாசுதேவன் சாரோட பேர் வந்துச்சு?
ஸ்ரீராம்: அது ஒரு பெரிய கதை. ஸாங் ரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்சவுடனே காஸட் ரெடியாச்சு. அது ரெடியாகும்போது என்னாச்சுன்னா… பிரிண்டிங் பண்ணவங்க பண்ணின தப்பால காஸட் அட்டையில என்னோட பேருக்கு பதிலா மலேசியா வாசுதேவன் சாரோட பேர் வந்துடிச்சு.
நாம் : இன்னைக்கு வரைக்கும் நிறைய பேர் அந்த பாட்டை மலேசியா வாசுதேவன் சார் தான் பாடியிருக்கிறதா பலர் நினைச்சிக்கிட்டுருக்காங்க. பாட்டு ரிலீஸ் ஆனப்போ எங்களுக்கு ஒரே குழப்பம். என்னடா இது ‘வெற்றிக்கொடி கட்டு’ பாட்டு மலேசியா வாசுதேவன்னு போட்டிருக்கு. ஆனா அவரோட வாய்ஸ் மாதிரி தெரியலியே… அப்படின்னு… மண்டையை பிச்சிகிட்டோம்….
ஸ்ரீராம் : அது என்ன நடந்ததுன்னா. காஸட் ராப்பர் டிசைன் பண்ண இடத்துல அந்த மிஸ்டேக் ஆகியிருக்கு. யாரும் அதை கவனிக்காமலேயே அது பிரிண்ட் ஆகிடுச்சு. ரஹ்மான் சாருக்கு அது ரொம்ப சங்கடமா போச்சு. ரொம்ப வருத்தப்பட்டார். கவனக் குறைவுக்க்கு காரணமான எல்லாரையும் சத்தம் போட்டார். என்னோட மனநிலையை கேட்டீங்கன்னா அதை விளக்க வார்த்தைகள் இல்லை. மிகப் பெரிய ஹிட் ஆல்பத்துல என்னோட பங்களிப்பு இருந்திருந்தும் என்னோட பேருக்கு பதிலா வேற ஒருத்தர் பேர் வந்திருக்குறதை என்னால் தாங்கிக்கொள்ள முடியலே.
சம்பந்தப்பட்ட பிரிண்டிங் யூனிட்ல இருந்து ஒரு நாலு பேர் ரஹ்மான் சார் கிட்டே அபாலாஜி கேட்குறதுக்கு வந்தாங்க. எப்படியோ தப்பு நடந்துடிச்சு சார். மன்னிச்சுடுங்க. அடுத்த லாட்ல சரி பண்ணிடுறோம்னு சொன்னாங்க. வெளிநாட்டுக்கு போன சி.டி. காஸட்ஸ்ல எல்லாம் என்னோட பேர் இருந்திச்சு என்பது ஒரு ஆறுதல்.
இந்த பாட்டு மூலமா பிரபலமாகி நான் நிறைய லைட் மியூசிக் ஷோஸ் பண்ணினப்போ எல்லாம் இந்த ஒரு இஸ்யூவை சொல்லவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுச்சு. ரஜினி சார் படத்துல அதுவும் ரஹ்மான் சார் ம்யூசிக்ல அதுவும் சின்ன வயசுல (அப்போ இவருக்கு 26 வயது) பாட சான்ஸ் கிடைக்குறதே பெரிய விஷயம். இது ஒரு திருஷ்டி மாடி ஆகிப் போச்சேன்னு எனக்கு ஒரு வருத்தம் அவ்ளோ தான்.
நாம் : கவலைப்படாதீங்க சார்… இதோ நம்ம வெப்சைட் மூலமா இன்னைக்கு உலகம் பூராவும் இருக்குற ரசிகர்களுக்கு இந்த விஷயம் போய் சேர்ந்துடும். இது தான் ஆண்டவன் சித்தம் போல.
நாம் : சரி… மலேசியா வாசுதேவன் சார் இதுக்கு என்ன சொன்னார்?
ஸ்ரீராம் : மலேசியா வாசுதேவன் சார் எனக்கு ரொம்ப க்ளோஸ். அவர் கூட நிறைய ப்ரோக்ராம்ஸ் பண்ணியிருக்கேன். நானே ஒவ்வொரு கச்சேரியிலயும் இதை சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் ஸ்ரீராம். “அந்த பாட்டை நான் பாடலை. ஸ்ரீராம் தம்பி தான் பாடியிருக்கார். தவறுதலா என்னோட பேர் வந்துடிச்சு”ன்னு அப்படின்னார் என்கிட்டே. “உங்க பேரை தானே சார் போட்டிருக்காங்க.. பரவாயில்லே சார்” அப்படின்னு நான் சொன்னேன்… அவர் எவ்ளோ பாட்டு பாடியிருப்பார் ரஜினி சாருக்கு…. எவ்ளோ பெரிய சிங்கர்!
என்னை பொருத்தவரைக்கும் என்னோட ஒரே வருத்தம் என்னன்னா… அந்த சமயத்துல நிறைய பேருக்கு அந்த பாட்டை நான் தான் பாடினேன் என்பதே ரீச் ஆகாம போய்டுச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வெளியே தெரிய ஆரம்பிச்சது. பி.எச்.அப்துல் ஹமீது சார் மாதிரி நிறைய காம்பியர்ஸ் இதுல எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க.
படையப்பாவை பொருத்தவரைக்கும் இந்த ஒரு விஷயம் தான் என்னை பாதிச்சது.. (படையப்பாவின் ஷீல்டை காட்டி..) மற்றது எல்லாமே அந்த ஸாங்ல வந்த மாதிரியே ஓரளவு முட்டி மோதி மேல வந்துக்கிட்டுருக்கேன்.
நாம் : ‘வெற்றிக் கொடிகட்டு’ பாடல் பத்தி ரஜினி சார் என்ன சொன்னார்?
ஸ்ரீராம் : அந்த பாட்டை பாடப்போறது நான் தான்னு அந்த முதல் சந்திப்பப்போ அவருக்கு தெரியாது. அதுக்கு பிறகு தான் ஒரு நாள் அவருக்கு தெரிஞ்சுது. “இந்த பாட்டு இந்த படத்துக்கு மட்டுமில்லே. நல்ல மனதுடன் நல்ல எண்ணங்களுடன் வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணும் எல்லா இளைஞர்களுக்கும் எந்தக் காலத்திலும் பொருந்தக்கூடிய பாட்டு. நடிக்கும் எனக்கு எந்தளவு பெயர் கொடுக்குமோ அதை விட அதிகளவு பேர் பாட்டை பாடிய உங்களுக்கு கொடுக்கும்” அப்படின்னு சொன்னார். அவரை பொறுத்தவரை அவர் ஆயிரம் பாடல்களை பாத்திருப்பார். ஆனா அவர் மனசுக்கு பிடிச்சது என்று பார்க்கும்போது இது போல சில பாடல்கள் தான் வரும்.
“இந்த பாட்டு இந்த படத்துக்கு மட்டுமில்லே. நல்ல மனதுடன் நல்ல எண்ணங்களுடன் வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணும் எல்லா இளைஞர்களுக்கும் எந்தக் காலத்திலும் பொருந்தக்கூடிய பாட்டு. நடிக்கும் எனக்கு எந்தளவு பெயர் கொடுக்குமோ அதை விட அதிகளவு பேர் பாட்டை பாடிய உங்களுக்கு கொடுக்கும்” அப்படின்னு சொன்னார்.
நாம் : அந்த ஷீல்டை வாங்கின அனுபவத்தை சொல்லுங்களேன்….
ஸ்ரீராம் : அதை ஏன் சார் கேக்குறீங்க? என்ன கூட்டம்.. என்ன கூட்டம் அங்கே… ராகவேந்திரா மண்டபத்துல தான் நடந்துதுன்னு நினைக்கிறேன்…
(நாம் ஆமாம் என்பது போல தலையாட்டுகிறோம்)
ஒரு படத்தோட ஷீல்டை வாங்கப் போறது மாதிரி இல்லாம ஏதோ ஒரு கோவில் பிரசாதம் வாங்கப் போற மாதிரி தான் நாங்க அங்கே மேடைக்கு போனோம். அந்தளவு அங்கே ஒரு கோவில் திருவிழா போல கூட்டம்.
நாம் : ரஜினி சார் பத்தி …
ஸ்ரீராம் : ரஜினி சாரை பொருத்தவரைக்கும் பல சமயங்களில் அவர் என் மனசாட்சி போல செயல்பட்டிருக்கிறார். நீங்கள ஒரு ரசிகராக எந்தளவு அவரை உங்கள் நெருக்கமானவராக ரிலேட் செய்கிறீர்களே அதே அளவு அவரை நான் என் மனசாட்சியுடன் ரிலேட் செய்கிறேன். அவர் கிட்டே எந்த ஒளிவு மறைவும் இல்லே என்பதும் அவர் நம்ம குடும்பத்துல ஒருத்தர் என்பதும் மிகப் பெரிய உணர்வு. எல்லார் போலவும் நானும் அவரோட மிகப் பெரிய ஃபேன். இன்னைக்கும் மனசு ஏதாவது சஞ்சலப்பட்டா ரஜினி சாரோட படம் எதையாவது போட்டு பார்ப்பேன். மனம் லேசாயிடும். அடுத்த நாள் ஏதாவது ஒரு முக்கியமான வேலைக்கு போகணும்னா, முந்தின நாள் நைட் அவரோட படத்தை பார்த்துட்டு போனா… கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். போற வேலையும் சக்சஸ் ஆயிடும்.
நாம் : அந்த மாதிரி சிச்சுவேஷன்ல என்ன படங்கள் பார்ப்பீங்க.. ?
ஸ்ரீராம் : அது ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ அப்புறம் அவரோட ஆல் டைம் க்ளாசிக்ஸ் என்னோட மோஸ்ட் பேவரைட். உதாரணத்துக்கு ‘அவள் அப்படித் தான்’, ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ இப்படி.
நாம் : ரஜினி சாரோட ஆக்டிங் ஸ்கில்ஸ் பத்தி?
ஸ்ரீராம் : அவர் படத்துல ஏதாவது ஒரு காரக்டர் கொஞ்சம் டவுனா இருந்தாக்கூட இவர் அதை தூக்கி நிறுத்துற மாதிரி ஏதாவது வெயிட்டேஜ் கொடுத்துடுவார். காமெடி ஆக்ஷன் ரெண்டையும் அழகா பாலன்ஸ் பண்ணி நடிப்பார். அவரோட ஆக்டிங் ஸ்கில்ஸ் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஹீரோஸ்லாம் காமெடி எப்படி பண்றதுன்னு இவர் கிட்டேயிருந்து கத்துக்கலாம். அந்தளவு காமெடியில தூள் கிளப்பிடுவார். ஒரு ஆக்ஷன் ஹீரோ காமெடியில ஷைன் பண்றது என்பது சாதாரண விஷயம் அல்ல.
அப்புறம் ரஜினி சாருக்கு இருக்குற அடக்கம் சான்சே இல்லே. தன்னை தானே பெருமை பேசிக்கொண்டு அவர் கொடுப்பதில்லை. நாம் இப்போ சிலரோட இண்டர்வ்யூஸை பாக்கிறோம் அதை மட்டும் படமா எடுத்து ரிலீஸ் பண்ணா… நல்ல காமெடி படம் கணக்கா சூப்பரா ஓடும்.
நாம் : SELF-BOASTING ?
ஸ்ரீராம் : அது கூட இல்லே… பொய்… முகத்தை பார்த்தாலே தெரியும் சொல்ற பொய்… பேச வந்ததை விட்டு மத்த விஷயம் எல்லா பேசுவாங்க.. அவங்க பேசுறதை கேக்குறதே காமெடி ஷோ பாக்குற மாதிரி இருக்கும். அதையே ஒரு காமெடி படம் மாதிரி ரிலீஸ் பண்ணலாம். நல்ல போகும். (சிரிக்கிறார்.)
அப்புறம் அவரோட பன்ச் டயலாக்சை சிலர் இமிடேட் பண்ணி தங்கள் படங்கள்ல பேசும்போது சிரிப்பா வருது. சிங்க நடை, யானை நடை அப்படின்னு ஏன் சொல்றோம்? அதுல ஒரு கம்பீரம் இருக்கு. பிரமிப்பு இருக்கு. கோழி கூடத் தான் நடக்குது ஏன் கோழி நடைன்னு யாரும் சொல்றதில்லே…? அது போலத் தான் இதுவும். ரஜினி சார் பேசினாத் தான் பன்ச்.
அப்புறம் நிறைய நடிகர்கள் மத்தவங்களை இமிடேட் பண்ணி பேர் வாங்க ஆசைப்படுறாங்க. அது தவறு. அவரவர் தொழிலை அவங்களே DEGRADE செய்யக்கூடாது. வெளியே பாக்குறவன் ஒரு சாடிஸ்ட் வேணும்னா அதை ரசிக்கலாம்…. ஆனா நாம நம்மோட தொழிலுக்கு மரியாதை கொடுக்கணும். We should give respect to the main source. இந்த மாதிரி இமிடேட் பண்றது அவங்களுக்கே ஒரு கட்டத்துல பேக் ஃபயர் ஆகிடும். கடவுள் நமக்கு கொடுத்த நம்மோட திறமையை நாம இப்படி செஞ்சி வீணடிக்கக்கூடாது.
ரஜினி சாரை எடுத்துக்கோங்க அவர் எப்போவாவது இந்த மாதிரி பண்ணியிருக்கிறாரா? மத்தவங்களை கிண்டலடிச்சு பார்த்திருக்கீங்களா?
ஒரு விஷயம் நீங்க சீரியசான விஷயத்தை புரிஞ்சக்கணும். அவர் ஒரு மிகப் பெரிய செலப்ரிட்டி. நாம அன்றாடம் செய்யக்கூடிய அத்தனை வேலையும் அவரும் செய்றாரு. காலைல எழுந்து பல் தேய்க்கணும்… குளிக்கணும்…. சாப்பிடனும்… அவருக்கும் தூக்கம் வேண்டும். அவருக்கும் ஒரு ரெஸ்ட் வேணும். இதுக்கு நடுவுலே சில பேர் நுழைஞ்சி GOAL அடிக்க முடியுமான்னு பார்க்குறாங்க… அவர் வாயில இருந்து ஏதாவது வராதா? அதை வெச்சு வம்புக்கு இழுக்க முடியுமான்னு பாக்குறாங்க. AFTER ALL அவரும் ஒரு HUMAN BEING தானே? SOMETIMES அவரோட TONGUE SLIP ஆகலாம். ஆனா அவர் ரொம்ப விவரமானவர். அனாவசியமா ஒரு வார்த்தை பேசறது கிடையாது. தானுண்டு தன்னுடைய வேலை உண்டு அப்படின்னு இருப்பவர்.
இசைத்துறையில் நாங்க இருக்குறதாலே எத்தனையோ பேரை பார்த்ததுண்டு. சிலரை பார்க்கப் போகும்போது அவங்க உள்ளே ரெடியாகிட்டு இருப்பாங்க. அதுக்கே நாங்க நிறைய நேரம் காத்திருந்த சந்தர்ப்பங்கள் உண்டு. ஏன்னா மேக்கப்போட தான் வெளியே வருவாங்க. மேக்கப் இல்லேன்னா அவங்க கூட இருக்குறவங்களுக்கு அடையாளம் தெரியாது. தன்னோட தோற்றத்துக்காக மத்தவங்களை மட்டம் தட்டுற ஹீரோஸ்… தன்னைவிட உயரமா ஷாட்டுல வேற யாரும் வராத மாதிர் பார்த்துக்குற ஹீரோஸ்ல்லாம் நாங்க பார்த்திருக்கோம். படத்துல் தன முகம் நல்லா யூத்புல்லா தெரியனும்கிறதுக்காக காமிராமேனை டார்ச்சர் பண்ற ஹீரோஸ்ல்லாம் இங்கே உண்டு. இந்த மாதிரி சூழ்நிலையில ஒரு சூப்பர் ஸ்டாரா இருக்குறவரு தன்னோட அப்பீயரன்ஸ் பற்றி எந்தக் கவலையும் படாம சர்வசாதரணமா எந்த ஸ்பெஷல் மேக்கப்பும் இல்லாம் இயல்பா வெளியே வர்ற துணிச்சல் யாருக்கு வரும்? அவரை பார்த்து நிறைய நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம். நம்மோட ரோல் மாடல் அவர். அவரைப் போன்ற ஒருவர் நமக்கு ரோல் மாடலா கிடைச்சது நம்மோட அதிர்ஷ்டம் என்று தான் நான் சொல்வேன்.
ரசிகர்கள் எல்லாம் அவரோட ஸ்டைலை இமிடேட் பண்ணாம அவரோட காரக்டரை இமிடேட் பண்ணீங்கன்னா… அது தான் நீங்க அவருக்கு தர்ற உண்மையான மரியாதை…
நாம் : உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா? அது பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
ஸ்ரீராம் : நிச்சயமா.. கடவுள் என்பவர் நமக்குள்ளே புகுந்ததால் தான நாம் இப்படியெல்லாம் செய்ய முடிகிறது கடவுளுக்கு நான் எப்படி நன்றி சொல்லனும்னா என் வேலையை நான் ஒழுங்கா நியாயமான வழியில செய்யனும். அது தான் கடவுளுக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றி. மத்தபடி கடவுள் கிட்டே நான் எதுவும் கேட்கமாட்டேன்.
கடவுள் நம்மையெல்லாம் ஒரு FREELANCER போல படைத்திருக்கிறார். நாம நினைக்கிறதை சுதந்திரமாக செய்யும் வண்ணம். அவனுக்கு பிடித்ததை நாம் செஞ்சோம் என்றால் நமக்கு அவன் அருள் எப்போதும் கிடைக்கும். அதாவது நம்மை மீறிய சக்தி ஒன்று நம்மை படைத்துவிட்டு முழு சுதந்திரத்தோடு விட்டிருக்கிறது. அந்த சுதந்திரத்தை நாம் மிஸ்யூஸ் செய்யக் கூடாது. நாம் செய்யும் செயல்களை பொறுத்தே அவர் நமக்கு எதாவது செய்யமுடியும்.
கடவுள் நம்மையெல்லாம் ஒரு FREELANCER போல படைத்திருக்கிறார். நாம நினைக்கிறதை சுதந்திரமாக செய்யும் வண்ணம். அவனுக்கு பிடித்ததை நாம் செஞ்சோம் என்றால் நமக்கு அவன் அருள் எப்போதும் கிடைக்கும்.
ஒரு திடீர் புகழ், அதற்கு பிறகு பார்ட்டி, கச்சேரி, ஆர்கெஸ்ட்ரா, மற்றும் கொண்டாட்டங்கள் என எல்லாத்தையும் பார்த்தவன் நான். இப்போ ஓரளவு நல்லா தெளிஞ்சி ஒரு நீரோடை போல இருக்கிறேன்.
நாம் : ரசிகர்களுக்கு எங்கள் தள வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ஸ்ரீராம் : வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா.. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா…. வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு… லட்சியம் எட்டும் வரை எட்டு…
(நாங்கள் கேட்க நினைத்தோம்…. ஆனால் அவராகவே முழு பாடலையும் பாடிக் காட்டினார்…)
ஸ்ரீராம் குடும்பத்தினருக்கு ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நூலை பரிசளித்தோம். சந்திப்புக்காக நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறி தான் வெளியே வந்தோம்.
——————————————————————————————————-
தீமை அகன்று நன்மை வெற்றி பெறுவதை குறிக்கும் இந்த விஜயதசமி திருநாளில் நம் தள வாசகர்கள் மற்றும் சூப்பர் ஸ்டாரின் அன்பு ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் திருவருள் துணையுடன் இனிதே வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
நன்றி! நன்றி!! நன்றி!!
——————————————————————————————————-
[END]
Today கம்பன் விழா going to be telecast in MEGA tv at 6 30
thalaiva !!!! சூப்பர் ப்ளாக் . தலைவர பத்தி இன்னும் நெறைய சொல்லுங்க.
Great, ivar namala vida peria fan
Great Tonic interview for an energetic Song..
Thank you SUNDARJI..
சூப்பர் சாங்!! நல்ல செய்தி திரு. சுந்தர்!
சூப்பர் போஸ்ட் ஜி…….இவரோட ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு positive vibes கொடுக்குது………சாதித்தவர்கள் வார்த்தைகளுக்கு எப்போதுமே வலிமை அதிகம்………
//அடுத்த நாள் ஏதாவது ஒரு முக்கியமான வேலைக்கு போகணும்னா, முந்தின நாள் நைட் அவரோட படத்தை பார்த்துட்டு போனா… கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். போற வேலையும் சக்சஸ் ஆயிடும்//
ரொம்ப ரொம்ப உண்மை ஜி……..நானும் எப்போவுமே இப்பிடி தான், அடுத்த நாள் எதாவது முக்கியமான ஒரு நாள் என்றால், தலைவர் படத்த பாத்துட்டு தான் போவேன், அது கண்டிப்பா சக்சஸ் தான்……அதுவும் ‘சந்திரமுகி’ படம் தான் பாப்பேன்…….இதுவரைக்கும் நான் கலந்துகிட்ட எல்லா interview முன்னாடி நாள் இந்த படம் பாத்துட்டு போயி அடுத்த நாள் செலக்ட் உம் ஆனேன்…….
Really good interview…. positive words and gives satisfaction…
சுந்தர் செம போஸ்ட்.
நான் கூட முதலில் வாசுதேவன் அவர்கள் தான் பாடினார் என்று நினைத்தேன்.. குரல் வேறு மாதிரி இருந்ததால் ஒருவேளை ரகுமான் மாற்றி பாட வைத்து இருப்பாரோ என்று நினைத்தேன்.
ஸ்ரீராம் தன்னுடைய பெயர் வர வேண்டிய இடத்தில் இன்னொருவர் பெயர் வந்தவுடன் அடைந்து இருக்கும் மனவருத்தம் நிச்சயம் உணர்ந்து கொள்ளக்கூடியது. சாதாரண நடிகர் பாடல் என்றால் கூட கொஞ்சம் மனதை தேற்றலாம் ஆனால், இது மிக மிக கொடுமையான ஒன்று. இன்னொன்று பாட்டு செம ஹிட். இவர் எதிர்பார்த்த மாதிரி, தான் பாடிய படம் நன்றாக செல்ல வேண்டும் என்ற இயல்பான எதிபார்ப்பு நடந்தவுடன் அதில் நம் பெயர் இல்லையே (உழைத்தும்) என்று மிக வருத்தமாக இருக்கும். உணர முடிகிறது. என்னதான் மேடையில் இதை ஒவ்வொரு முறை விளக்கினாலும் எத்தனை பேர் இது பற்றி தெரிந்து கொள்ளப்போகிறார்கள்.
இதை நீங்கள், ஸ்ரீராம் தலைவரிடம் கூறினாரா என்று கேட்டீர்களா? தலைவரிடம் கூறி இருந்தால் தலைவர் எப்படி ரியேக்ட் செய்து இருப்பார் என்று கற்பனை செய்ய முடிகிறது
. வெள்ளிவிழா மேடையில் கூட கூறி இருந்து இருப்பார்.
என்னுடைய Blog லும் ஸ்ரீராம் பாடிய இந்தப் பாடல் பற்றி நிச்சயம் குறிப்பிடுகிறேன். நியாயமான புகழ் ஒருவருக்கு கிடைக்காமல் போவது / அறியப்படாமல் போவது ஒரு கொடுமையான நிகழ்வு. இந்த விசயத்தில் நீங்கள் ஸ்ரீராம் க்கு பேருதவி செய்து இருக்கிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
கூற மறந்துட்டேன்.. ஸ்ரீராம் கூறிய சில விசயங்களை படித்த போது உடல் சிலிர்த்து விட்டது.
————————————————————
நன்றி கிரி!
ஸ்ரீராம் அவர்கள் சூப்பர் ஸ்டார் மீது தனக்கிருக்கும் அபிமானத்தை மிக மிக பாசிட்டிவான முறையில் திருப்பி அதன் மூலம்
பயன்பெறுகிறார். அந்த வகையில் ரசிகர்ள் அவரிடம் கற்றுகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.
அவர் எங்கள் முன் அந்தப் பாடலை ஹை-பிச்சில் பாடியபோது எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்…? நினைத்துப்பாருங்கள்! மறக்க முடியாத ஒரு அனுபவம் அது!!
- சுந்தர்
Sir, I will be waiting for english translation.
வழக்கம்போல் சூப்பர் ,மறக்க கூடிய பாட்டா இது ………
ஸ்ரீராம் நம் தலைவரைப்பற்றி மிகவும் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார். நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் - இப்போது ஸ்ரீராம் தெளிந்த நீரோடை போல இருக்கிறார். இந்த தெளிந்த நிலை எல்லோருடைய வாழ்க்கையிலும் வரக்கூடியது. ஸ்ரீராம் நமக்கு சொல்லியிருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் - “ரசிகர்கள் எல்லாம் அவரோட ஸ்டைலை இமிடேட் பண்ணாம அவரோட காரக்டரை இமிடேட் பண்ணீங்கன்னா… அது தான் நீங்க அவருக்கு தர்ற உண்மையான மரியாதை”. இதைத்தான் சுந்தரும் அடிக்கடி நமக்கு சொல்லிவருகிறார். இந்த பேட்டி தலைவர் படம் பார்ப்பதை போல் இருந்தது. நன்றி!
பஞ்ச் இன்னா தலைவர் பேசினாதான் . சூப்பரா சொன்னீங்க ஸ்ரீராம்
மிக அருமையான பதிவு ,சொல்ல வந்ததை சும்மா அருமையாக சொல்லிவிட்டார் திரு ஸ்ரீராம் அவர்கள்.அவர் பெயர் மாறியது யாராக இருந்தாலும் வருத்த படத்தான் செய்வார்கள் ,விடுங்க சார் நிறைய பேருக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரியா ஆரம்பிச்சாச்சு ,இந்த பதிவு வந்தவுடன் இன்னும் நிறைய பேருக்கு தெரிந்துவிடும் ,உண்மையான உழைப்பிற்கு என்றுமே நல்ல பலன் கிடைக்கும்
இந்த பாடல் பாடி முடித்த பின்பு தான் இது ரஜினி சார் பாடல், படையப்பா படத்துக்காக பாடியது என்று பாடகருகே தெரிய வந்தது.
//ஆனால் பாடலிலேயே “படை எடு படையப்பா” என்று அடிக்கடி வருகின்றதே , அப்போது கூட இந்த பாட்டு படையப்பா படத்துக்காக தான் பாடுகின்றோம் என்று ஊகிக்க முடியவில்லையா என்ன //
———————————————————-
Good question.
ஒரு படத்திற்கு பாடல் பதிவு எல்லாம் ஷூட்டிங் போவதற்கு முன்னரே நடந்து முடிந்துவிடும். பாடல்கள் எல்லாம் தயாரான பிறகு தான் ஷூட்டிங்கே கிளம்புவார்கள். ‘படையப்பா’ என்ற பெயரை பகிரங்கமாக அறிவிப்பதற்கு முன்னரே இந்த கம்போஸிங் நடைபெற்றது. படையப்பா என்ற பெயர் அப்போது பரிசீலனை என்ற நிலையில் இருந்ததே தவிர, இறுதி செய்யப்படவில்லை. எனவே அந்தப் பெயர் ஸ்ரீராம் அவர்களுக்கு அந்த நிலையில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
- சுந்தர்
Sundar sir,
Good interview me too saw the audio cover & Thought that Malaysia Vasudevan sir has sung it & AR Rahman had recorded it in different way
Thanks for correcting me
Is Suresh Krishna doing Thalaivar’s next movie read it in a website
Pl clarify
———————————————
Actually he is going to direct Mahabaratha for a tv channel. When reporters asked him about this he said that he is committed to direct anything whether cinema or tv. He added that even if Superstar’s film comes on his way he said that he would grab it. That’s it.
- Sundar
“வெற்றிக்கொடிகட்டு” காலத்தால் அழியாத கானம் மட்டுமல்ல… கவலை நோயை விரட்டிடும் கசாயமும் கூட …
வெற்றி கொடி கட்டு… மறக்க முடியாத அருமையான வரிகளும் ஆர்பரிக்கும் குரலும்… இவரைப்பற்றி தெளிவாக தெரியவைததர்க்கு நன்றி ணா..
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
மேலும் ஒரு மறக்க முடியாத அனுபவம்
வாழ்கையில் முதன் முதலில் ஒரு கலைத்துறை அதாவது ஒரு பாடகரின் வீட்டில் சென்று வந்தது மறக்க முடியாது
வீட்டின் வாசல் முதல் வரவேற்பறை என்று எங்கும் கலைநயம் மிக்க வீடு
இவர்தான் வெற்றிக்கொடிகட்டு பாடல் பாடியவர் என்றதும் ஒரு கோடி வாட்ஸ் energy ஏறியது உடலில். (சுந்தர் இது போன்று பேட்டிக்கு அழைத்துச் செல்லும்போது சஸ்பெஸ்சாகத்தான் அழைத்து செல்வார். யாரை சந்திக்கப் போகிறோம் என்று பெரும்பாலும் சொல்லமாட்டார்.)
அவரது குரல் அதுவும் வைரமுத்து அவர்களின் குரலில் “ஒரு வரலாற்றில் இடம் பிடிக்க போகும் வெற்றி பாடலை பாட போகிறீர்கள்” என்று கேட்ட பொது இடமே அதிர்ந்த உணர்வு ….
எல்லாவற்றிகும் மேலாக அந்த பிழை அதை இவர்கள் கையாண்ட விதம்
நம்மை போல அற்ப விசயத்திற்கு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காமல் நாகரிகாமாக அமைதியாக எதிர்கொண்டது நமகெல்லாம் ஏமாற்றத்தை எதிர்கொள்ள கற்றுகொடுத்து உள்ளது.
இனி பாட்டை கேட்கும் பொது எல்லாம் தலைவர் மட்டும் இன்றி இவரும் இவரது நற்குணமும் நினைவில் எழும்
===
அப்புறம் அவரோட பன்ச் டயலாக்சை சிலர் இமிடேட் பண்ணி தங்கள் படங்கள்ல பேசும்போது சிரிப்பா வருது. சிங்க நடை, யானை நடை அப்படின்னு ஏன் சொல்றோம்? அதுல ஒரு கம்பீரம் இருக்கு. பிரமிப்பு இருக்கு. கோழி கூடத் தான் நடக்குது ஏன் கோழி நடைன்னு யாரும் சொல்றதில்லே…? அது போலத் தான் இதுவும். ரஜினி சார் பேசினாத் தான் பன்ச்.
*******
நெத்தி அடி
//ரசிகர்கள் எல்லாம் அவரோட ஸ்டைலை இமிடேட் பண்ணாம அவரோட காரக்டரை இமிடேட் பண்ணீங்கன்னா… அது தான் நீங்க அவருக்கு தர்ற உண்மையான மரியாதை…//
மிகவும் சரி.. நாம் தலைவருடைய கேரக்டர்ஐ தான் இமிட்டே செய்ய முயற்சி செய்கிறோம்..
ஸ்ரீராம் பேட்டி முழுவதுமே நாங்கள் கூட இருந்து பேட்டி எடுத்ததை போன்ற ஒரு உணர்வை கொண்டு வந்துள்ளீர்கள், நன்றி சுந்தர்..
//சிங்க நடை, யானை நடை அப்படின்னு ஏன் சொல்றோம்? அதுல ஒரு கம்பீரம் இருக்கு. பிரமிப்பு இருக்கு. கோழி கூடத் தான் நடக்குது ஏன் கோழி நடைன்னு யாரும் சொல்றதில்லே…? அது போலத் தான் இதுவும். ரஜினி சார் பேசினாத் தான் பன்ச்.//
இதுக்கு மேல நாம என்ன சொல்ல! செம பஞ்ச்..
சியர்ஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
அருமையான சந்திப்பு !!!
படையப்பா ஸ்ரீராம் மென்மேலும் அவரது துறையில் வெற்றி பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம் !!!
இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் புதியதாய் பிறந்த ஒரு துடிப்பும் உத்வேகமும் பெற்று தமது கடமையை செவ்வனே ஆட்ருவார்கள் என்பதில் ஐயமில்லை !!!
தலைவரைப்பற்றிய படையப்பா ஸ்ரீராம் அவர்களின் கணிப்பு 100 % உண்மை !!!
அவரது ரசிப்புத்தன்மையும் தலைவரை கூர்ந்து கவனித்த பாங்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது !!!
இத்தகைய இனிய அனுபவத்தை நமக்கு விருந்தாக்கிய சுந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி !!!
உங்கள் பதிவை படிக்கிறபோது நான் உங்களுடன் இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.
திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு மிக்க நன்றி, மற்றவர்களை தோலுரித்து காட்டியதற்காக. நீங்கள் தலைவரை உங்களுடைய மனசாட்சி என்று கூறி எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.